என்னை, நானே மீட்டெடுக்குறதும் இது மாதிரியான சந்தர்ப்பத்துலதான். வீடு முழுக்க, மனசு நிறைய சந்தோஷத்தோட நம்ம சொந்தங்கள் நம்மள சுத்தியிருக்கிறது என்னிக்கும் கிடைக்காத, காசு கொடுத்து வாங்க முடியாத அற்புதமான விஷயமில்லியா?
ரெண்டாம் நாள்... மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம், விடிஞ்சுரும் எங்கள மாதிரி வெடலப்பசங்களுக்கு! அன்னிக்கு ஆட்டம்னா ஆட்டம்... அப்புடி ஒரு ஆட்டம் போடுவோம்ல?! வீட்டுல இருக்கற மாட்டுல நமக்குப் பிடிச்ச மாடுங்க இருக்கும். அந்த மாடுகள குளிப்பாட்டுறது இருக்கே... அதுக்கே என்ன அலப்பற விடுவோம் தெரியுமா..? ஊர்பசங்க எல்லாம் திரண்டு மாடுகளோட குளத்துலதான் கிடப்போம்.
பிறகு, மாட்ட அழகு படுத்தறதுல ஒரு போட்டியே நடக்கும். நமக்குப் பிடிச்ச கலர்ல மாட்டுக்கொம்புக்கு பெயின்ட் அடிச்சு, கழுத்துல விதவிதமா மால போட்டு, அப்படியே ஊருக்குள்ள கூட்டிட்டு வரும்போது, முகத்துல ஒரு பெருமிதம் பொங்கும் பாருங்க..!
ஆனா, இப்படிப்பட்ட விஷயமெல்லாம் இப்ப மங்கிகிட்டு வர்றதுதான் வேதனை! கூட்டுக்குடும்பம், விவசாயம் இதெல்லாம் நம்மளோட அடையாளம். அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு வர்றோம். பத்து வருஷத்துக்கு முன்ன இருந்தது மாதிரி இல்ல இப்ப எங்க ஊரு. எல்லா கிராமங்களும் தனித்துவத்தை எல்லா வகையிலயும் இழந்துட்டுதான் வருது. பாதி பேர் விவசாயத்தை விட்டுட்டு. நெலத்தை வித்து பிளாட்டுகளா மாத்திட்டாங்க. ஆனா, காலத்துக்கும் நம்மள கௌரவமா, சுயமரியாதையோட வச்சிக் காப்பாத்துற ஒரே தொழில் விவசாயம்தான். தமிழ் சினிமா என்னை தாக்குப் பிடிக்குற காலம் வரைக்கும் இருப்பேன். அதுக்குப்பிறகு விவசாயம்தான் என் தொழிலா இருக்கும். அதுல கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. இது வெறும் வார்த்தைஇல்ல... என் மனசு!
|