Published:Updated:

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

Published:Updated:

முதியோர் சிறப்பிதழ்!
சூப்பர் டிப்ஸ்
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தள்ளாட்டமே போ...போ... துள்ளாட்டமே வா... வா..!

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

முதுமை... முற்றுப்புள்ளிக்கு முந்தைய எழுத்து! தோல் சுருங்கி, கண்கள் இடுங்கி, குரல் தளர்ந்து, கூன் சுமந்து என உடலும் மனமும் முதிர்ந்த நிலை அது. இந்த அந்திமக் காலத்தில் உடல் நோய்கள் அலைக்கழிக்கலாம்... வீட்டில், உறவுகளிடத்தில் முக்கியத்துவம் உதிர்ந்து போகலாம். உலகத்தின் மீதான உங்களின் பிடிப்பு தளர்ந்து போகலாம். ஆனால், நாம் மனது வைத்தால்... அதையெல்லாம் தூர விரட்டிவிட்டு துள்ளலுடன் எப்போதுமே வரலாம்... வரலாம்... வரலாம்..! ஆம்... அதற்கான பாஸிட்டிவ் வழிகளை அடுக்குகிறது இந்தப் புத்தகம்!

இன்றைய முதியவர்கள் மட்டுமல்ல... நாளைய முதியவர்களும் இந்த டிப்ஸ்களை முழுமையாகப் படியுங்கள்... முதுமையைக் கொண்டாடுங்கள்/கொண்டாடத் தயாராகுங்கள்!

ஹேப்பி ஓல்ட் ஏஜ்!

என்றும் இளமையாக இருங்கள்!

உடல் தளர்ந்தாலும்... உள்ளத்தளவில் எப்போதும் உற்சாகமாக இருக்கும் தாத்தா-பாட்டிகள்தான்... பேரன், பேத்திகள் முதல், ஃப்ளாட்வாசிகள் வரை அனைவருக்கும் ஃபேவரிட்! அப்படி ஒரு தாத்தா -பாட்டியாக நீங்கள் இருக்க, உங்கள் உடல், உள்ளம் இரண்டும் உற்சாக ஊற்றாக இருக்க...

1. 'ஸ்... அப்பப்பா... வயசாகிப் போச்சு' என்று உட்கார்ந்த இடத்தில் அப்படியே உட் கார்ந்திருந்தால் மன மும் 'மக்கர்' செய்யும். எனவே, மனதளவில் கொஞ்சம் சோர்வாகத் தோன்றினாலும் இருக்கும் இடத்தைவிட்டு எழுந்து காலாற நடந்து பாருங்கள்... சூரிய ஒளியும், புதுக்காற்றும் புது தெம்பைத் தந்து... டல்லான 'மூடை'யும் துள்ள வைக்கும் என்கிறது ஆராய்ச்சி. ஸோ, ஈஸியாக போய் வாருங்கள் ஒரு வாக்!

2. எந்தத் தோழி, தோழரைப் பார்த்து மனம் விட்டுப் பேசினால், உள்ளம் உற்சாகம் அடையும் என்று நம்புகிறீர்களோ... உடனே அவர்களைச் சந்தியுங்கள். அப்போது உங்களின் இளமைக்கால 'குஷி'யான 'ஃப்ளாஷ்பேக்'கை மட்டும் ஓட்டுங்கள்.

3. போரடிக்கிறது என்று தோன்றினால்... பேரன்/பேத்திக்கு கஷ்டமாக இருக்கும் கணக்கை நீங்கள் வாங்கிப் போட்டுப் பாருங்கள். அவர்களுக்குப் புரியாத கணக்குக்கு நீங்கள் 'ஆன்ஸர்' தந்துவிட்டால்... நீங்கள்தான் அந்த நிமிடத்தில் அவர்களுடைய ஹீரோ/ஹீரோயின்.

4. மனதை அமைதியாக்கும் சக்தி, இசைக்கு உண்டு என்பதை உணர்ந்தவர்கள்தானே நீங்கள்! உங்களுக்குப் பிடித்த பிளாக் அண்ட் வொயிட் மெலடிகளை, எம்.ஜி.ஆர். ஹிட்ஸ், சிவாஜி ஹிட்ஸ், கண்ணதாசன் ஹிட்ஸ், டி.எம்.எஸ். ஹிட்ஸ் கேசட், சி.டி-க்களை சேகரித்து போட்டுக் கேட்டுப் பாருங்கள். அது தரும் எனர்ஜி, ஆயிரம் சத்தான பானங்களுக்குச் சமம்.

5. 'மகன், மருமகள் ஆபீஸ்... பேரன், பேத்திகள் ஸ்கூல்னு வீடே காலியாயிருச்சு. தனியாளா எத்தனை தடவைதான் வீட்டைச் சுத்தி சுத்தி வர்றது' என்று அலுப்பாக உணரும் சமயங்களில், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ உங்கள் வீட்டு நபர்களுக்கோ ஒரு சிறு உதவியை செய்து பாருங்கள். 'வேலைக்கு போறியேடா... என்கிட்ட கொடு... பால், கரன்ட் பில் கட்டிட்டு வரேன்' என்று தானாகக் கேட்டுச் செய்து பாருங்கள். அதில் கிடைக்கும் சந்தோஷத்தின் மகிமையை பார்த்து அதிசயப்படுவீர்கள். 'Do good; feel good.'

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

சுற்றி இருப்பவர்களைச் சந்தோஷப்படுத்துங்கள்!

'பெருசு அப்படித்தான்பா... எதுக்கெடுத்தாலும் கத்திக்கிட்டே இருக்கும்...' என்று பட்டம் வாங்கிக்கொள்வது இங்கு பல சீனியர் சிட்டிஸன்களுக்கு பழக்க மாகிவிட்டது. வயது ஏறினால் உங்கள் கண்டிப்பும் ஏற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. கனி, நாளாக ஆக கனியுமே தவிர, இறுகாது. நீங்களும் கனியுங்கள்! உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு தித்திப்பு தாருங்கள். அதற்கு...

6. காலையில் எழுந்தவுடன் வீட்டில் உள்ளவர்களிடம் 'இது சரியில்ல, அவன் ஒழுங்கில்ல...' என்றெல்லாம் நெகட்டிவாக ஆரம்பிக்காமல், 'டிபன் சூப்பர்மா... பேரனோட டி-ஷர்ட் ரொம்ப ஸ்மார்ட்' என்று பாஸிட்டிவ் வார்த்தைகளை உதிர்த்துப் பாருங்கள். உங்களைச் சுற்றி சந்தோஷ நந்தவனம் மலரும்... வளரும்.

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

7. வீட்டில் இருப்பவர்களுடன் ஏதாவது காரணத்தால் மனத்தாங்கல் ஏற்பட்டால், 'அவன நான் எப்படியெல்லாம் வளர்த்திருப்பேன்... எவ்வளவு செஞ்சிருப்பேன்...' என்று எமோஷனலாகி, பின் கடுமையான வார்த்தைகளால் அவர்களைக் குற்றம் சுமத்தாதீர்கள். மனத்தாங்கலுக்கான காரணத்தை அலசுங்கள். உங்கள் பக்கம் நியாயம் இருப்பின், அவர்களிடம் அமைதியாக விளக்குங்கள். அது இருபக்கமும் பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.

8. ஒருவேளை தவறு உங்கள் பக்கம் இருந்தால், எந்த ஈகோவும் இன்றி 'நான்தான் புரியாம பேசிட்டேன்பா...' என்று இறங்குங்கள். பதறி, நெகிழ்ந்து உங்களைவிட பல படிகள் இறங்கிப் போவார்கள் உங்கள் வாரிசுகள்.

9. நீங்கள் மற்றவர்களிடம் குறைபட்டுக்கொண்ட சூழ்நிலைகளை நினைத்துப் பாருங்கள். அது பெரும்பாலும் வயிற்று வலி, தீராத பல்வலி, மூட்டு வலி என்று நீங்கள் அவஸ்தைபட்ட நிமிடங்களாக இருக்கும். எனவே, உடல் நலத்தை முடிந்தவரை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், நம் வேலைகளுக்கு யாரையும் எதிர்பார்க்க வேண்டியதும் இல்லை... குறைபட்டுக்கொள்ள வேண்டியதும் இல்லை.

10. 'அய்யோ... அந்த தாத்தா பேச ஆரம்பிச்சா, நிறுத்தவே மாட்டாருடா... எஸ்கேப்' என்று சில்வண்டுகள்கூட சில சீனியர்களை எடைபோட்டு வைத்திருப்பார்கள். அப்படி ஒரு சீனியராக நீங்களும் ஆகிவிடாமலிருக்க, உங்கள் சுவாரஸ்யத்துக்காக மட்டுமே பிறருடன் பேசாமல், அவர்களின் எண்ண ஓட்டத்தையும் அறிந்து பேசுங்கள். கூடவே, எந்த வார்த்தைக்கு அவர்கள் முகம் சுளிக்கிறார்கள், எதற்கு புன்னகைப் பூ பூக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். முடிந்தவரை அவர்களிடம் 'புன்னகை' வார்த்தைகளை மட்டுமே கையாளுங்கள். உறவுகள் மலரும்.

11. உறவுகளைப் பாதிக்கும் முதல் எதிரி... கோபம்! எந்தச் சூழ்நிலையிலும் அது உங்களுக்கு வேண்டாம். 'பெரிய மனுஷன் நான் ஒருத்தன் இங்க இருக்கறதே உங்களுக்கெல்லாம் ஞாபகத்துல இல்ல...' என்றெல்லாம் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் வெடித்துக் கிளம்பவேண்டும் போல் இருந்தால், சட்டென ஒரு செம்பு தண்ணீர் குடித்துவிடுங்கள். கோபம் முழுமையாக காணாமல் போகாவிட்டாலும் அந்த நிமிடம் பற்றியெரிந்த மனது... அப்போதைக்கு அமைதியாகும்.

12. 'நான் பார்த்து வளர்ந்த புள்ள...' என்ற உங்களின் உரிமையைவிட, உங்கள் பிள்ளைகளின் 'பிரைவஸி' முக்கியம். எனவே, அந்த புரிதலோடு நடந்து கொண்டால் 'ஜென்டில்மேன்/உமன்' பட்டம் உங்களைத் தேடிவரும்!

13. மருமகள் ஆஸ்பிட்டலுக்கு கிளம்பும்போது, 'நாங்கெல்லாம் அந்தக் காலத்துல எந்த ஆஸ்பத்திரிக்குப் போனோம்..? இப்பதான் தலைவலினாகூட டாக்டரைப் பார்க்க கிளம்பிடறாங்க' என்றும், வாஷிங் மெஷினில் துணி போடும்போது, 'அம்மியில அரைச்சு, கல்லுல ஆட்டி, கிணத்தடியில துவைச்சோம் நாங்க' என்றெல்லாம் அங்கலாய்க்காதீர்கள். உங்கள் தலைமுறை வேறு... இந்தத் தலைமுறை வேறு. அதன் வளர்ச்சிகளை, முன்னேற்றங்களை, சௌகரியங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதை சந்தோஷமான மனதுடன் பாருங்கள்.

14. இது இளையவர்களுக்கு. வயது முதிர்ந்துவிட்டாலே தனிமையும், மனச்சோர்வும் ஏற்படுவது இயல்புதான். எனவே, முதியவர்களின் மன உணர்வுகளை மற்றவர்களும் புரிந்துகொண்டு அவர்களைப் புண்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எந்நாளும் நலம் வாழ..!

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

'என்ன பண்றது..?! வயசாக ஆக, எல்லா நோயும் அட்டண்டன்ஸ் கொடுத்துடுதுப்பா...' என்று சொல்லிச் சிரித்துக் கொள்வார்கள் சில தாத்தாக்கள்! ஆனால், 'முதுமைனாலே நோய்' என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அப்படியே வந்தாலும் அதற்கான மருத்துவங்கள், உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள் என்று உங்களை நீங்களே பழக்கப்படுத்திக் கொண்டால், நூறு வயதுவரை தாராளமாக ஆரோக்கியமாக வாழலாம்! அதற்கு...

15. முதியோர் என்றாலே அவர்கள் வியாதியஸ்தர்கள் என்ற தவறான எண்ணம் நிலவி வருகிறது. இன்றைக்கும் நிறைய முதியோர் நல்ல ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ்கிறார்கள். எனவே, முதுமை மீதான தவறான எண்ணங்களை விட்டொழிக்க வேண்டும்.

16. இன்றைய மருத்துவ வசதி, விழிப்பு உணர்வு, சுகாதாரம் பேணப்படுதல், சத்தான உணவுகள் மனிதர்களின் வாழ்நாளை (Life Expectancy) பொதுவாகவே அதிகரித்து வருகிறது. ஆக, உலக அளவிலும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது.

17. இன்றைய சூழலில் ஆண்களின் சராசரி ஆயுள் 61 வயதாகவும், பெண்களின் வாழ்நாள் 63 வயதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை முதியோர் என்கின்றனர். வெளிநாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களையே முதியோர் என அழைக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, 80 வயதைத் தாண்டி வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இவர்களைப் பராமரிப்பது குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

18. வயது ஆக ஆக... உங்கள் உடம்பின் மீது காட்டும் அக்கறையை விலக்கிக் கொள்வதால்தான் நோய்களும் தொற்றிக் கொள்கின்றன. ரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய் தவிர... மூட்டு தேய்மானம், கண்புரை, காது கேளாமை, தூக்கமின்மை, மலச்சிக்கல், எலும்பின் திடம் குறைதல் போன்றவை பொதுவாக முதியவர்களைப் படுத்தும் நோய்கள். இதில், எலும்பின் திடம் குறைதலால் (Osteoporosis) கீழே விழுந்து எலும்பு முறிவுகூட ஏற்படக்கூடும். இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களே. நாற்பது வயதுக்கு மேல் அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் குறைவதால் இத்தகைய பிரச்னை ஏற்படுகிறது. எனவே, நாற்பது வயதை தாண்டும்போது கால்சியம் சப்ளிமென்ட் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையுடன் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

19. முதியோரை எளிதாக தாக்கும் நோய்களில் பக்கவாதமும் ஒன்று. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புச்சத்து அதிகரித்தல் போன்றவற்றிலிருந்து காத்துக் கொள்வதன் மூலமும், பாதிப்பு வந்திருந்தால் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலமும் பக்கவாதம் வராமல் காத்துக் கொள்ளலாம். தவிர, புகை பிடித்தல் போன்ற பழக்கங்களை விட்டொழிப்பதும் பக்கவாதம் வராமல் பாதுகாக்கும்.

20. 'யூரினரி இன்கான்டினென்ஸ்' (Urinary Incontinence) எனப்படும் சிறுநீர்க்கசிவு, வயதானவர்கள் சிலரை பாடாய்ப்படுத்தும். இருமும்போதும், தும்மும்போதும்கூட சிலருக்கு சிறுநீர் தானாக கசியும். இத்தகைய பாதிப்புகளும் பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படுகிறது. மருத்துவரை அணுகுவதன்மூலம், அவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை தவறாமல் ஃபாலோ பண்ணுவதன் மூலமும் இந்தப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள முடியும்.

21. வயதானவர்களுக்கு பெரும்பாலும் மனச்சோர்வு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இத்தகைய பாதிப்புக்குள்ளாவோரில் பெண்களே அதிகம். முதலிலேயே கண்டுபிடித்தால் இதற்கு நல்ல சிகிச்சைகள் உள்ளன. மாத்திரைகள் மூலம் இத்தகைய பாதிப்பை எளிதில் குணப்படுத்தலாம்.

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

22. மூளையில் ரசாயன மாற்றத்தால் ஏற்படக்கூடிய நினைவு தடுமாற்றத்தை 'டிமென்ட்சா' (Dementia) என்கிறோம். இதையும் தொடக்கநிலையில் கண்டுபிடித்தால் ஓரளவுக்கு கட்டுப்படுத்திவிட முடியும். இத்தகைய பாதிப்புக்கு புதிய வகை மருந்துகள் நிறையவே வந்துள்ளன. மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதும் குடும்பத்தினரின் சரியான கண்காணிப்பும் இதிலிருந்து குணம் தரும்.

23. இந்தியாவிலேயே சென்னை, அரசு பொது மருத்துவமனையில்தான் தமிழக அரசால் முதியோருக்கென்று சிறப்பு மருத்துவப்பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

24. முதியோர் நல பிரிவில் உடல்நலம், மனநலம் மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. பரிசோதனைக்குப்பின் 15 நாட்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

25. முதியோருக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி மையம் உள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக அரசு மற்றும் 'ஹெல்பேஜ் இந்தியா' என்ற அமைப்பின் துணையுடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. முதியோர் தங்களது அவசர பிரச்னைகளுக்காக 1253 என்ற இலவச தொலைபேசி (Toll Free) எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இருபதிலேயே சுதாரியுங்கள்!

'வருமுன் காப்பது நல்லது' இல்லையா? எழுபதில் புலம்புவதைவிட, இருபதிலேயே சுதாரித்துக் கொண்டால் சுகப்படும் முதுமை. எனவே, பின்வருபவை நாளைய தாத்தா, பாட்டிகளாகப் போகும் இன்றைய இளைய தலைமுறையின் கவனத்துக்கு...

26. ஆரம்பத்திலிருந்தே நல்ல உடற்பயிற்சி, சமச்சீரான உணவு, நேரத்துக்கு உணவு உட்கொள்தல், காலை - மாலை நடைபயில்வது, சிகரெட், குடி போன்ற பழக்கங்களை தவிர்த்து நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றுவது, 45 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாய மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்றவற்றால் ஆரோக்கியமான முதுமையைப் பெறலாம்.

27. உடற்பயிற்சி செய்வதன்மூலம் ரத்த ஓட்டம் சீராகும், எலும்புத் தசை வலுவடையும், மலச்சிக்கல் நீங்கி நிம்மதியான உறக்கம் பிறக்கும், மன தைரியம் கிடைக்கும். வாக்கிங் போவதால் நாலு பேரின் நட்பு கிடைத்து ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி சுமைகளை இறக்கி வைத்து உடம்புக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளலாம்.

28. நார்ச்சத்துள்ள உணவுகள், கீரை வகைகள், காய்கறி, பழங்கள், புரதம் - கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். கேழ்வரகு, பால், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்துள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

29. 'அபவ் ஃபார்ட்டி' அன்பர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை தங்களுக்கு இருக்கிறதா என்பதை வாலன்டரியாக பரிசோதனை செய்து தெரிந்துகொள்வதன் மூலமும், அவசியப்பட்டால் தேவையான சிகிச்சையை ஆரம்பித்து அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலமும் பிரச்னைகள் இல்லாமல் வாழ முடியும்.

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

வேரையே இழந்தாலும், வேண்டாம் வருத்தம்!

மரணம்... தவிர்க்க முடியாதது. நம் வாழ்க்கை முழுக்க உடன் வந்த துணையை இழப்பதும் இந்த அந்திமக் காலம்தான். எந்த வார்த்தைகளும் தேற்றத் தோற்றுப்போகும் அந்த சோகத்தையும் கடக்கத்தான் வேண்டி யுள்ளது... மிச்ச வாழ்க்கையையும் கழிக்க! அதுவரை...

30. அந்தத் துயர சம்பவத்துக்குப் பின் உடனே மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாதுதான். ஆனால், அந்த காலமும் வரும் என்பதுதான் உண்மை; அதை தீவிரமாக நம்பித்தான் பாருங்களேன்..!

31. நம் வழிதோறும் நமக்குண்டான 'சாய்ஸ்' இருக்கிறது என்பதை உணருவதுதான் துயரத்திலிருந்து மீள முதல் வழி. அழுது... அழுது ஓய்ந்த பிறகு ஒருநாள் மனம் 'நான் ரிலாக்ஸ்டாக இருக்கிறேன்... ஏதாவது வேலை கொடு' என்று கேட்கும் தருணத்தில் உங்கள் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யுங்கள். அது உங்கள் வீட்டுத் தோட்ட வேலையாகவும் இருக்கலாம்... பெயர் தெரியாத ஒரு ஏழைக்கு உணவு கொடுப்பதாகவும் இருக்கலாம்.

32. 'அவங்க போயி சேர்ந்து முப்பது நாள்கூட கழியல... அதுக்குள்ள இங்கயும் அங்கயும் ஓடுது பாரு' என்று காதில் விழும் வார்த்தைகளை அலட்சியம் செய்யுங்கள். 'நம் துயரத்தை அடுத்தவருக்கு அறிவிப்பதில் என்ன பயன்?' என்ற கேள்வியை உங்களுக்குள் நீங்களே கேட்டுப் பார்க்கும் நிமிடத்தில்... துயரத்தின் பாதையிலிருந்து பாதி தூரம் வந்திருப்பீர்கள்.

33. துணையுடன் சேர்ந்து கழித்த அழகான தருணங்களை, ரசித்த விஷயங்களை மனதுக்குள் 'ஸ்டோர்' பண்ணுங்கள். அது மிகப் பெரிய 'எனர்ஜி சேவர்' என்பதை போகப்போக புரிந்து கொள்வீர்கள்.

34. 'அய்யோ... அவள மறக்க முடியலியே' என்று மனதுக்குள் அரற்றிக்கொண்டிருப்பதை விட, 'இந்த நிமிடம் அவ இருந்தா... நான் சிரிச்சுக்கிட்டு இருக்கறதையும், பிரிஸ்க்கா பேப்பர் படிச்சிட்டு இருக்கறதையும்தான் விரும்புவா' என்பதை உணர்ந்து சிரிக்க, ரசிக்க ஆரம்பியுங்கள். அதுதான் இழந்த துணையின் ஆசையும்கூட!

35. 'அவரில்லாம எனக்கு பொழுதே ஓட மாட்டேங்குதே...' என்று கவலைப்படாதீர்கள். நீங்கள் சிறுவயதில் மிகவும் ஆசைப்பட்டு கற்றுக்கொள்ள முடியாமல் போன பெயின்ட்டிங், பாட்டு, எம்ப்ராய்டரி என்று எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளும்போது வாழ்க்கை அழகாக இருப்பதை உணர்வீர்கள்.

36. 'தனிமை கொல்கிறதே' என்று மனதளவில் மீண்டும் மீண்டும் அயர்ச்சியடையமல் நாய், பூனை, புறா, கிளி, வண்ணமீன் என எது பிடிக்குமோ அதை வளர்த்துப் பாருங்கள். உங்கள் பால்யம் மீண்டு வரும்.

37. நாமாகத் தேடிப்போய் செய்யும் சேவைக்கு மதிப்பு உண்டு என்பதை இதுவரை உணராவிட்டாலும், இனியாவது அதை உணரலாம்தானே?! பிரிவுத் துயரத்திலிருந்து மீள... பக்கத்திலிருக்கும் அரசு பள்ளியில் அனுமதி பெற்று, ஒரு மணி நேரம் பாடம் சொல்லித் தரலாம். வேலைக்குப் போகும் பக்கத்து வீட்டுக்காரர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளலாம்... மனமிருந்தால் வழியா இல்லை?!

38. பெரும் துயரிலிருந்தும் மனதை மீட்கும் வலிமை எழுத்துக்கு உண்டு. பக்கத்தில் உள்ள லைப்ரரியில் மெம்பர் ஆகி, தரமான புத்தகங்களை எடுத்துப் படியுங்கள். அவை சோக காவியங்களாக இல்லாமல், மனதுக்கு உற்சாகம் தருவதாக இருப்பது நலம்.

39. இறுதியாக, உலகில் எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டது... மறைந்தது உடல் மட்டும்தான்... ஆன்மா உங்களுடன்தான் இணையாக வந்து கொண்டிருக்கிறது என்பதை நம்புங்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை!

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

சலுகைகளைத் தெரிந்து கொள்வோமா?

நம் அரசாங்கம் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் நலனுக்காக, பல சலுகைகளை செயல்படுத்தி வருகிறது. இதில் சில சலுகைகள் வறுமைக்கோடு உள்ளிட்ட குறிப்பிட்ட சில வரையறை களுக்குட்பட்டு அளிக்கப்படுகிறது. அந்த உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும், சுணக்கமும் வேண்டாம். அதெல்லாமே நம்முடைய வரிப்பணத்திலிருந்து செயல்படுத்தப்படுபவைதான்!

40. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் 400 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதில் இந்திய அரசின் பங்கு 200 ரூபாய்... மாநில அரசின் பங்கு 200 ரூபாய்.

41. வருடத்துக்கு இரண்டு முறை... அதாவது, பொங்கல் மற்றும் தீபாவளிக்கு இலவச வேட்டி- சேலை முதியோருக்கு தரப்படுகிறது.

42. அங்கன்வாடிகளில் மதியவேளையில் சத்துணவு அளிக்கப்படுகிறது. இங்கே சத்துணவு சாப்பிடுவோருக்கு மாதத்துக்கு இரண்டு கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. 'சத்துணவு வேண்டாம்' என்பவர்களுக்கு 4 கிலோ அரிசி!

43. ஆதரவற்ற முதியோர்களுக்காக தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் இல்லங்களை நடத்தி வருகிறது. இந்த இல்லங்கள், தொண்டு நிறுவனங்களின் மூலம் செயல்படுகிறது. ஒவ்வொரு தொண்டு நிறுவனத்துக்கும் ஆண்டுதோறும் இரண்டு லட்ச ரூபாயை மானியமாக அரசு வழங்குகிறது. தேவைப்படுபவர்கள் சேர்ந்து பயனடையலாம்.

மாநில அரசின் கீழ் தமிழகம் முழுவதும் 27 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

44. மத்திய அரசின் நிதி உதவி மூலமாக 49 முதியோர் இல்லங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுகின்றன. இது மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் வருகிறது.

45. கிராமத்தில் எல்லோரும் வேலைக்கு சென்றவுடன் முதியோர்கள் மட்டும் தனியாக இருப்பார்கள். அவர்களுக்காக பகல் நேர பராமரிப்பு மையம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. மதிய உணவு, பொழுதுபோக்குக்காக கதை சொல்லுதல், பாட்டுப்பாடுதல், செய்திகள் தெரிந்து கொள்ளுதல் போன்றவை அங்கே உண்டு. மதியத்துக்கு மேல் வீட்டுக்குச் சென்றுவிடலாம். இப்படி 17 மையங்கள் தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

46. முதியோர் இல்லங்களில் சேர வேண்டுமென்றால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கும் சமூகநலத்துறை அலுவலத்தில் உள்ள சமூகநல அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். இத்துறையின் கட்டுப்பாட்டில்தான் முதியோர் இல்லங்கள் இயங்குகின்றன.

47. மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் முதியோர் இல்லங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 'முதியோர் பென்ஷன் டிவிஷன்' என்று அங்கேயும் முதியோருக்கு என்று தனிப்பிரிவு உள்ளது.

48. பேருந்துகளில் இரு இருக்கைகள் முதியவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ரயிலில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 30%, பெண்களுக்கு 50% கட்டணக் குறைப்புத் தருகிறார்கள்.

49. அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கென்று தனியாக ஜெரியாட்ரிக் (Geriatric) வார்டு இருக்கின்றது. முதியோர்களுக்கு சிறப்பான மருத்துவம் அளிக்கப்படுகிறது.

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

சட்டமே துணை!

தங்கள் பெற்றோர்களை கண்ணுக்குள் வைத்து தாங்கும் பிள்ளைகள் இருக்கும் இதே உலகத்தில், 'உங்கள வச்சு பார்க்க முடியாது போங்க...' என்று தங்களைப் பெற்றவர்களையே வெளித்தள்ளும், முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாசத்துடன் பாசம் பேசும். இதுபோன்ற சுயநலக்காரர்களிடம்... சட்டம்தான் பேசும்!

50. தற்போது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரித்தல் நலச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி பெற்றவர்களை பிள்ளைகள் பராமரிக்கவில்லை என்றால், அவர்களின் மீது பெற்றோர்கள் வழக்கு தொடுக்கலாம்.

51. தனக்குக் குழந்தைகள் இல்லாவிட்டாலும், தன்னுடைய சொத்துக்களை யார் அனுபவிக்கப் போகிறார்களோ அவர்களின் மீதும் இவர்கள் பெட்டிஷன் போடலாம்.

52. பொதுவாகவே சொத்து உள்ளிட்ட சிவில் வழக்குகளில் தீர்ப்பு வருவதற்கு ஆண்டுக் கணக்கில் ஆகும். இத்தகைய வழக்குகளை முதியோர்கள் போட நேர்ந்தால்... அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. அதனால், இத்தகைய வழக்குகளை 90 நாட்களுக்குள் விரைந்து முடிக்கும் வகையில் ஆலோசனை நடக்கிறது.

பயணம் செய்யப் போகிறீர்களா..?

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

பெரியவர்கள் டூர், கல்யாணம் என நெடுந்தூரம் பஸ்ஸ§லோ, டிரெய்னிலோ பயணம் செய்ய நேரும்போது இந்த விஷயங்களையும் கருத்தில் கொள்ளுங்கள்.

53. பெரும்பாலும் பஸ் பயணத்தைத் தவிருங்கள். பஸ்தான் வழி என்றால்... டிக்கெட் புக் செய்யும்போதே பஸ்ஸின் மையப்பகுதி ஸீட்டாகப் பார்த்து புக் செய்யுங்கள். முடிந்த வரை கடைசி ஸீட்டைத் தவிர்க்கலாம். இடுப்பு வலி, மூட்டு வலி, இதயநோய் இருந்தால் கண்டிப்பாகத் தவிர்த்துவிடுங்கள்.

54. 'டிராவல் கிட்'டாக காய்ச்சி வடிகட்டிய தண்ணீர், ரெகுலராகப் போட்டுக்கொள்ளும் மாத்திரை, மருந்துகள், ஒரு டவல்... இதையெல்லாம் எளிதாக உடனே எடுக்கும் வகையில் கைப்பையில் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

55. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய் போன்ற பிரச்னை இருக்கும் பெரியவர்கள் அவர்களின் மெடிக்கல் ஹிஸ்டரி, ரெகுலராக செக்-அப் செல்லும் டாக்டரின் வீட்டு, ஆஸ்பத்திரி போன் நம்பர், மனைவி, பிள்ளைகளின் போன் நம்பர் அடங்கிய டைரியையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

56. தனியாக வசிக்கும் பெரியவர்கள், ஒரு வாரத்துக்கு மேல் வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் போக நேர்ந்தால்... அக்கம் பக்கத்தில் இருக்கும் நம்பகமான உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் தகவல் சொல்லத் தவறாதீர்கள். தேவைப்பட்டால் காவல் நிலையத்தில்கூட பதிவு செய்யலாம்.

57. பெரியவர்கள் மட்டும் தனியாக பயணம் செய்ய நேர்ந்தால்... விலைமதிப்புள்ள பொருட்கள் பணம், நகையை எடுத்துச் செல்வதை தவிருங்கள்.

58. பயணம் செய்வதற்கு முன்பே, 'குறிப்பிட்ட பஸ்ஸில் வருகிறோம்... இத்தனை மணிக்குள் வந்து விடுவோம்' என்று தகவலை உங்களை ரிசீவ் செய்ய வருபவர்களிடம் தெரிவித்து விடுங்கள்.

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

உணவுப் பழக்கம்தான் உற்ற மருந்து!

இளமைக் காலத்திலும், மத்திய வயதிலும் இயங்குவதுபோல் உடல் உறுப்புகள் வயோதிகத்தில் இயங்காதுதான். எனவே, உணவுப் பழக்கமும் அதற்கேற்றாற்போல மாற வேண்டும்.

59. 'எனக்குத்தான் வயசாகிப் போச்சே...' என்று ஆரோக்கியமான உணவுகளை ஒரேடியாக ஒதுக்காமல், உடல் இயக்கத்துக்குத் தேவையான உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்.

60. இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ள முதியவர்கள் மருத்துவர் சொல்லும் உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் பிரச்னைகள் மேலும் வளராது.

61. ஐம்பத்தி ஐந்து வயதுக்கு மேலாகிவிட்டதா... பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கொழுப்புச் சத்துள்ள உணவுகள்; பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகள்; பட்டை, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள் (ஸ்பைஸஸ்) சேர்த்த உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். இவற்றையெல்லாம் எளிதாக ஜீரணம் செய்யும் சக்தியை உடல் உறுப்புகள் இழந்து விடுகின்றன. முழுமையாக டைஜஸ்ட் ஆகாத உணவுகள்... கல்லீரல், சிறுநீரகத்தில் தேங்கி நச்சுப் பொருட்களை உருவாக்கும். அது பல்வேறு பிரச்னைகளுக்கு 'இன்விடேஷன்' வைக்கும்.

62. மாதிரி உணவுப் பட்டியல்

காலை டீ/காபி - 200 மில்லி

காலை உணவு - இட்லி 3 அல்லது சப்பாத்தி 2 அல்லது உப்புமா 1 கப் அல்லது பொங்கல் 1 கப், ஆப்பிள் 1.

இடையில் 1 ஜூஸ் அல்லது சூப்.

மதிய உணவு - சாதம் 1 கப் அல்லது சப்பாத்தி 3, பருப்பு அல்லது சாம்பார் முக்கால் கப், ரசம், தயிர்- தலா அரை கப், காய்கறிகள் முக்கால் கப்.

இரவு உணவு - இட்லி 3 அல்லது சப்பாத்தி 2, காய்கறிகள் - அரை கப்.

படுக்கும் முன் - 200 மில்லி பால்.

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

பாதுகாப்பை பலப்படுத்துங்கள்!

பெண்களும், முதியவர்களும் வீட்டில் தனியாக இருக்கும்போதுதான் அதிகமான குற்றங்கள் நடைபெறுகின்றன என்கிறது தினசரி வரும் செய்திகள். அப்படியானால் எப்படி பாதுகாப்பாக இருப்பது..?

63. வீட்டில் இருக்கும்போது அந்நியர்கள் யார் வந்தாலும் கதவைத் திறக்காமல் இருப்பதுதான் நல்லது. ஜன்னல் வழியாக பேசி அனுப்பிவிடுவது புத்திசாலித்தனம். 'உங்க மருமகதான் அனுப்பிச்சாங்க', 'மகன்தான் வரச்சொன்னார்' என்று யாராவது காலிங் பெல் அழுத்தினால், பிள்ளைகளிடம் போன் செய்து உறுதிப்படுத்திக் கொண்டு அனுமதியுங்கள்.

64. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் 'வயசானவங்க... கொஞ்சம் பார்த்துக்கோங்க...' என்று எப்போதும் தோழமையுடன் பழகுவது... ஆபத்து நேரத்தில் கை கொடுக்கும்.

65. அதிகாலையிலும் இருட்டிய பிறகும் வாக்கிங் செல்வதைத் தவிர்க்கலாம். அப்படி போக நேரிட்டால் யாரையாவது உடன் அழைத்துச் செல்லுங்கள்.

66. வீட்டில் முதியவர்கள் மட்டுமே வசிக்க நேரும்போது அதிக பணம், நகைகளை வைத்திருப்பதே பிரச்னைக்கு காரணமாகி விடும். பேங்க் லாக்கரில் வைத்து விடுவதுதான் பாதுகாப்பு.

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

மன அமைதி தரும் வாழ்வியல் வழிகள்!

அந்திமக் காலத்தில் இருப்பவர்களுக்கு... மனதுக்கு நெருக்கமான துணை, பற்று, நம்பிக்கை, மகிழ்ச்சி, வடிகால் எல்லாமே ஆன்மிகம்தான்! அது மதம் சம்பந்தப்பட்டதாக இருப்பதைவிட, மனது சம்பந்தப்பட்டதாக இருந்தால் இன்னும் நலம்... இதைப்போல...

67. வாழ்க்கையில் பிரச்னைகள் வரும், போகும். 'பேசித் தீராத பிரச்னைகளை பிரார்த்தனைகள் தீர்க்கும்' என்று கடவுளிடம் முழுமையாக சரணடைவதுதான் அறுபது வயது ஆன்மிக வாழ்க்கை.

68. 'பெரிசு' - என்று சிறுசுகள் சொல்லும் கால கட்டம் இது. அதற்காக மனசு நோகாமல், அமைதிக்காக ஒரு தலயாத்திரை சென்று வரலாம். அது தேடல் ஆன்மிகம்!

69. உடல் நிலையோ, பொருளாதாரமோ, சூழ்நிலையோ தலயாத்திரைகளுக்கு இடம் தரவில்லையா? சோர்வு வேண்டாம். 'இருக்குமிடமே ராமேஸ்வரம்... காட்சிக்கு தெரிந்ததெல்லாம் காசி' என்று மனதை மலர வையுங்கள். அது பக்குவப்பட்ட ஆன்மிகம்!

70. உணவில் தள்ள வேண்டியதைத் தள்ளி, கொள்ள வேண்டியதை கொள்வது போல, கோப, வெறுப்பு, விரக்தி வார்த்தைகளைத் தள்ளி விட்டு ஒரு பத்திய வாழ்க்கை நடத்துங்கள். அது சத்திய ஆன்மிகம்!

71. முதுமை வந்ததுமே, 'நம்மை இனி யார் மதிப்பா... நமக்கு இனி யார் இருக்கா?' என்ற கவலையெல்லாம் வேண்டாம். 'நாம் ஊன்றி நடக்கப்போகும் ஒரு ஊன்று கோலை ஆண்டவன் எங்கோ ஒரு தோட்டத்தில் ஏதோ ஒரு மரத்தில் நட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறான்' என நம்புங்கள். அது நம்பிக்கை ஆன்மிகம்.

72. வீடு, நிலப் பத்திரங்கள் பத்திரமாக உங்களிடமே இருக்கட்டும். என்னதான் நம்பகமானவர்களாக இருந்தாலும்... அவர்களிடம் பத்திரங்களை ஒப்படைப்பது யோசிக்க வேண்டிய விஷயம். கொடுத்துவிட்டு பின்னால் வருந்தாமல் இருப்பது பொருளாதார ஆன்மிகம்.

மூத்தோரிடம் உங்கள் உறவு!

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

'நுனி ஓலையைப் பார்த்து சிரிச்சுச்சாம் குருத்தோலை...' என்ற பழமொழி ஒன்று நம்மிடம் உண்டு. அதாவது, நாளை நாமும் நுனி ஓலையாகி, வாடி, வதங்கி, விழுவோம் என்பதை அறியாமல் அந்த ஓலையைப் பார்த்து சிரித்ததாம் பசுஇளம் மேனி குருத்தோலை என்பது பொருள். அதுபோல்தான் நாமும்... பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம் வீட்டில் உள்ளவர்களின் முதுமையை அலட்சியம், அதிகாரம், அவமரியாதை, கிண்டல் என்று காயப்படுத்திவிடுகிறோம்... நமக்கான வயோதிகமும் வந்துகொண்டே இருக்கிறது என்பதை உணராமல்! தினை விதைப்போம்; தினை அறுப்போம். எனவே, உங்கள் வீட்டுப் பெரியோர்களிடம்...

73. வீட்டில் பெரியவர்கள் சொல்லும் முதல் குற்றச்சாட்டு, 'என் பேச்சை மதிக்கறதே இல்ல'! இந்த அமைதியற்ற மனநிலையை அவர்களுக்குத் தராமல் தடுக்க எங்கு போனாலும் 'இங்கு போகிறேன்' என்று சொல்லி விட்டுப்போங்கள். அவர்கள் மனம் குளிரும்.

74. மருத்துவமனைக்கு அவர்களைத் தனியாக அனுப்பாமல் கூடவே சென்று வாருங்கள். அவர்கள் செய்ய வேண்டிய ரெகுலர் 'செக்-அப்'களை ஞாபகப்படுத்துங்கள். 'ஆஹா... புள்ளைக்கு நம்ம மேல எவ்வளவு பாசம்...' என்று மகிழ்ந்து போவார்கள். அந்த மகிழ்ச்சி அவர்கள் மனதிலும் வீட்டுக்குள்ளும் அமைதியை நிலவச் செய்யும்.

75. வீட்டுக்கு வாங்கி வரும் புதிய பொருட்கள், ஆடைகள், தின்பண்டங்களை அவர்களிடம் நேரே போய் கொடுத்து, காட்டிப் பாருங்கள்... அவர்கள் முகம் எப்படி மலருகிறது என்று!

76. 'நாம் கவனிக்கப்படவில்லை, அலட்சியம் செய்கிறார்கள்' என்கிறபோதுதான் குழந்தை வேண்டுமென்றே கீழே விழுந்து எல்லார் கவனத்தையும் தன் பக்கம் திருப்பும். இவர்களும் குழந்தைகளே! எனவே, எக்காரணம் கொண்டும் அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். புறக்கணிப்பு, தாங்க முடியாத தண்டனை!

77. பண்டிகைகளுக்குத் துணி வாங்கச் செல்லும்போது 'உனக்கு என்ன கலர் புடவை வேண்டும் அம்மா' என்று ஒரு வார்த்தை கேட்டுச் செல்லுங்கள். சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கிறது!

78. குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாளாவது அவர்கள் அருகில் உட்கார்ந்து உங்கள் சிறு வயது குறும்புகள், பக்கத்து வீட்டு மாமி, எதிர் வீட்டு தாத்தா என ஃப்ளாஷ்பேக் ஓட்டுங்கள். இது உங்கள் இருவருக்குமே எனர்ஜி பூஸ்டர்!

79. வயதான அம்மா, அப்பாவை தன்னுடன் வைத்திருக்கும் பிள்ளைகள், வீடு கட்டும்போதே பாத்ரூம் உள்ளிட்ட முக்கியமான இடங்களின் சுவர்களில் கைப்பிடிகளை வைத்துக் கட்டினால், அவர்கள் கீழே விழுந்து விடாமல் பாதுகாப்பாக நடக்க உதவியாக இருக்கும்.

80. தரையில் டைல்ஸ், மார்பிள் கற்களை பதிக்க விரும்புவர்கள் வயதானவர்கள் புழங்கும் அறையில் அதைத் தவிர்க்கலாம். மார்பிள் கற்கள் வயதானவர்களுக்கு குளிரினால் கால் வலியை உண்டாக்கும்.

81. ஸ்டீரியோவில் அதிரும் பாடல்களை வைத்து, அவர்களுக்கு மன எரிச்சலை உண்டாக்காமல் இருப்பது நல்லது.

