"நினைச்ச நேரத்துல சொந்த ஊருக்குப் போக முடியாது. சொந்த பந்தங்களைப் பார்க்க முடியாது. வருஷத்துல ஒன்பது மாசம் கரும்புத் தோட்டத்துக்குள்ளேயேதான் வாழ்க்கை கரையுது. ஆனாலும், கடனை முழுசா அடைக்க முடியாது. ஒரு டன் கரும்பு வெட்டி, டிராக்டர்ல ஏத்தினா 180 ரூபாய் சம்பளம். ரெண்டு நாளைக்கு மேல தொடர்ச்சியா வேலை பார்த்தாதான் ஒரு டன் வெட்டலாம்.
நிலத்தோட சொந்தக்காரர், ஒரு ஆளுக்கு தினமும் ஒரு படி அரிசியும், 10 ரூபாய் பணமும் கொடுப்பாரு. இதை வச்சுதான் குடும்பத்தை ஓட்டியாகணும்! காய்கறி, மளிகை சாமான், மாத்திரை, மருந்துனு ஏகப்பட்ட செல வுகள் ஆகுது. அதுக்கும் கங்காணிங்க கிட்டதான் கடன் வாங்கிக்குவோம். இப்படி பல காரணங்களால கடன் தொகை ஏறிக்கிட்டே போகும். மழை பெய்ஞ்சா சம்பளம் கிடைக்காது. வாழ்க்கை முழுக்க ஊர் ஊரா போயி உழைச்சாலும், நாங்க நிரந்தர கடனாளிதான்'' என்றார்கள் வேதனையோடு.
பட்ட கடனுக்காக மாடாக உழைக்கும் இவர்களுக்கு, இந்தக் காட்டு வேலை தரும் கஷ்டங்களும் ஏராளம்!
"உயிரை பணயம் வச்சுதான் வேலை செய்றோம். கரும்புத் தோட்டத்துக்குள்ள பாம்பு கடிச்சி, எங்காளுங்க செத்துக்கூடப் போயிருக்காங்க. டிராக்டர்ல கரும்பு ஏத்தும்போதும் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடக்கும். என் மேலகூட கரும்பு சரிஞ்சி, தலையில பயங்கரமான வெட்டுக்காயம். தலை முழுக்க ஏகப்பட்ட தையலு. பத்து நாள் சம்பளமும் போயிடுச்சு" என ஏகவள்ளி சொன்னபோது, பரிதாபம் படர்ந்தது நமக்கு.
|