''அது, இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம். அப்போது... புன்னையாபுரத்தில் வாழ்ந்த ஒரு ஏழைப் பெண், தன் தாய்- தகப்பன் இறந்துவிட்டதால், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து ஆளாகியிருக்கிறாள். பாட்டி தினசரி மலைக்குச் சென்று விறகு வெட்டிக்கொண்டு வந்து விற்றுக் காசாக்கினால்தான் சாப்பாடு என்ற வறுமைச் சூழலில்தான் வாழ்க்கை உருண்டிருக்கிறது.
ஒருநாள் கோயில் கொடை. அன்றைய தினம் பாட்டிக்கு உடல் நலமில்லை. வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்ய..? என்று யோசித்த அந்தக் கன்னிப்பெண், தோழியின் துணையோடு மலை ஏறிவிட்டாள் விறகு வெட்ட! மலை உச்சியில் விறகு வெட்டிக் கொண்டிருக்கும்போது.... திடீரென குதிரையின் குளம்போசை. அந்தச் சத்தம் நெருங்கி வர வர... பெண்கள் இருவரும் திகிலில்!
அந்தக் காலத்தில் மலைப்பிரதேசம் மொத்தமும் வெள்ளைக்கார வன அதிகாரி ஒருவனுடைய கட்டுப்பாட்டில்தான். அவனுடைய குதிரையின் குளம்போசைக் கேட்டாலே.... விறகு வெட்டப்போகும் மக்களுக்கு கிலிதான்.
மலை உச்சியின் அமைப்பு விநோதமானது. மூன்று புறமும் கிடுகிடு பள்ளம். மேற்குப்புறம் வழியாக மட்டும்தான் கீழே இறங்க முடியும். விறகுக் கட்டைத் தூக்கிக் கொண்டு வேகவேகமாக மலையை விட்டு தோழியுடன் கீழே இறங்க ஆரம்பித்தாள் அந்தப் பெண். குளம்பொலி நெருங்கி வர வர, விறகுக் கட்டை கீழே வைத்துவிட்டு ஓட நினைத்தவள், அதைக் கீழே விட்டு அண்ணாந்து பார்த்தாள்... முரட்டுக் குதிரையின் மீது ஆஜானுபாகுவான தோற்றத்தில் வெள்ளைக்காரன்.
|