Published:Updated:

முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!

முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!

முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!

முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!

Published:Updated:

"முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!" - 'குதிரைவெட்டி'க்கு ஒரு கும்மாள விசிட்
முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!
முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரா.பரணீதரன்

முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!

காலை 6.30 மணி...

விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் பனி அப்பிக் கிடக்க... அந்த மலைக்கிராமத்தில் 'டர்புர்'ரென மூச்சு வாங்கி, நிற்கிறது ஓர் அரசுப் பேருந்து.

அதன் இரைச்சலைக் கேட்டதுமே... ஏதோ உறவுக்காரர் வந்து விட்டதைப் போல... "ஏய்.. 'முக்கா வண்டி' வந்துருச்சுப்பேய்!" என்றபடியே ஆளாளுக்கு ஓடிவருகிறார்கள் பேருந்தை நோக்கி!

''என்ன, டிரைவரண்ணே சுகம்தானே..!'' என்ற அளவளாவல்கள் ஆரம்பமாக...

உள்ளூர் டீக்கடைக்காரரின் கைகளுக்கு, பஸ்ஸில் இருந்து இடம் மாறுகின்றன அன்றைய காலை நாளிதழ்கள்.

''எல்லாம் சரியா இருக்கு தானு பார்த்துக்கோங்கண்ணே...'' என்று வாஞ்சை காட்டும் 'டிரைவர்' ராஜாமணி, அப்படியே திரும்பி... "என்னண்ணே உங்க பங்காளியக் காணோம்? மாத்திரை வாங்கிட்டு வரச் சொன்னாரு. இந்தாங்க கொடுத்துடுங்க..." என்று ஒருவரிடம் ஒப்படைக்கிறார்.

முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!

''இதென்னமோ ஸ்பெஷல் காபியாமே...! கடைசி வீட்டு அண்ணாச்சிக்கிட்ட ஒப்படைச்சுடுங்க...'' என்றபடியே ஒருவரின் கையில் திணிக்கிறார்.

இப்படி ஒவ்வொரு இத்தியாதியாக பேருந்திலிருந்து ஊர்க்காரர்களின் கைகளுக்கு மாற... நன்றிப் பெருக்கோடு கலைகிறார்கள்.

காலை மணி 8.30...

"ம்... ம்... 'முக்கா வண்டி' புறப்படப்போகுது... வெரசா வந்து ஏறுங்கப்பா...!" என்று ஒருவர் குரல் கொடுக்க விரைந்து வந்து ஏறுகின்றனர் மக்கள்!

திருநெல்வேலியிலிருந்து, 99 கிலோ மீட்டர் தூரத்தில், மேற்குதொடர்ச்சி மலை மீதிருக்கும் குதிரைவெட்டி கிராமத்தில் இது அன்றாட காட்சி. காலை, மாலை என தினமும் இருவேளை மட்டுமே வந்து செல்லும் இந்தப் பேருந்துதான்... அந்தக் கிராமத்துக்கு உலகத்தையே கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கும் கடவுள். வழியில் இருக்கும் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய நான்கு எஸ்டேட்களுக்கும்கூட!

'ரைட் ரைட்' என்று 'கண்டக்டர்' செல்லபாண்டி விசில் கொடுக்க, புழுதியைக் கிளப்பி புறப்படுகிறது ஓரளவுக்கு நிரம்பியிருக்கும் பேருந்து. வண்டியிலிருக்கும் டி.வி.டி. பிளேயரில் பாடல் ஒன்று கசிய ஆரம்பிக்க, அதை மீறுகிறது பயணிகளின் அரட்டைக் கச்சேரி. அதை ரசித்தபடியே நம்மிடம் திரும்புகிறார் 'டிரைவர் அண்ணே'!

முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!

''வேலைக்கு, காலேஜுக்குனு மலையில இருந்து கீழ இறங்கறவுங்களத் தவிர, வேற யாரும் டவுனுக்கு வர மாட்டாங்க. அதனால வேணுங்கற சாமான எல்லாம் திருநெல்வேலியில வாங்கிட்டு வரச்சொல்லி எங்கிட்டதான் காசு கொடுத்து அனுப்புவாங்க! பதினேழு வருஷமா அதை பாக்கியமா நினைச்சு செய்துகிட்டிருக்கேன். வருஷக்கணக்குல இப்படி வந்துகிட்டிருக்கறதால... இந்த ஊரு ஆளாவே மாறிட்டேன்ல'' என்று பெருமைப்பட்டவரிடம்,

"அது என்ன 'முக்கா வண்டி'..?" என்றோம்.

"குறுகலான வளைவு, கொண்டை ஊசி நெளிவுனு இந்த மலை ரூட் ரொம்ப சிரமமான ஒண்ணா இருக்கறதால... முழு பஸ் போக முடியாது. அதனால, இதுமாதிரியான ரூட்டுக்காகவே பஸ்ஸோட சைஸை முக்காவா மாத்தியிருக்காங்க!" என்று விளக்கம் கொடுத்தார் டிரைவர் ராஜாமணி.

முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!

"எங்க ஊருக்கு 'குதிரைவெட்டி'னு பேர் வரக் காரணம் தெரியுமா...?" என்று ஆர்வமாக நம்மை இழுத்து கதை சொல்லத் தயாரான சக பயணி மாரிதாஸ், "முன்ன, வெள்ளக்காரங்கள்லாம் இந்த மலைக்கு வந்தா.... குதிரையை லாயத்துல கட்டிட்டு, பக்கத்துல இருக்கற விருந்தினர் மாளிகையில வாரக் கணக்குல் ஓய்வெடுப்பாங்களாம். அதனால, 'குதிரை கட்டி'னு கூப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. அது 'குதிரைவெட்டி' ஆயிடுச்சு'' - பெயர்க் காரணம் சொல்லிவிட்டு, ஊர்க்கதைக்குள் புகுந்தார்.

''இங்க காபி, தேயிலை, ஏலம் எல்லாம் விளையும். இது சிங்கம்பட்டி சமஸ்தானத்தோட இடம், பாம்பே பர்மா டிரேடிங்னு ஒரு கம்பெனி லீசுக்கு எடுத்து நடத்திட்டுருக்கு. பத்து வருஷத்துக்கு முன்ன பன்னண்டாயிரம் பேர் வரைக்கும் இங்க இருந்தாங்க. பொழப்புத் தேடி நிறையபேரு டவுனுக்குப் போயிட்டதால, நாலாயிரம் தலைனு சுருங்கிடுச்சு.

இது தனியார் இடம்கிறதால... டூரிஸ்ட்டுங்க ஈஸியா வரமுடியாது. வனத்துறை அனுமதி வாங்கிட்டு, காலையில 6 மணிலேர்ந்து சாயந்திரம் 5 மணி வரைக்கும் இங்க இருக்கலாம். விருந்தாளிங்க வந்தாகூட... 'எத்தனை பேர் வந்திருக்காங்க... எதுக்காக வந்திருக்காங்க... எத்தனை நாள் தங்குவாங்க...'னு எல்லாத்தையும் தெளிவா சொன்னாத்தான் அனுமதி கொடுப்பாங்க'' என்று மாரிதாஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...

''அதெல்லாம் இல்லைனா... இந்நேரம் நம்ம ஊரு நாறிப் போயிருக்கும்ல...'' என்று குரல் உயர்த்திய முன் ஸீட் சரஸ்வதி, ''கெட்டுப்போகாத காத்து, சுத்தமான தண்ணீனு எதுக்கும் ஆபத்து வராம இருக்கறதுக்கு காரணமே... டூரிஸ்ட்டுங்கற பேருல வெளியாட்கள் வராம இருக்கறதுதான். அதுக்கு மட்டும் அனுமதி கொடுத்துட்டா... அப்புறம் அதோகதிதான்'' என்று சூழல் மீதான அக்கறையை வெளிப்படுத்தினார்.

முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!

தொடர்ந்து, "எங்க ஊருல ஒரே ஒரு ஸ்கூல்தான் இருக்கு. அதுக்கு இந்த டீச்சர்தான் ஹெச்.எம்..." என்று அருகிலிருந்த காந்திமேரியை சுட்டிக் காட்டிய சரஸ்வதி,

"இருபது வருஷமா இங்கதான் வேல பார்க்கறாங்க. எல்லாரும் எஸ்டேட் வேலைக்குப் போறதால, பிள்ளைங்கள எல்லாம் சாயங்காலம் ஆறு, ஏழு மணிவரைக்கும்கூட... பத்திரமா பாத்துக்குவாங்க! இந்த பஸ் எங்க ஊருக்கு எப்படி தெய்வமா இருக்கோ.. அதேபோலத்தான் இவங்களும்" என்று நன்றி பாராட்டினார்.

நான்கு மணி நேர பயணத்தில் எதிர்காற்றைக் நம் காதுக்குள் திணித்தபடியே வந்த பேருந்து, ஒருவழியாக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்தடைய...

"எப்புடி இருந்துச்சு எங்க 'முக்கா வண்டி'?! எப்படியோ... இன்னிக்கு உங்களால கண்டக்டர் அண்ணனுக்கு கூட ஒரு டிக்கெட் விழுந்துருக்கு!" என்று சிரிப்புக்கு நடுவே சொன்னபடியே விடைபெற்றார்கள் குதிரைவெட்டிக்காரர்கள்... கிராமத்துக் குசும்பு குறையாதவர்களாக!

முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!
-படங்கள் ஆ.வின்சென்ட் பால்
முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!
முக்கா வண்டி வந்துருச்சப்பேய்..!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism