ஆனால், வேலை தேடும் வலைதளங்களும், 'வீட்டிலிருந்தே வேலை பார்த்து டாலர்களை அள்ளலாம்' எனக் கூவும் தளங்களும் எத்தனை தூரம் நம்பகமானவை... இவற்றால் உண்மையில் பயன் இருக்கிறதா?
விடை பெற விரிவாகப் பேசுகிறார் சென்னை, கெம்பா மேனேஜ்மென்ட் கன்சல்டன்ஸி பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மாலதி...
''அலைந்து, திரிந்து வேலை தேடுவதைவிட, உட்கார்ந்த இடத்திலேயே தேடுவது சுலபமானதாக இருப்பதால், பெரும்பாலானோர் வேலை தேடித்தரும் வலைதளங்களை நாடுகின்றனர். அதில், தங்கள் விவரங்களைப் பதிவு செய்வதில் தவறில்லை. ஆனால், அதற்கு முன் அந்தத் தளம் சிறப்பானதா, அதை அதிகமானோர் பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதிகம் பிரபலமில்லாத தளங்களில் பதிவு செய்யும்போது, அதற்காக கட்டணம் கேட்டால் அது மோசடி தளமாக இருக்கலாம். ஏனென்றால், உங்கள் பயோடேட்டாவே அவர்களுக்கு காசு தரும் சொத்து. எவ்வளவு பயோடேட்டாவை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் பலம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படியிருக்க... தனியாக கட்டணம் எதற்காக?
அதேபோல, சில வலைதளங்களில் ஜூனியர் லெவெல் வேலைகளுக்கு ஆட்களைக் கேட்டால், உதாரணமாக, 'நோக்கியா கம்பனிக்கு 300 குவாலிட்டி செக்கர்ஸ் தேவை' என்ற விளம்பரம் வந்தால், அந்த தளமும் 'டுபாக்கூர்' தளமாக இருக்கலாம். ஏனெனில் நோக்கியா போன்ற பெரிய நிறுவனங்கள் எல்லாம் வளைதளங்களின் மூலம் பெரும்பாலும் 'ஹை லெவல் ஜாப்'களுக்கு மட்டும்தான் ஆட்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே, ஒரு வெப்சைட்டைத் தேர்ந்தெடுக்கும்போது அது எந்த அளவுக்கு பிரபலமானது... எவ்வளவு பேர் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையெல்லாம் அவசியமாக செக் செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்திய மாலதி, ஒரு சிக்கல் குறித்த எச்சரிக்கையையும் முன் வைத்தார்.
|