இதற்குள் நுழையும் முன்பாக என் அனுபவக் கதை ஒன்றைப் பேசிவிடுவோம்.
எங்கள் வீடு, மிகவும் கண்டிப்பான வீடு. வார நாள், விடுமுறை நாள், என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லோரும் காலை ஐந்து மணிக்கு எழுந்து யோகா, வாக்கிங், பேட்மிட்டன் என்று அவரவர்களுக்குப் பிடித்த உடற்பயிற்சியை செய்துவிட்டு, எட்டு மணிக்குள் குளித்து சாமி கும்பிட்டுவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பி விடுவோம்.
இந்தச் சூழ்நிலையில், எங்களின் தூரத்து உறவினர் ஒருவர், விருந்தாளியாக வந்து சேர்ந்தார். அடுத்தவர் பேசுவதை அதிகமாகக் காது கொடுத்து கேட்காத அப்பாகூட, விருந்தாளி பேசுவதை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தார். காரணம்... உலக விஷயத்தில் இருந்து உள்ளூர் விஷயம் வரை எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருந்தார் விருந்தாளி. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தினம் தினம் புதுப்புது கதைகள் சொன்னதில் குழந்தைகள் அத்தனை பேரும் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல ஆகிப் போனார்கள். ஆன்மிகம், ஜோசியம் ஆகியவற்றில் கரைகண்டவராகவும் இருந்ததால்... தாத்தா-பாட்டிகூட பெரும்பாலான நேரத்தை அவரோடு சந்தோஷமாகக் கழித்தார்கள். கிரிக்கெட், டென்னிஸ் என்று விளையாட்டுகளிலும் பெரிய கில்லியாக இருந்ததால்... எங்கள் வீட்டு வாலிபர்கள் அத்தனை பேரும் அவரையே சுற்றி வந்தார்கள்.
என்னதான் பெரிய மனிதனாக இருந்தாலும் வீக் பாயின்ட்ஸ் இல்லாமல் இல்லை. மனுஷனுக்கு சபை நாகரிகம் கொஞ்சம்கூடத் தெரியாது. வீட்டுக்கு புதிதாக யாராவது நண்பர்கள் வந்தால்கூட, பேசுவதை நிறுத்த மாட்டார். அதைவிடக் கொடுமை என்னவென்றால்... பக்கத்தில் சின்ன குழந்தைகள் இருக்கிறார்களா... இல்லையா என்றுகூட பார்க்காமல், செக்ஸ் ஜோக்ஸ் எல்லாம் அடித்துத் தொலைப்பார்.
அவர் வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே படிப்பதற்காக வெளியூர் சென்ற நான், அப்படியே வேலை, வெளிநாடு என்று பத்து வருடங்கள் கழித்துதான் விடுமுறையில் ஊர் திரும்ப முடிந்தது. அத்தனை வருடங்களாக உரிமையோடு எங்கள் வீட்டிலேயேதான் தங்கியிருந்தார் விருந்தாளி. தன்னுடைய பாணியிலேயே சத்தமாக 'தொணதொணÕவென்று பேசிக்கொண்டேஇருந்தார். எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் அப்பா, அம்மா, தங்கை, தம்பி என்று எல்லோரும் அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் முகத்தில் முன்பு இருந்த உற்சாகத்துக்கு பதிலாக சலிப்பே மேலிட்டிருந்தது.
கோயில், குளம், உபன்யாசம், கச்சேரி என்று வெளியே போய் வரும் அப்பாவும் அம்மாவும்கூட அந்தப் பழக்கங்களை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தார்கள். உறவினர் வீடு, நண்பர்கள் வீடு என்று அடிக்கடி வெளியே போய் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் அண்ணி, அண்ணனும் அதையெல்லாம் மறந்துவிட்டு இந்த விருந்தாளி சொல்லும் கதைகளை கேட்பதிலேயே நேரத்தை செலவழிப்பது தெரிந்தது. ஆக, விருந்தாளியால்... ஸாரி... வீட்டு ஆளாகிவிட்ட அந்த நபரால் மொத்தக் குடும்பமும்... சோம்பேறி குடும்பமாக உருமாறிப் போயிருந்தது. அந்த விருந்தாளியின் பெயர்... டெலிவிஷன்!
ஆம்... சேனல் மாற்றி சேனல் சீரியல் பார்க்கும் அம்மாக்களும், வீட்டில் இருக்கும் நேரத்தில்கூட டி.வி. முன் ஸ்போர்ட்ஸ், நியூஸ் என தவம் கிடைக்கும் அப்பாக்களும் 'ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கறாங்க' என்று தங்கள் பிள்ளைகளை குறை சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை.
|