கிராமத்துப் பெண்கள் என்றதுமே... காட்டு வேலையும், கதை பேசுவதும், விவரம் தெரியாத வெள்ளந்தித்தனமும், பொங்கிப்போடும் களியும், அடையும்தான் நினைவில் ஓடுகிறதா..?
உங்களின் அந்தப் பிம்பத்தைப் புரட்டிப் போடுகிறார்கள் தென் மாவட்டத்துக் கிராமங்களைச் சேர்ந்த இந்த மூன்று பெண்களும்!
வானத்தை வசப்படுத்தும் சாதனைகள் அல்ல இவர்களுடையது... ஆனால், வாழ்க்கைக்குத் தேவையான தன்னம்பிக்கையைக் கொண்டு வரக்கூடிய சாதனைகள்!
ஆவணி நாச்சியார், பஞ்சாயத்து தலைவி, காஞ்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர்
"ஆறு வருஷத்துக்கு முன்ன என் வீட்டுக்காரர் திடீர்னு நெஞ்சுவலியில இறந்தப்போ... உடைஞ்சு போன நான், 'இனி நமக்கு என்ன இருக்கு'னு மூலையில உட்கார்ந்துட்டேன். என் மாமியாரும், சின்னவரும் (கொழுந்தனார்), புள்ளைகளும்தான் என்னத் தேத்தி, பஞ்சாயத்து எலெக்ஷன்ல நிக்க வச்சாங்க. ஏழாவது வரைக்கும் மட்டுமே படிச்ச என்னாலயும் ஒரு ஊரையே கட்டிக் காக்க முடியும்னு நம்பி, எங்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிருக்க எங்க ஊர் சனத்துக்காகத்தான் இன்னிவரைக்கும் ஒரு வைராக்கியத்துல பஞ்சாயத்துத் தலைவரா இருந்துட்டு இருக்கேன்.
|