ஏதாவது ஒருநாள், ''அப்படியே அந்த தட்டை சிங்க்ல கொண்டு போய் வெச்சுட்டு போம்மா...'' என்று அம்மா தப்பித் தவறி சொன்னால்கூட... ''அடச்சே... இதுக்குத்தான் இன்ஜினீயரிங் படிக்கிறேனா...?'' என்று அலுப்பு காட்டுவது தனிக்கதை!
இதோ... இந்த நாலு பெண்களும் படிப்பது அதேமாதிரியான டிகிரிதான். ஆனால், அம்மா, அப்பாவை மட்டுமல்ல... குடும்பத்தையே தலையில் வைத்துத் தாங்கிக் கொண்டு, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு, படிப்பையும் தொடர்கின்றன கிராமத்திலிருந்து புறப்பட்டிருக்கும் இந்த நம்பிக்கை நட்சத்திரங்கள்!
படிப்பு வாசமே இல்லாத பெற்றோர்களை, எண்பது சதவிகிதத்துக்கு மேல பர்சன்டேஜ் மெயின்டெய்ன் பண்ணி மனசு குளிர வைக்கற படிப்பாளிகள்தான் நால்வருமே. பட், அவங்களோட 'லைஃப் ஸ்டைல்' எவ்ளோ எளிமையா, சுமையா, பொறுப்பா இருக்கு பாருங்க...
முத்துமாரி, இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி., ஜெயராஜ்-அன்னபாக்கியம் கலைக் கல்லூரி, பெரியகுளம்
"அப்பா மண்ணு வெட்டறார். அம்மா பணியாரம் விக்கறாங்க. நான் ஒரே பொண்ணுங்கறதால ஆசைப்பட்டு, கஷ்டப்பட்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வைக்கறாங்க. தினமும் காலையில நாலு மணிக்கு எழுந்து வாசல் தெளிச்சுட்டு, பணியாரத்துக்கு மாவு ஆட்டிக் கொடுத்துட்டு, பாத்திரங்கள வெளக்கிட்டு காலேஜுக்கு கிளம்பிப் போவேன். சாயங்காலம் காலேஜ் விட்டு வந்தவொடன ராத்திரிக்கு சமைச்சு வெச்சுட்டு, பாத்திரங்கள வெளக்குவேன்.
காலேஜுக்குப் போடறதுக்கு ரெண்டு செட் டிரெஸ்தான் இருக்குங்கறதால, அதை துவைச்சுப் போட்டுட்டு படிக்க உட்காருவேன். லீவ் நாள்ல அம்மாகூட சேந்து பணியாரம் வைப்பேன். இப்போ 88% பர்சன்டேஜ் வெச்சுருக்கேன். இந்த செமஸ்டர்ல இன்னும் நல்லா படிக்கணும்!"
செல்லாயி, இரண்டாம் ஆண்டு டி.எம்.எல்.டி., அரசு மருத்துவக்கல்லூரி, தேனி
"அப்பாவும் அம்மாவும் கூலி வேலைக்குப் போறாங்க. அவங்க வெள்ளன கிளம்பிப் போகணுங்கறதால காலையில நான்தான் சோறு ஆக்கி, தம்பி, தங்கச்சிய ஸ்கூலுக்கு கிளப்பி விடுவேன். சாயங்காலம் அஞ்சு மணிக்கு காலேஜ் முடிச்சு வந்தவொடன துணி துவைச்சுட்டு, வீட்டு வேலைகள முடிச்சுட்டு தம்பி, தங்கச்சிக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கிட்டே நானும் படிச்சுக்குவேன். சனி, ஞாயிறுல எங்கம்மாகூட சேர்ந்து கூலி வேலைக்குப் போவேன். நல்லா படிச்சு, நல்ல வேலை கிடைச்சு, அம்மா, அப்பாவுக்கு அதுக்கு அப்புறமாச்சும் ஓய்வு கொடுக்கணும். என் தம்பி, தங்கச்சியப் படிக்க வைக்கணும்!"
|