'என் வீட்டு வேலைக்காரி, கருத்து தடித்த எடுமை மாடு போன்ற தமிழ்ப் பெண்' என்று டி.வி. பேட்டியில் பேசியதற்காக மலையாள நடிகர் ஜெயராம் வீடு மீது தாக்குதல். பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஜெயராம் - செய்தி
"'அது ஜாலியாக சொன்னது அதைப்போய் பெரிதுபடுத்துகிறீர்களே...' என்று இதைப்பற்றி ஆரம்பத்தில் அலட்சியமாகக் கூறியிருந்தார் நடிகர் ஜெயராம். அவர் மட்டுமல்ல... பெரும்பாலும் சினிமாத்துறை முழுக்கவே, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் நிரம்பி இருக்கிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. காரணம்... வருகின்ற சினிமாக் காட்சிகள் எல்லாம் அப்படித்தானே இருக்கின்றன! நகைச்சுவை, கவர்ச்சி, கேலி என்ற பெயர்களில் மற்றவர்களின் உணர்வுகளைக் கிளறிப் பார்க்கும் வேலையைத்தான் அவர்கள் அதிகமாகச் செய்து கொண்டுள்ளனர்.
ஒரு பெண்ணைக் கவர்ச்சியாகக் காட்ட வேண்டுமா, உடனே 'மலையாளப் பெண் குட்டி' என்று சித்திரிப்பார்கள். விபசாரத் தொழில் செய்யும் பெண் என்றால்... வடநாட்டுப் பெண்ணாகக் காட்டுவார்கள். மலையாள சினிமாக்களில் காமெடியன் வேடம் என்றாலே, 'அண்ணாச்சி', 'பாண்டிக்காரன்' என்ற கேரக்டர்கள் வரும். வளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், குரல் மாறுபட்டவர்கள் என்று பிறவிக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களும் சினிமாக்காரர்களின் கேலிக்கு இலக்காகத் தவறுவதில்லை. கறுப்பாக, குண்டாக இருப்பவர்கள் என்றாலே கிண்டலுக்குரியவர்களாகத்தான் காட்டப்படுகிறது.
'காமெடி' என்ற பெயரில் பெண்களையும், திருநங்கைகளையும் கேவலப்படுத்துவார்கள். யாரேனும் கண்டனம் தெரிவிக்கும்போது, மன்னிப்புக் கேட்டு ஒதுங்கிக் கொள்வார்கள். அடுத்த படத்தில் அதே தவறை திரும்பவும் செய்வார்கள்.
கோமாளியாகவும் முட்டாளாகவும் ஒரு நபரைக் காட்டவேண்டும் என்றால்... உடனே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரைப் போலவோ... அல்லது படிக்காத நபரைப் போலவோ சித்திரித்துக் காட்டுவார்கள்.
|