எங்கள் ஹெச்.ஓ.டி. ஹோம் வொர்க் கொடுத்து, மறுநாள் அதை முடிக்காதவர்களை வகுப்புக்கு வெளியே நிறுத்தும் வழக்கமுடையவர். அன்று நானும் என் தோழியும் ஹோம் வொர்க் முடித்திருந்தும், வகுப்புக்குச் செல்ல சிறிது தாமதமாகிவிட்டதால், 'அவுட்' என்று அவர் கர்ஜிக்க, விழித்துக்கொண்டே வெளியில் நின்றிருந்தோம். சில நொடிகளில் வகுப்புக்குள் எங்கள் தோழி மாலா மயக்கம் போட்டு விழுந்திருந்தாள். ஏற்பட்ட களேபரத்தில் சந்தடி சாக்கில் நாங்களும் உள்ளே நுழைய, மாலாவுக்கு தண்ணீர் அடித்து "என்னாச்சு?" என்று கேட்டால், "காலையில சாப்பிடல" என்றாள் பரிதாபமாக.
"அவள கேன்டீனுக்கு கூட்டிட்டுப் போங்க" என்று ஹெச்.ஓ.டி என்னையும் என் தோழியையும் பணிக்க, கேன்டீனுக்கு போகும் வழியில் 'கொல்' என சிரித்தாள் மாலா. நாங்கள் புரியாமல் பார்க்க, "நான் ஹோம் வொர்க் செய்யாததால, எக்ஸ்க்யூஸ் கேட்கலாம்னு எழுந்தப்போ, பென்ச்சுல ஸிலிப்பர் மாட்டி, தடுமாறி விழுந்துட்டேண்டி. எல்லாரும் கூடிட, அப்படியே மெயின்டெயின் பண்ணிட்டேன். எப்படியோ மூணு பேரும் தப்பிச்சுட்டோம்ல!" என்று அவள் சொல்ல, இப்போது மூவருமே 'கொல்'!
பின்குறிப்பு கேன்டீனில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு அதைக் கொண்டாடினோம். இருபது வருடங்கள் ஆன பிறகும் ஐஸ்க்ரீமை பார்க்கும்போதெல்லாம் அந்த ஞாபகம்தான்!
- ஆர்.கலைச்செல்வி, கோவை
'மாட்டு'த் தோழிகள்!
|