"எப்பவுமே என் வீட்டுக்காரர் மேல நான் வைக்கிற நம்பிக்கைதான் அவருக்கு பலம்னு நம்பறவ நான். அதனாலதான் சாஃப்ட்வேர் வேலையில இருந்த அவர் சிங்கப்பூர், ஆஸ்திரேலியானு தானே விருப்பப்பட்டு வேலை மாறிப் போனப்போ எல்லாம், 'ஏன், எதுக்கு..?'னு கேட்காம அவர்கூடவே போனேன்.
திடீர்னு ஒருநாள், 'வெளிநாட்டுல சம்பாதிச்சாதானா? நாம தமிழ்நாட்டுக்கே போய்டலாம்'னு சொல்ல, 'சரி...'ன்னேன்! மாசம் ஒன்றரை லட்ச ரூபா சம்பள வேலையையும் வெளிநாட்டையும் விட்டுட்டு, சென்னைக்கு வந்தோம். அங்க ஒரு தனியார் கம்பெனியில அரை லட்ச ரூபா சம்பளத்துல வேலை கிடைக்க, வேளச்சேரியில சொந்த வீடு கட்டினோம். கார், பிள்ளைங்களுக்கு நல்ல ஸ்கூல்னு வசதியான வாழ்க்கை. பக்கத்துலயே நாத்தனார், ஓர்ப்படியானு எல்லாரும் வீடுகட்ட, உறவுகளோட சந்தோஷமா இருந்தோம்..." என்றவரின் வாழ்க்கையில் அதற்குப்பின்தான் அந்த திருப்பம் நடந்திருக்கிறது.
"ஒருநாள், 'நான் வாழ விரும்பும் வாழ்க்கை இது இல்ல காயத்ரி'னு சொன்னாரு. 'ஏங்க... நாம இப்போ சந்தோஷமாதானே இருக்கோம்'னு நான் கேட்க, 'போலியான இந்த நகர வாழ்க்கை சந்தோஷம் இல்லை. நீ எனக்கு உறுதுணையா இருந்தா, நாம சொர்க்கத்துக்கு நிகரா ஒரு வாழ்க்கை வாழலாம்... கிராமத்துல!'னு சொன்னார். 'அவர் ஒரு வேகத்துலயோ, குழப்பத்துலயோ எடுத்த முடிவில்ல அது... ஏதோ ஒரு தீர்க்கமான திட்டத்தோட முதல் படி!'னு எனக்குப் புரிஞ்சது. சம்மதம் சொன்னேன். அவர், 'நான் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போறேன். இயற்கை விவசாயம்! இனிமே ஒண்ணாம் தேதி சம்பளம் கிடையாது. ஆனா, வீட்டுச் செலவுக்குத் தேவையானதை நான் கொடுத்துடறேன்!'னு உறுதி கொடுத்தார். தேடிப்பிடிச்சு, இந்த மேலாநல்லூர் நிலத்தை வாங்கி, விவசாயத்தை ஆரம்பிச்சார். கூடவே, 'வலை நெட்வொர்க்'ங்கற பேர்ல ஒரு கம்பெனியும் ஆரம்பிச்சு, வீட்டுக்குத் தேவையான வருமானத்துக்கும் வழி செஞ்சார்.
என் மகன், மகளைக் கூட்டிட்டு இங்கயே வீடு பார்த்து குடி வந்தோம். அன்னிக்கு அவர் முகத்துல இருந்த மலர்ச்சியை நான் அதுக்கு முன்னால பார்த்தது இல்ல" என்று சொல்லும் காயத்ரி பிறந்தது, வளர்ந்தது எல்லாம் ஆந்திர மாநிலத்தின் பெருநகரமான செகந்திராபாத். வாழ்ந்தது அயல்நாடுகளின் மெட்ரோபாலிட்டன் நகரங்களில்! 'விவசாயம்' என்ற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் தெரியாத மேல்தட்டு ரகம். எப்படி எதிர்கொண்டார் சாணம் மணக்கும் கிராம வாழ்க்கையை?!
"பிள்ளைங்கள ஸ்கூல் மாத்தினது, அவுட்டிங், ஷாப்பிங்னு நகரத்துல அனுபவிச்ச வசதிகள் சுருங்கினது, சொந்தங்கள விட்டுட்டு வந்ததுனு இங்க வந்த ஆரம்ப நாட்கள்ல கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. இந்த ஊர், மக்கள், அவங்க பழக்க வழக்கம்னு எல்லாமே புதுசா இருந்தது. நாளாக ஆக அவரோட உழைப்பால பசுமையாகிக் கிடந்த வயலயும், விளையற நெல்லையும் பார்த்தப்போ, அந்தக் கஷ்டமெல்லாம் பறந்து, மனசுல ஒரு திருப்தி வந்து சேர்ந்துச்சு. அதுலயும் எங்க வயல்ல விளைஞ்ச கிச்சடி சம்பா அரிசியையும், பயறு, காய்கறிகளையும் சமைச்சு சாப்பிட்டப்போ, எங்களுக்கெல்லாம் அவ்ளோ பெருமை, சந்தோஷம்! என் வீட்டுக்காரர் சொன்ன மாதிரி, சொர்க்கம் மாதிரி இருக்கு இந்த வாழ்க்கை!"
|