82. வயதானாலும் அவர்களுக்கும் 'தனிமை' தேவைப்படும். அவர்கள் தனியாக இருக்கும் நேரத்தில் பிள்ளைகளோ... நீங்களோ அந்த இடத்துக்குச் செல்லாமல், அவர்கள் உணர்வுகளையும் மதியுங்கள்.

83. உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பெற்றோர் பற்றி நல்ல அபிப்ராயங்களையே உருவாக்குங்கள். 'எங்கம்மாவுக்கு என் அக்காதான் உயிர்... நான் முக்கியமில்லை...', 'எங்கப்பா எப்பவுமே என் தம்பிக்குதான் சப்போர்ட் செய்வார்...' போன்ற நெகட்டிவ் கமென்ட்டுகளை அவர்கள் மனதில் விதைக்காதீர்கள். பின் அதையும், அதனால் எழும் பிரச்னைகளையும் அழிக்கவே முடியாது.

84. வீட்டில் இருக்கும் பெரியவர்களின் மனசுக்கு நெருங்கிய நண்பர்கள், தெரிந்தவர்கள் வந்தால் அவர்களுக்கு நீங்கள் தரும் மரியாதை, இவர்களின் மனதை நிரப்பும்.

85. உங்கள் நண்பர்கள் உங்களைச் சந்திக்க வரும்போது மறக்காமல் வீட்டுப் பெரியவர்களை அறிமுகப்படுத்துங்கள். 'எங்கம்மா காபி போட்டா சூப்பரா இருக்கும்', 'எங் கப்பா ஸ்கூல் டேஸ்ல ஸ்போர்ட்ஸ்ல ஜாம்பவான்' என்றெல்லாம் வார்த்தை களால் அவர்களைக் குளிர்வியுங்கள். அப்போது அவர்கள் முகத்தில் வெளிக்கிளம்பும் கூச்சம் கலந்த பெருமையை ரசியுங்கள்.

86. உங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கிய அவர்களின் பாசமும், பொறுப்பும், உழைப்பும், தியாகமும் பெரிது. உங்களுக்காக வாழ்க்கையெல்லாம் ஓடிக் களைத்துவிட்டு இப்போது உட்கார்ந்திருக்கும் அவர்களுக்குத் தேவை, உங்களின் அன்பும் அனுசரணையுமே! அதை(யாவது) கொடுப்பவர்கள் மனிதர்கள்... குறைப்பவர்கள் வீணர்கள்!

திட்டமிட்ட சேமிப்பே நிம்மதியான ரிட்டயர்மென்ட்..!

'மெட்லைஃப் இந்தியா இன்ஷ¨ரன்ஸ்' கம்பெனி எடுத்த சர்வே முடிவு சொல்லும் அதிர்ச்சி தகவல்... '80 சதவிகித இந்தியர்கள் ரிட்டயர்மென்ட் திட்டம் எதுவும் இல்லாமல் பொறுப்பற்று இருக்கிறார்கள்' என்பதுதான். அதேசமயம், 71% பணியாளர்கள் ஓய்வுக் காலம் பற்றிக் கவலைக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். 20% பேர் மட்டும்தான் ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். சரி, 35-45 வயதிலேயே முதுமை காலத்துக்காக எப்படிச் சேமித்து வைப்பது...?

87. தற்போது பெரும்பாலானோர் 30-35 வயதில்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் பணி ஓய்வு பெறும் காலத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள். அப்போது செலவுக்கு அதிகத் தொகை தேவைப்படும். எனவே, பணிக் காலத்திலேயே ரிட்டயர்மென்ட் காலத்துக்காக போதிய அளவு சேமிக்க வேண்டியது அவசியம்!

88. தபால் அலுவலகம், வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் சேமிப்பு மற்றும் முதலீட்டைச் செய்யலாம்.

89. ஒரே நாளில் ஓய்வுக் காலத்துக்கான திட்டத்தை நிறைவேற்றிவிட முடியாது. குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து சேமித்து வருவதன் மூலம்தான் குறிக்கோளை நிறைவேற்ற முடியும். அதற்கான சாதனமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உள்ளன. குறிப்பாக, 'எஸ்.ஐ.பி.' (Systematic Investment Plan) என்ற முறையில் சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொண்டால் நிச்சயம் பலன் இருக்கும்.

90. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்துக்கு முதலீடு செய்வதுதான் 'எஸ்.ஐ.பி.'. இம்முறையில் மாதம் குறைந்தபட்சம் 500-1000 ரூபாய் என்று, 12 மாதங்களுக்குக் கூட முதலீடு செய்யலாம். இதே முறையில் பென்ஷன் திட்டங்கள், இன்ஷ¨ரன்ஸ் திட்டங்களில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து வந்தால் நல்ல லாபம்!

91. 'தொடர் வைப்புத் திட்டம்' (RD- Recurring Deposit ) நல்ல சாய்ஸ். முதலீட்டைக் குறைந்தது மூன்று ஆண்டு காலத்துக்குத் தொடர வேண்டும். அப்போதுதான் ஓரளவுக்கு அதிக வட்டி வருமானம் கிடைக்கும். ஆர்.டி. முதிர்வு அடைந்ததும், அந்தத் தொகையை அப்படியே அதிக வட்டி வருமானம் தரும் வேறு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றுக்கு மாற்றிவிட வேண்டும். இப்படிச் சிறுகச் சிறுக சேர்த்தால்... பணி ஓய்வு பெறும்போது நீங்களும் கோடீஸ்வராக வாய்ப்பு உண்டு.

92. பணி ஓய்வுக்குப் பிறகு கிராமங்களில் செட்டில் ஆவதை பலரும் விரும்புகிறார்கள். சொந்த ஊர் அல்லது பிடித்த கிராமங்களில் கடைசி காலத்தில் செட்டில் ஆக நினைப்பவர்கள், இப்போதே அந்த ஊர்களில் தேவைக்கு ஏற்ப ஒரு இடத்தை வாங்கிப் போட்டு விடுவது நல்லது. பணியிலிருக்கும்போதே வீட்டைக் கட்டுவது மிகவும் நல்லது. ஒன்றுக்கு இரண்டு இடமாக வாங்கிப் போட்டிருந்தால், ஒன்றை விற்று ஒன்றில் சுலபமாக வீட்டைக் கட்டிவிட முடியும்.

93. ஓய்வுக் காலத்துக்கான திட்டங்களை நீங்கள் தீட்டிக் கொள்ளுங்கள். அதற்கான முதலீட்டை எப்படி மேற்கொள்வது என்பதற்கு மட்டும் நிதி ஆலோசகர் ஒருவரிடம் கலந்து ஆலோசிப்பது வரிச் சேமிப்பு, அதிக வருமானம் போன்றவற்றுக்கு உதவிகரமாக இருக்கும்.

94. பி.பி..எஃப். எனப்படும் 'பொது பிராவிடன்ட் ஃபண்ட்' (P.P.F- Public Provident Fund), பணி எதிலும் இல்லாத சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்ற திட்டம். ஏற்கெனவே கம்பெனியில் பி.எஃப். பிடித்தம் செய்யப்படும் பணியாளர்களும், இதில் முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி 8%. இதில் முதலீடு செய்யும் அனைவரும் வருமானவரிச் சலுகையைப் பெறலாம். வட்டி வருமானத் துக்கும் வரி இல்லை. இதை தபால் அலுவலகம், பொதுத்துறை வங்கிகளில் மேற்கொள்ளலாம். நிதி ஆண்டில் அதிகபட்சம் 70,000 ரூபாய் வரை செய்யப்படும் முதலீட்டுக்கு வரி விலக்கு பெறலாம்.

95. பி.பி.எஃப். முதலீட்டை 15 ஆண்டுகளுக்கு முன் முடிக்க முடியாது. ஆறு ஆண்டுகள் கழித்து, முதலீட்டில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதன்படி, குறிப்பிட்ட தொகையை எடுத்து, மீண்டும் பி.பி.எஃப். திட்டத்தில் மறுமுதலீடு செய்தால் அத்தொகைக்கு வருமான வரிச்சலுகையை பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் செலுத்தும் தொகையில் கடன் பெறும் வசதி உண்டு.

96. கடனில் வீடு வாங்குவதுகூட ஒரு வெல்த் கிரியேஷன்தான். அது வரிச் சலுகையை பெற்றுத் தருவதோடு, தற்போது மற்றும் ஓய்வுக் காலத்தில் வசிக்க ஒரு இருப்பிடத்தை உருவாக்கி தருவதாக இருக்கும். ஒரு நிதியாண்டில், வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தப்படும் அசலில் ஒரு லட்சம் ரூபாய் வரையும், வட்டியில் 1.5 லட்ச ரூபாய் வரையிலும் வரிச்சலுகை பெறலாம்.

சோறு போடும் சொந்த வீடு..!

97. கடைசி காலத்தில் மூத்த குடிமக்களான உங்களை பெற்ற பிள்ளைகள் காப்பாற்றவில்லை என்றால், அந்த வேலையை உங்களின் சொந்த வீடு செய்யும். இந்தத் திட்டத்தின் பெயர் 'ரிவர்ஸ் மார்ட்கேஜ்' என்பதாகும். பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, திவான் ஹவுஸிங், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்களில் இந்தத் திட்டம் இருக்கிறது.

98. அறுபது வயதுக்கு மேற்பட்ட, சொந்த வீடு உள்ள எவரும் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்திடம் வீட்டை அடமானம் வைத்து, மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இதைத் திரும்பக் கட்ட வேண்டியதில்லை. இதற்கு வருமான வரியும் இல்லை. இத்தொகையை காலாண்டு அல்லது ஆண்டு அல்லது மொத்தமாகக்கூட வாங்கிக் கொள்ளலாம். வீட்டின் மதிப்பில் 60% வரை பணம் கிடைக்கும்.

99. இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம், தம்பதி தங்களின் கடைசி காலம் வரை, சொந்த வீட்டில் என்னென்ன வசதிகளுடன் வாழ்ந்தார்களே அதே லைஃப் ஸ்டைல் மாறாமல் வாழ்ந்து கொள்ளலாம். ஐந்து ஆண்டுக்களுக்கு ஒரு முறை வீட்டின் மதிப்பு மறுமதிப்பீடு செய்யப்பட்டு, தேவைப்பட்டால் கூடுதல் தொகையும் வாங்கிக் கொள்ளலாம்.

100. தம்பதியில் ஒருவர் இறந்துவிட்டாலும், மற்றவர் தன் ஆயுள் வரைக்கும் அந்த வீட்டில் இருக்கலாம். இருவரின் மறைவுக்குப் பிறகு, அந்த வீடு வங்கியின் வசம் ஆகிவிடும். வங்கி, அந்த வீட்டை விற்று கடன் மற்றும் வட்டி போக மீதியுள்ள தொகையை வாரிசுக்குக் கொடுத்துவிடும். வாரிசு விரும்பினால்... கடன் மற்றும் வட்டியைக் கட்டி வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.

என்ன... தள்ளாட்டம் போய், துள்ளாட்டம் ஆரம்பித்து விட்டதுதானே!

உற்சாக டானிக்!

'மனிதனுக்கு வயதாவதே இல்லை... அவன் எதையாவது உவகையோடு தேடிக்கொண்டே இருந்தால்...' என்கிறது ஒரு பழமொழி. இதோ... இந்த வி.ஐ.பி-க்கள் எல்லோரும் சொல்ல வருவதும் அதைத்தான். ஒவ்வொருவரும் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் எத்தனையோ உயரங்களைத் தொட்டவர்கள்!. இன்றைக்கு வயதிலும் உயரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்... உற்சாகம் குறையாமல்! அதன் ரகசியம், அவர்கள் மொழியிலேயே, இந்தக் குட்டி புத்தகத்தில் ஆங்காங்கே இடம் பெறுகிறது. படியுங்கள்... பயன்படுத்துங்கள்!

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!

சச்சு(நடிகை)

"பொதுவாவே வாழ்க்கையை ரசிச்சு வாழணும். அதுலயும் சீனியராயிட்டா... ரொம்பவே ரசிக்கணும். இதைப்பத்தி பேசும்போது... 'நகைச்சுவை உணர்வை நிறைய வளர்த்துக்கணும். கஷ்டத்தைக்கூட காமெடியா பார்க்கணும்'னு பானுமதியம்மா அடிக்கடி சொல்வாங்க. நம்பியார் பேசுறப்ப... 'நம்ம மனசு மாத்திரம்தான் 16 மாதிரி இருக்கணுமே தவிர, நடைமுறையில நம்ம வயசை நினைச்சுக்கிட்டே இருக்கணும்'னு சொல்வார். அப்படிப்பட்ட குருகுலத்துல வளர்ந்த நான்... கத்துக்கிட்டது ஏராளம். அந்த பொற்கால படிப்பினையும், கூடவே தெய்வ நம்பிக்கையும்தான் எனக்கான உற்சாக டானிக்.''

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
ரமணி சந்திரன் (எழுத்தாளர்)

''நான் எழுதுற கதைகள்ல எப்பவுமே முடிவு சுபமா இருக்கணும்னு நினைப்பேன். அந்த நல்ல முடிவுகளுக்காக, நல்ல குடும்பச் சூழ்நிலைகளை நிறைய கற்பனை பண்ணுவேன். பாஸிட்டிவான அந்த எண்ணமெல்லாம்தான், ஒரு வகையில என்னை உற்சாகமா வெச்சுருக்கு. எந்த வயசுக்காரங்ககிட்டேயும் என்னால சகஜமா பேச முடியும். இதை எல்லாருமே வழக்கப்படுத்திக்கிட்டா... நமக்கு எப்பவுமே எனர்ஜி கிடைச்சுக்கிட்டே இருக்கும். வயது காரணமா எந்தப் பிரச்னை வந்தாலும், பெருசா எடுத்துக்காம... அதையெல்லாம் சாதாரணமா பார்த்தாலே பாதிப் பிரச்னை தீர்ந்துடும்.''

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
பாம்பே ஞானம் (நடிகை)

''தன்னம்பிக்கை இருந்தாலே... எதையும் தைரியமா எதிர்கொள்ள முடியும். 'அம்மா, உங்களுக்கான ரோல் இது... செய்வீங்களா?'னு என்கிட்ட எப்பவுமே கேட்க-மாட்டாங்க. 'ஞானம் எதையுமே மறுக்க மாட்டாங்க'ங்கிற நம்பிக்கையை அவங்களுக்கும் ஏற்படுத்தியிருக்கேன். எதையுமே மறுக்காம, 'நம்மால முடியும்'னு தைரியமா ஏத்துக்கிட்டு தன்னம்பிக்கையோட களத்துல இறங்கறதுதான் எப்பவுமே நம்மள உற்சாகமான மனநிலையில வெச்சிருக்கும். அதுதான் சாதிக்கறதுக்கும் வழிவகுக்கும்.''
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
அனுராதா ரமணன் (எழுத்தாளர்)

''நம்மள நாமளே ரசிச்சுக்கறது முக்கியம். அதைச் செய்துட்டா... உற்சாகம் தன்னால கரைபுரளும். முகத்துல புள்ளி, கருமைனு ஏதாச்சும் தெரிஞ்சா... உடனே அதை சரி பண்றதுதான் முதல் வேலையா இருக்கணும். ஒரு தடவை பல் டாக்டர்கிட்ட போயிருந்தேன். 'கடவாய் பல் கிராஸா வளருது. அதை எடுத்துடலாம்'னு சொன்னார். உடனே, அவர்கிட்ட நான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? 'கன்னம் டொக்கு விழுந்திடுமா?'ங்கறதுதான். மத்தவங்க என்ன நினைப்பாங்கனு இதுமாதிரி விஷயங்கள்ல யோசிக்கத் தேவையில்ல... ஏன்னா, இது நம்மள உற்சாகமா வச்சுக்கறதுக்கான டானிக்!

உற்சாகமான பாட்டுகளைக் கேக்கறது... 'பளிச்' கலர்ல புடவை உடுத்துறது... மனசையும், உடம்பையும் உற்சாகமா வச்சிக்கறது... இதையெல்லாம் தவறாம நான் கடைபிடிக்கிறேன். இதைச் செய்தாலே... வியாதிஎல்லாம் தன்னால மிரண்டு ஓடிடும்.''

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
வேதவல்லி (சங்கீத வித்வான்)

'' 'குளத்துல பாசி, அழுக்கெல்லாம் படர்ந்து கிடக்கும். கையால தண்ணியை விலக்கிட்டுதான் குளிப்போம். நாம முங்கி எழுந்த பின்னாடி, அந்தப் பாசியும், அழுக்கும் திரும்பவும் ஒண்ணா சேர்ந்துடும். அதுபோலதான் பிரச்னையும். அது எப்பவும் இருந்துகிட்டேதான் இருக்கும். ஆனா, மனசை தூய்மையா வெச்சுக்கிட்டு, தைரியமா நடைபோட்டா... எதைப் பத்தியும் கவலைப்படத் தேவையில்ல'னு ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லியிருக்கார். இதைக் கடைபிடிச்சாலே உற்சாகம் தன்னால வரும். அதைத்தான் நான் செய்துகிட்டிருக்கேன்.''
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
நல்லக்கண்ணு (அரசியலாளர்)

''மனதளவில் என்னை உற்சாகமாக வைத்திருப்பவை புத்தங்கள்தான். காலையில் யோகாசனம் செய்கிறேன். உடல் ஆரோக்கியத்துக்கு எளிமையான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்கிறேன். அளவான சாப்பாடுதான் ஆரோக்கியத்துக்-கான சரியான வழிமுறை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் கடந்த சில ஆண்டுகளாகவே முழுக்க முழுக்க சைவ சாப்பாடுதான்.''

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
நம்மாழ்வார் (இயற்கை வேளாண் விஞ்ஞானி)

''எப்பவும் இளைஞர்கள் கூடவே இருந்து பாருங்க... மனசு எப்பவும் இளமையாவே உணரும். அதுதான் உற்சாக டானிக்கும்! மூணு வேளை சாப்பாடுங்கறதை ரெண்டு வேளையா குறைச்சுக்கிட்டேன். அதுலயும் இந்த நாலு வருஷமா வேக வச்ச உணவுகளைச் சாப்பிடுறத நிறுத்திட்டேன். காய்கறி, இளநீர், மோர், அவல், முளைகட்டிய பயிர்... இதெல்லாம்தான் என்னோட அன்றாட உணவு. கூடுதல் உற்சாகத்துக்கு தினமும் யோகா செய்றேன்.''
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
டெல்லி கணேஷ் (நடிகர்)

சமீபகாலமா 'பை பாஸ்' பயம் என்னைப் பிடிச்சு ஆட்ட ஆரம்பிச்சுடுச்சு. 'ஆகா, ஆபத்து நெருங்கிடுச்சே'னு வயிறு முட்ட சாப்பிடறது, அடிக்கடி காபி, டீ குடிக்கறதெல்லாத்தையும் நிறுத்தினேன். விடிகாலை-யில எழுந்து காபி, வாக்கிங், பத்து நிமிஷம் சுவாசப் பயிற்சினு தினசரி வழக்கமாக்கினேன். டிபன், சாப்பாடு விஷயத்தையும்கூட சாதாரணமானதா மாத்திக்கிட்டேன். அதோட விளைவு.. உடம்பும், மனசும் லேசா ஆனதோட, இப்பல்லாம் எந்த நேரமும் ஆக்டிவ்வாவே இருக்கேன்.''
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
கி.ராஜநாராயணன் (எழுத்தாளர்)

''மன ஆரோக்கியம் என்பது ஒரு மன பயிற்சி. அது நம்மை மட்டுமே சார்ந்த விஷயம். எந்த பிரச்னை வந்தாலும் ஓடி ஒளியாமல் தைரியமாக எதிர்கொள்வது; சின்ன விஷயத்தையும் யோசித்து திட்டமிடுவது போன்ற விஷயங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதேபோல, எந்த விஷயத்தில் ஒதுங்கி இருக்க வேண்டுமோ... அதில் ஒதுங்கியிருப்பதும், பொறுத்துப் போக வேண்டிய இடத்தில் பொறுத்துப் போவதும் அவசியம். இதையெல்லாம்தான் நான் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.''
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
புலியூர் சரோஜா (நடன இயக்குநர்)

"வயோதிகத்துடன் என் ஒரே மகனின் இழப்பும் சேர்ந்து கொள்ள, ஒரு கொடுமையான வாழ்க்கைதான் எனக்கு. அதிலிருந்து விடுபட ஆரம்பித்த சத்யா ஸ்கூல்தான், இப்போது என் உற்சாகத்தின் பிறப்பிடம். அதில் பயிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளோடு பேசும்போது, நானும் இளமையை அனுபவிக்கிறேன். அவர்கள் சொல்லும் கதைகள், ரசிக்க வைக்கும் குறும்புகள், ஆர்வமாகக் கற்றுக் கொள்ளும் பாங்கு இதையெல்லாம் ரசிக்கும்போது... தினம் தினம் திருவிழாதான். அந்தப் பிள்ளைகளை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்காகவே யோசித்துக் கொண்டிருப்பதால்... என் வயோதிகம் காணாமலே போய்விடுகிறது.''
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
கே.ஆர்.விஜயா (நடிகை)

''எதுக்காகவும் நான் கவலைப்படறதே இல்லை. எதுவாயிருந்தாலும் கடவுள் மேல பாரத்தைப் போட்டுடுவேன். 'அவன் பார்த்துப்பான்'ங்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. நான் எதுக்காக வேண்டிக்கிட்டாலும், அது உடனே நடந்துடுது. அப்படியிருக்கறப்ப... எதுக்காக வீணா மனசைப் போட்டு அலட்டிக்கணும். நடக்கறதெல்லாம் நன்மைக்கேனு வாழ்க்கைப் போற பாதையில போயிட்டிருக்கிறதால... சுறுசுறுப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாம் நிரந்தரமா என்கிட்ட தங்கியிருக்கு.''
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
சாரதா நம்பி ஆரூரன் (பேச்சாளர்)

''இயல்பிலேயே நான் படுஜாலியான மனுஷி. எப்பவுமே உற்சாகத்தோடதான் இருப்பேன். என் கணவர், ஆசை மகள் ரெண்டு பேரையும் அடுத்தடுத்து பறிகொடுத்தப்ப... மனதளவுல விரக்தியடைஞ்சு இருந்தேன். அப்ப என் மூத்த மகள் சித்ரா, 'தனிமைதான் ஒருத்தரை சீக்கிரம் கொல்லக் கூடிய விஷம். அதுலயிருந்து வெளிய வந்துட்டாலே... சந்தோஷமா இருக்க முடியும்'னு உணர வச்சா. அதிலிருந்தே நான் தனியா இருக்கறது இல்ல. மேடைப் பேச்சு, சமூக சேவைனு நாலு பேரோடவே கலகலனு வலம் வந்துகிட்டிருக்கேன். இதுதான் என்னோட உற்சாகத்துக்கு உறுதுணை!''
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
வலையப்பட்டி சுப்பிரமணியம் (தவில் வித்வான்)

''இந்த மார்கழி சீஸனுக்கு சென்னை வந்திருந்தப்ப... பாலமுரளி கிருஷ்ணாவை சந்திச்சேன். அப்ப எனக்கு தொண்டைக் கட்டியிருந்துச்சு. 'என்னாச்சு'னு விசாரிச்சார். 'தவில்தான் வாசிச்சேன்... தொண்டைக் கட்டிக்கிச்சு'னு சிரிச்சுக்கிட்டே சொன்னேன். உடனே அவரு, 'தவில்ல வாசிச்சிருக்க மாட்டீங்க... அதுல பாடியிருப்பீங்க'னு சொன்னாரு பாருங்க... கூட இருந்தவங்க வயிறெல்லாம் சிரிச்சு சிரிச்சு புண்ணாயிருச்சு. ஒரு விஷயத்தை ஜாலியா சொல்லலாம்னு முயற்சி பண்ணினேன். அவரு டபுள் ஜாலியாக்கிட்டார். இப்படி எந்த விஷயத்தையுமே ஒரு நகைச்சுவை உணர்வோட கையாளுறதாலதான்... இந்த வயசுலயும் அவரு, நானெல்லாம் உற்சாக நடைபோட்டுக்கிட்டு இருக்கோம்.''

 

சமூகநலத்துறையின் கீழ் வரும் முதியோர் இல்லங்கள் மற்றும் முதியோர்களுக்கான சலுகைகள் பற்றிய மேலதிக விவரங்களுக்கு...

நிர்மலா ஐ.ஏ.எஸ்.
சமூகநலத் துறை ஆணையர்
சேப்பாக்கம், சென்னை-5
போன் 28524499

தொகுப்பு ரேவதி, லாவண்யா, செ.சரவணன், நாச்சியாள், எம்.மரிய பெல்சின், இரா.மன்னர்மன்னன்
படங்கள் ஆ.முத்துகுமார், து.மாரியப்பன்
தொகுப்புக்கு உதவியவர்கள்
சுப்பு ஆறுமுகம், வில்லிசை கலைஞர்

டாக்டர் பி.கிருஷ்ணசுவாமி,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
முதியோர் நலன்,
சென்னை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

டாக்டர் ஜி.உஷா,
உதவி பேராசிரியை - முதியோர் நலன்
சென்னை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
-
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
சூப்பர் டிப்ஸ் முதியோர் சிறப்பிதழ்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism