Published:Updated:

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

Published:Updated:

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !
சூப்பர் டிப்ஸ்
வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !
வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்ளிகேஷன் முதல் அப்பாயின்ட்மென்ட் வரை ...

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

வேலை... இந்த சமுதாயம் நம்மை அங்கீகரிக்க கேட்கும் மிக முக்கிய காரணிகளில் ஒன்று! வாழ்க்கையில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள்... இந்த இடைவெளியைத் தீர்மானிக்கும் ஒற்றை வார்த்தை அது. நல்ல திறமையிருந்தும் நிலையான வேலையில் அமராததால் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டவர்களும், வேலை என்று ஒன்றை வசப்படுத்திக் கொண்டதால் தங்கள் வாழ்க்கையை ஸ்திரமாக்கிக் கொண்டவர்களும் இங்கு கண்கூடு.

எனவே, 'படிப்ப முடிச்ச கையோடு சீக்கிரமா ஒரு நல்ல வேல கிடைச்சுடணும்' என்ற பெற்றோர்களின் தவிப்புக்கும், பிள்ளைகளின் எதிர்பார்ப்புக்கும் கைகொடுக்கத் தயாரித்து அளித்திருக்கிறோம் இந்த கையேட்டை... அக்கறையுடன்!

சி.வி. சூத்திரம்!

வேலை வாய்ப்பை வசப்படுத்திக் கொள்வதன் முதல் படி, நம்மைப் பற்றிய தகவல்களை அட்டவணைப்படுத்தித் தயாரிக்கும் சி.வி. எனப்படும் 'கரிகுலம் வீட்டாய்' (curriculum vitae). அதை நேர்த்தியாகவும், முழுமையாகவும் தயார் செய்வது அவசியம். ஏனென்றால், அதுதான் அந்த வேலையை நமக்குப் பெற்றுத்தர உதவும் விசிட்டிங் கார்டு. அதைத் தயாரிக்கும்போது இவற்றையெல்லாம் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்...

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

1. பெரும்பாலானவர்கள் பெயர், படிப்பு, வேலை அனுபவம் என்று 'சி.வி'-க்கு இருக்கும் 'ஸ்டாண்டர்டு ஃபார்மட்'டையே பின்பற்றுவர். அதைத் தவிர்த்து, உங்கள் பணிக்குத் தேவையான தகவல்களை அதிகம் தாங்கும் ஒரு சி.வி-யை நீங்களே தயாரிப்பது, மற்றவர்களின் சி.வி-க்களில் இருந்து உங்களுடையதை தனித்துக் காட்டும்.

2. அனைத்து வேலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரே சி.வி-யை அளிக்காமல், சூழ்நிலையைப் பொறுத்து புதிது புதிதாக தயார் செய்து வழங்குங்கள். சோம்பேறித்தனம் இதில் வேண்டாம்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

3. இணையத்தில் சி.வி. மாதிரி படிவத்தை எடுக்கும்போது, அயல்நாட்டு மூலங்களில் இருந்து எடுக்காதீர்கள். முதல் பெயர், கடைசி பெயர், நடுப்பெயர் என்றெல்லாம் அதில் உள்ள தகவலுக்கான இடத்தை உங்களால் நிரப்ப முடியாது.

4. சி.வி. என்பது சுருக்கமானதாகவும், அந்த வேலைக்கு நெருக்கமான பல தகவல்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.

5. உங்கள் சி.வி-யில் உள்ள அனைத்து வார்த்தைகளின் அர்த்தத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அர்த்தம் புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

6. எக்காரணம் கொண்டும் பொய்யான தகவல்களைக் கொடுக்காதீர்கள். குறிப்பாக, வேலை அனுபவம் போன்றவற்றில் நீங்கள் தவறாகக் கொடுக்கும் தகவல், உங்கள் சி.வி-யின் முழு நம்பகத்தன்மையையும் பாதிக்கும்.

7. பணி அனுபவம் இருந்தால், என்ன வேலை, எந்தத் துறை, பிரிவு என்பதை எல்லாம் தெளிவாகக் குறிப்பிடுங்கள். அது நேர்முகத் தேர்வில் உங்கள் மீது அதிக அல்லது தவறான எதிர்ப்பார்ப்பு உண்டாவதைத் தவிர்க்கும்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

8. ஒருவேளை 'பணி அனுபவம் இல்லை' என்று குறிப்பிடும்பட்சத்தில், 'என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?' என்ற கேள்வி வந்தால், உண்மையைச் சொல்லுங்கள். 'அப்பாவுக்கு நடுவுல கொஞ்சம் உடம்பு சரியில்லாததால, ஆறு மாசம் அவர் பிஸினஸை கேர் எடுத்துக்கிட்டேன்' போன்ற பதிலில் உள்ள உண்மை, பொய்யான வேலை அனுபவத்தைவிட உங்கள் வாய்ப்பை பிரகாசமாக்கும்.

9. சமூக சேவை, விளையாட்டு... இவற்றில் உங்களுக்கு உள்ள அனுபவத்தையும் 'தேவையில்லை' என்று ஒதுக்காமல், குறிப்பிடுங்கள். உள்ளூர் கபடி போட்டி வெற்றிகூட உங்களின் இணைந்து செயலாற்றும் திறனுக்குச் சாட்சியாக இருக்கும்.

10. நீங்கள் குறிப்பிடும் அனைத்துத் தகவல்களுக்கும் உறுதுணையான ஆவணங்களை சி.வி- யுடன் இணைத்து அனுப்பத் தேவையில்லை என்றாலும், தயாராக இருக்கட்டும்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

11. உங்களிடம் இருக்கும் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்றவை நீங்கள் எதிர்நோக்கி இருக்கும் வேலைக்குத் தேவையான ஒரு அங்கமாக இருக்கும் பட்சத்தில், அவற்றையும்கூட கூடுதல் தகுதியாகச் சேர்க்கலாம்.

12. நீங்கள் குறிப்பிட் டிருக்கும் தகவல்களை விசாரிக்கத் தகுந்த நபரை (ரெஃபரன்ஸ்) குறிப்பிடும்போது, அவர் அந்தத் துறையில் மதிக்கப்படக்கூடியவராக இருப்பது நலம். கூடவே, உங்கள் சி.வி-யில் அவரை 'ரெஃபரன்ஸ்' என்று குறிப்பிட்டிருக்கும் விவரத்தை, சம்பந்தப்பட்டவரிடம் முன் கூட்டியே தெரிவித்துவிடுங்கள்.

13. சி.வி-யை பொதுவாக ஆரம்ப கட்டத் தகுதியிலிருந்து தற்போதைய தகுதிகள் வரை (எஸ்.எஸ்.எல்.சி. தொடங்கி...) அல்லது தற்போதைய தகுதிகளில் (லேட்டஸ்ட்டாக பெற்றிருக்கும் தகுதிகள்) இருந்து ஆரம்ப கட்ட தகுதிகள் வரை என்று இரண்டு விதமாக வரிசைப்படுத்தி எழுதுவார்கள். இதில் இரண்டாவது வகையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

14. சம்பந்தப்பட்ட வேலைக்கு நீங்கள் எந்த வகையில் பொருத்தமானவர் என்பதை விளக்கும் 'கீ லைன்ஸ்' முக்கியம். எனவே, அவற்றை 'போல்டு' அல்லது 'இட்டாலிக்' செய்யுங்கள்.

15. பெரும்பாலும், 'டைம்ஸ் நியூ ரோமன்', 'ஏரியல்' போன்ற அஃபிஷியல் ஃபான்ட்டுகளையே உபயோகப்படுத்துங்கள். அழகுக்காக மற்ற ஃபான்ட்டுகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

16. ஃபான்ட் சைஸ் '12' ஆக இருந்தால் படிப்பதற்கும், பார்ப்பதற்கும் அழகாகவும் நீட்டாகவும் இருக்கும். அந்த அளவை விட குறைவாக இருந்தால், படிப்பது கடினம்.

17. உங்கள் புகைப்படத்தை அனைத்து சி.வி-யிலும் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் கேட்டிருந்தால் மட்டும் இணைக்கவும்.

கலக்குங்கள்... குரூப் டிஸ்கஷனில்!

நீங்கள் கொடுத்த சி.வி-யில் திருப்திப்பட்டு, ஒரு நிறுவனம் உங்களை இன்டர்வியூவுக்கு அழைத்தால், முதலில் எழுத்துத் தேர்வு நடத்துவார்கள். அதில் நீங்கள் செலக்ட் ஆகிவிட்டால், அடுத்த கட்டமாக போட்டியாளர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பு கொடுத்து, அதைப் பற்றிய கருத்துக்களை குழுவுக்குள் உள்ள அனைவரையும் பரிமாறிக்கொள்ளச் செல்லும் 'குரூப் டிஸ்கஷன்' தேர்வு நடக்கும். அதில் உங்களின் பங்களிப்பு கவனிக்கப்பட்டு, 'குட்' எனில், அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 'குட்' வாங்குவதற்கு...

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

18. குரூப் டிஸ்கஷனுக்கு செல்லும்போது பொதுவான சில தலைப்புகளை எதிர்பார்த்துச் செல்வது, சரியான அணுகுமுறையல்ல. பின் அந்த தலைப்புகள் தவிர்த்து வேறு புது தலைப்புகள் வழங்கப்படும்போது, 'ஐயையோ...' என்று ஒரு பயம் கவ்விக் கொள்ளும். அது உங்கள் தன்னம்பிக்கையை குலைத்து, பெர்ஃபார்மன்ஸைப் பாதிக்கும். எனவே, முன் தயாரிப்புகளைவிட 'எந்த தலைப்பு வந்தாலும் பேசிவிடலாம்' என்ற தன்னம்பிக்கையுடன் செல்லுங்கள்.

19. தலைப்பை பற்றி உங்களுக்கு அதிகமான தகவல் தெரியும் என்பதைவிட, அதைச் சிறப்பாக வெளிப்படுத்துவதில்தான் இருக்கிறது உங்களின் சாமர்த்தியம்.

20. ஒருவேளை தெரியாத தலைப்பு வரும் பட்சத்திலும், ஏதோதோ பேசி சமாளிக்க முயலாமல், தெரிந்தவற்றை 'ஷார்ட் அண்ட் ஸ்வீட்'டாக பேசிவிட்டு முடித்துக் கொள்வது சிறப்பு.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

21. குரூப் டிஸ்கஷன்களில் பலருக்கு பயம் தொண்டையை அடைக்கும். பொதுவாக அனைத்து குரூப் டிஸ்கஷன்களிலும் 30% பேர் பேசவே மாட்டார்கள்! அதில் ஒருவராக நீங்கள் இல்லையென்றால்தான், ஃபைனல் லிஸ்ட்டுக்கு உங்கள் பெயர் போகும். எனவே... பயம், தயங்கங்களைஎல்லாம் துடைத்தெறிந்துவிட்டு தைரியமாகப் பேசுங்கள்.

22. தாழ்வுமனப்பான்மையை அகற்றுவதுடன், உடல்மொழியை மேம்படுத்திக் கொள்வதும் முக்கியம்.

23. உங்கள் கருத்தை அதிகம் முன்னிறுத்திப் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சில வேலைகளுக்கு அதிகமாக பேசுவதைவிட, அதிகமாக கவனிக்கும் திறமை உள்ளவர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், எல்லோரும் பேசுவதைக் கவனித்து உள்வாங்கி, உங்கள் கருத்தை வெளிப்படுத்துங்கள்.

24. அடுத்தவர்கள் மீது பழி சுமத்திப் பேசாதீர்கள்; அடுத்தவர்களின் பொறுமையைச் சோதிக்கும்படியும் பேசாதீர்கள்.

25. அதேசமயம், நெடுநேரமாக 'லொட லொட'வென ஒருவர் பேசும்போது, அதை அவர் மனம் நோகாமல் நீங்கள் முடிவுக்குக் கொண்டுவந்தால் அனைவரும் உங்களை கவனிப்பார்கள்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

26. அங்கு வந்திருப்பவர்களிடம் கூட்டு சேர்வது, கூட்டாக வேறு ஒருவரை நக்கலடிப்பது... இவற்றையெல்லாம் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

27. பேசும்போது நம்மைக் கவனிக்கிறார்களா... இல்லையா என அங்கே அமர்ந்திருக்கும் நிறுவன அதிகாரிகளை அடிக்கடி பார்ப்பதைத் தவிர்க்கவும்.

28. அதிகமாக உணர்ச்சி வசப்படுபவர்கள் தம்மையும் அறியாமல் சத்தம் போட்டுப் பேசுவார்கள். இதுவும் சரியல்ல. எனவே, உணர்ச்சி வசப்படுகிறோம் என்று தெரிந்தவுடனேயே ஒலி அளவோடு பதற்றத்தையும் குறைக்க முயற்சி செய்யுங்கள்.

29. பேச்சில் நகைச் சுவையை நுழைக்கும் முயற்சியில் குறிப்பிட்ட இனம், மொழி, நிறுவனம், வேலை ஆகியவற்றை நக்கல் செய்வதுபோல் உள்ள ஜோக்கை பயன்படுத்தாதீர்கள்.

30. 'இதை எல்லாம் பேசியே ஆக வேண்டும்' என்ற முடிவோடு பேசாதீர்கள். எல்லோரும் கை தட்ட வேண்டும் என்பதற்காக பேச்சை நீட்டிக்கொண்டே போகாதீர்கள்.

31. இன்டர்வியூ என்பது குரூப் டிஸ்கஷனின் தொடர்ச்சிதான்; இங்கு நீங்கள் பேசிய குறிப்புகள் உள்ளே போகும். எனவே, அங்கே மாற்றிப் பேசாதீர்கள். இந்தச் சிக்கலைத் தவிர்க்க கூடுமானவரை உண்மையே பேசுங்கள்.

கவனிக்க... நேர்முகத் தேர்வு!

குரூப் டிஸ்கஷனின் அடுத்த கட்டம், 'இன்டர்வியூ' எனப்படும் நேர்முகத் தேர்வு. இங்கு நீங்கள் பதில் அளிக்கும் விதத்தில்தான் அந்த வேலை கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் இருக்கிறது. எனவே, 'கங்கிராட்ஸ்... யூ ஆர் அப்பாயின்ட்டட்!' என்ற வார்த்தைகள் காதுகளை நிறைக்க...

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

32. 'சரி டிரை பண்ணிப் பார்ப்போம்...' என்று கிளம்பாமல், 'கண்டிப்பா எனக்கு இந்த வேலை கிடைச்சுடும்...' என்ற உறுதியோடு செல்லுங்கள்.

33. குரூப் டிஸ்கஷனைப் போல, இன்டர்வியூவுக்கும் முன் தயாரிப்பு உதவாது. அதிகபட்சம் 25% உங்கள் தயாரிப்பில் இருந்து கேட்கப்படலாம். எனவே, 'எதையும் சமாளிப்பேன்' என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள்.

34. பல பொறியியல் கல்லூரிகளில் நேர்முகத் தேர்வுக்கு என்றே தனிப்பயிற்சி தருவதாக பணம் பார்க்கிறார்கள். நேர்முகத் தேர்வுக்கென்று ஒரு நிரந்தர 'ஃபார்மட்'டை எந்த நிறுவனமும் வைத்திருப்பதில்லை. எனவே, பணத்தைக் கொட்டி அத்தகைய பயிற்சி எடுக்க வேண்டுமா என்பதை ஒன்றுக்கு, நான்கு தடவை யோசித்து முடிவெடுங்கள்.

35. மேலும், 'இதுதான் நேர்முகத் தேர்வு' என்று அந்த பயிற்சினால் உங்கள் மனதில் ஒரு ஃபார்மட் பதிவாகிவிட்டது என்றால், பின் அதையே எதிர்பார்த்து இன்டர்வியூவுக்குச் செல்லும்போது, ஏமாற்றமும் குழப்பமும் மிஞ்சுவதுடன், அந்த 'மைண்ட் பிளாக்' மற்ற இன்டர்வியூக் களிலும் தொடரும்.

36. இன்டர்வியூ செய்பவர்களை எப்படி அழைப்பது என்பதே பெரிய சிக்கலாக பலருக்குத் தெரியும். இந்தியர் களை 'சார்' என்று அழைக்கலாம். 'என் முதல் பெயரால் கூப்பிடு' என்று சொல்லும் அமெரிக்கரை, அவர் சொன்னபடியே அழைக்கலாம். மரியாதை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை... குறையக் கூடாது.

37. நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் மட்டுமின்றி, அவர்களின் உள்ளுணர்வும் உங்களை சில கேள்விகள் கேட்கத் தூண்டும். 'ஏன் இந்தக் கேள்வி?' என்று யோசிக்காமல், பதில் சொல்லுங்கள்.

38. கூடவே, தேர்வாளர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். எனவே, 'சம்பந்தமே இல்லாம கேள்வி கேட்கறாங்களே?' என்று யோசிக்காமல், அவர்கள் எப்படி அந்த கேள்வியைச் சம்பந்தப்படுத்துவார்கள் என யோசிப்பது நலம்.

39. 'இன்னும் எத்தனை ஆண்டுகள் இங்கே வேலை பார்ப்பீர்கள்?' என்பதை அறிய 'எப்போது திருமணம் செய்வதாக உத்தேசம்?', 'திருமணத்துக்குப் பின் வேலை பார்க்கும் யோசனை உண்டா?' என சுற்றி வளைத்தும் கேள்விகள் கேட்கலாம். கேள்வியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.

40. கூடவே, 'எத்தனை ஆண்டுகள் இங்கு வேலை பார்ப்பீர்கள்?' என்று நேரடிக் கேள்வி வந்தால், '20 வருடம்', '10 வருடம்' என்றெல்லாம் இன்றைய நடைமுறைக்கு பொருந்தாத பதில்களைச் சொல்லாதீர்கள். 'குறைந்தது 3 ஆண்டுகளாவது இருப்பேன். பின்பு எனக்குக் கிடைக்கும் திருப்தி, உயர்வு இவற்றைப் பொறுத்து முடிவு செய்வேன்' என எண்ணத்தை பகிர்வது நல்லது. இது தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

41. மொழி அறிவு என்பது எல்லா வேலைகளுக்கும் முக்கியமல்ல. அதிக ஆங்கில அறிவு சில வேலைகளுக்கே எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், தொடர்பு கொள்ளும் திறன் அனைத்துக்கும் முக்கியம் என்பது நினைவில் இருக்கட்டும்.

42. தொழில்நுட்பத் துறையில் நேர்முகத் தேர்வு நடக்கும்போது, சமயங்களில் தேர்வு செய்ய வந்திருப்பவர்களில் சிலர் தொழில்நுட்ப அறிவு குறைவானவர்களாகவும் இருக்கலாம். எனவே, இன்-டீட்டெய்லாக போகாமல், 'என்ன பண்ணீங்க?' என்று அவர்கள் மேலோட்டமாக கேட்கும்போது, அவர்களுக்குப் புரியும்படி எளிமையாக விளக்குங்கள்.

43. 'மன அழுத்தத்தைக் கையாள்வது' என்பது நேர்முகத் தேர்வின் முக்கிய அம்சம். உங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கும் கேள்விகளும் வரலாம்... எதற்கும் தயாராக இருங்கள்.

44. 'உங்களுக்கு ஏன் இந்த வேலையைக் கொடுக்கணும்?' போன்ற கேள்விகளுக்கு, குடும்ப கஷ்டம், உங்கள் நேர்மை... இதைஎல்லாம் விளக்க முற்படாமல்... உங்களின் தகுதி, உங்களை அமர்த்தினால் நிறுவனத்துக்கு என்ன லாபம் என்பதை மறைமுக மாக உணர்த்தும்படி பேசுங்கள்.

45. நேர்முகத் தேர்வு முடிந்து வந்த உடன், வாசலிலேயே கமென்ட் அடிப்பது, உடனே ஓடிப்போய் சிகரெட் பிடிப்பது, அரட்டை அடிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். கேம்பஸை விட்டு வெளியேறும் வரை நீங்கள் கண்காணிக்கப்படுவதாகவே உணருங்கள்.

அலுவலகத்தில் கடைபிடிக்க வேண்டிய

டூ'ஸ் அண்ட் டோன்ட்'ஸ்!

சி.வி., குரூப் டிஸ்கஷன், இன்டர்வியூ என்று படிகள் தாண்டியாகிவிட்டது. நீங்கள் பணியிலும் அமர்ந்தாகிவிட்டது. இனி அந்த பணிச்சூழலுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது, அவசியம். முதலில், 'இங்கு 'நான்' மட்டும் பணிபுரியவில்லை. பலர் சேர்ந்து ஒரே சூழலில், ஒரே நேரத்தில் பணிபுரிகிறோம்' என்பதை உணருங்கள். இப்படி ஒரு குழுவாக வேலை செய்யும்போது, நீங்கள் ஒரு சிறந்த பணியாளராக உங்களை மெருகேற்றிக்கொள்ள அவசியமான டூ'ஸ் அண்ட் டோன்ட்'ஸைப் பற்றித் தெரிந்துகொள்வோமா..?!

முதலில், செய்யவேண்டியவை...

46. 9.30 மணிக்கு ஆபீஸ் என்றால், அந்த நேரத்துக்கு உங்கள் ஸீட்டில் ஆஜராகிவிடுங்கள். அந்த 'பங்சுவாலிட்டி'யே உங்களை கம்பீர நடை போட வைக்கும்.

47. ஸீட்டில் வந்து உட்கார்ந்ததும் பரபரக்க வேலையை ஆரம்பிப்பதை விட, சில நிமிடங்கள் நிதானமாக உட்கார்ந்துவிட்டு வேலையைத் தொடங்குங்கள்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

48. இன்று என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும்; எதை முதலில் வேண்டும் எதை அடுத்து முடிக்க வேண்டும் என்று மனதுக்குள் பட்டியலிட்டு, அந்த வரிசையிலேயே அந்த நாளை முடியுங்கள்.

49. வீட்டுக்குக் கிளம்பு முன், காலையில் பட்டியலிட்ட வேலைகளில் எவ்வளவு முடித்திருக்கிறோம், எதைச் சரியாக முடிக்கவில்லை/முடியவில்லை, ஏன் சரியாக முடிக்கவில்லை/முடியவில்லை என்பதை நீங்கள் சீர்தூக்கிப் பார்ப்பது முக்கியம். கட்டாயம் இதைச் செய்யுங்கள். இதுதான் வளர்ச்சியின் வாசல்படி!

50. உங்களுடன் சேர்ந்து பணிபுரிபவர்களின் வேலையின் தன்மை, அவர்கள் பணியாற்றும் விதம்... இதெல்லாம் பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதைவிட, அமைதியாக 'அப்சர்வ்' செய்யுங்கள், புரிந்து கொள்ளுங்கள்.

51. அலுவலகத்தில் உங்களின் பணி என்ன, அதை எப்படி செய்ய வேண்டும், உங்களுக்கு முன்பு அந்த இடத்தில் பணியாற்றியவர் எப்படி அதைச் செய்துள்ளார் என்பதை எல்லாம் சரியாகக் கேட்டு தெளிவு பெற்றதும், வேலையை ஆரம்பியுங்கள். ''நான் இப்படினு நெனச்சு... அப்படி பண்ணிட்டேன்'' என்ற தர்ம சங்கடத்தில் நெளிய வேண்டிய சூழல் உருவாகாது.

52. உங்களுடன் பணிபுரிபவர்களை தொடர்பு கொள்ளும் காண்டாக்ட் நம்பர், இ-மெயில் அட்ரஸ் எல்லாம் கேட்டுத் தெரிந்து எழுதி வைத்துக் கொண்டால் சரியான நேரத்தில் உதவும்.

53. எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களோ, அந்த நிறுவனத்தின் 'விஷன்', 'மிஷன்' பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால்தான், அதையட்டி திறமையாக பணிபுரிய இயலும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

54. உங்களுடன் பணிபுரிபவர் வேலையில் ஏதாவது பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் செய்திருந்தால், மனம் திறந்து பாராட்டுங்கள். உங்களுக்கும் தூக்கி விடும் 'ஏணி'யாக பலர் கிடைப்பார்கள்.

இனி, செய்யக்கூடாதவை...

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

55. பணியில் சேர்ந்தவுடனேயே உங்கள் விருப்பு, வெறுப்புகளை செய்கைகளின் மூலம் பதிவு செய்யாதீர்கள். உங்களின் விருப்புகளும் வெறுப்புகளும் அங்கு யாருக்கும் தேவை இல்லை... உங்கள் வேலைதான் முக்கியம்.

56. உங்கள் அலுவலகத்தின் சக தோழர்/தோழி சில விஷயங்களை சொல்லும்போது பொறுமையாகக் கவனியுங்கள். 'இவ சொல்லி நாம் கேட்கணுமா' என்கிற மனோபாவம் வேண்டாம்.

57. நீங்கள் செய்யும் வேலையில் ஏதேனும் பிரச்னை வந்தால் அதில் 'எக்ஸ்பர்ட்'டாக இருக்கும் உங்களுடன் பணியாற்றும் சகாவிடம் பகிர்ந்து தீர்வு தேடுங்கள். 'என் பிரச்னையை நானே பார்த்துக்குறேன்' என்று இடியாப்பச் சிக்கலை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

58. ஒருவரை பற்றி இன்னொருவரிடம் தவறாக விமர்சிக்காதீர்கள். இன்று இல்லாவிட்டாலும் இன்னொரு நாள் அந்தத் தவறான விமர்சனம் உரிய நபரை சென்றடையும் என்பது நினைவில் இருக்கட்டும்.

59. செல்போன், ஃபேஸ்புக், வெட்டி அரட்டையில் அலுவலகத்தின் நேரத்தை நீங்கள் வீணடித்தால், அது தார்மிக ரீதியாகக் குற்றம். அதனால் உங்கள் மேல் 'பிளாக் மார்க்' குத்தப்படுவதற்கு நீங்களே காரணமாக ஆவீர்கள்.

60. 'இந்த வேலைய மட்டும் தான் செய்வேன்' என்று எதிலும் ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டு (ரிஜிட்) இருந்தால், முன்னேற்றத்தின் பாதையை நீங்களே முடக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

61. வீட்டு கவலைகளையும், டென்ஷனையும் மூட்டைக் கட்டிக்கொண்டு அலுவலகம் வராதீர்கள். ஆபீஸ், வீடு இரண்டையுமே அது நரகமாக்கும்.

புலம்பல்களை ஒழியுங்கள்... புரமோஷனைப் பிடியுங்கள்!

தனிநபராக மிகுந்த திறனுடன் வேலை செய்தாலும், 'நான் நல்லாத்தான் வேலை பாக்குறேன்... ஆனா, எனக்கு இன்கிரிமென்ட்டும் கெடைக்க மாட்டேங்குது புரமோஷனும் கெடைக்க மாட்டேங்குது! ஆனா, நேத்து வந்தவங்க எல்லாம் 'சர் சர்'னு எங்கயோ போறாங்க...' என்று புலம்புபவர்கள் கண்டிப்பாக, படிக்க வேண்டியது...

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

62. தங்கள் வேலையில் உச்சத்தைத் தொட்டு இருப்பவர்கள் எல்லாம், 'இது எனக்குச் சாப்பாடு போடும் வேலை' என்று கஷ்டப்பட்டுச் செய்யாமல், 'இந்த வேலை செய்வதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்... ஐ லவ் மை ஜாப்' என்று இஷ்டப்பட்டுச் செய்வதில்தான் அந்த வேலையில் வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்கள். அதை நீங்களும் முயற்சி செய்யலாம்.

63. ஒரு வேலையில் 'ஒட்டி'க்கொண்டிருப்பது, 'ஓட்டி'க்கொண்டிருப்பது இதெல்லாம் வேதனை தரும் விஷயங்கள். மாறாக, உங்களுக்குப் பிடித்தமான வேலையைச் செய்யுங்கள். அது அந்த வேலையை அதிகத் திறனோடு செய்ய வழி வகுக்கும்.

64. ''இந்த வேலையைப் பார்ப்பதால்தான் எனக்கு உடம்பு முடியாமல் போச்சு... டென்ஷன்'' என்று உங்களை வேலையைக் குறைசொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அப்படிச் சொல்பவராக இருந்தால் முதலில் அதை நிறுத்துங்கள். அல்லது உங்களை துன்புறுத்தும் அந்த வேலையிலிருந்து விலகுங்கள்.

65. உங்கள் பலம் எது, பலவீனம் எது என்பது மற்ற யாரையும்விட உங்களுக்கு மட்டுமே நன்கு தெரியும். ஆகையால் உங்களுக்குப் பொருத்தமான வேலையை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 'சேல்ஸ் ரெப்' வேலையில் திறமையாக, வசீகரமாகப் பேசுவதுதான் முதலீடு. 'மருந்துக்கும் எனக்கு பேச வராது' என்பவர்கள் 'சேல்ஸ் ரெப்'பானால் வேலை மட்டும் கசக்காது; வாழ்க்கையே கசக்கும்.

66. சிலருக்கு 'ரொட்டீனாக' ஒரே வேலையைத் தொடர்ந்து செய்வதில் சலிப்பு உண்டாகும். செய்யும் வேலையில் சலிப்பு வந்துவிட்டால்... உங்கள் திறமை, அனுபவம், குவாலிஃபிகேஷன் எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

'குட் எம்ப்ளாயி' ஆக..!

''எத்தனை கம்பெனி மாறினாலும், பத்தோட பதினொண்ணாகவே வேலை பார்க்கறேன். 'பளிச்'னு மேலிட கவனித்தை என் பக்கம் திருப்ப முடியலையே...'' என்ற கவலை நிறைய பேரின் மனதுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். கவலை வேண்டாம்... உங்கள் ஜாப் ரெக்கார்டில் ஸ்டார் வாங்க, இந்த டிப்ஸ்களை உள் வாங்கிக்கொள்ளுங்கள்!

67. 'காலம் பொன் போன்றது' என்ற பழமொழியை பள்ளிப் புத்தகத்தோடு தூக்கி எறிந்தவர்கள், அதை கண்டிப்பாகத் தூசி தட்டி, மனதில் ஒட்ட வைத்துக்கொள்ள வேண்டும். நேரம் தவறாமல் வருகிறவர்கள்... அன்று முழுவதும் வேலையில் இடறுவதே இல்லை. எப்போதும் லேட்டாக வருபவர்கள், நல்ல உழைப்பாளிகளாக இருந்தாலும்... மேலதிகாரியின் 'குட் புக் ஆஃப் ரெக்கார்ட்'ல் அது பதிவாகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

68. உற்சாகமாகப் புது விஷயங்களை எடுத்துச் செய்யுங்கள். மற்றவர்கள் செய்ய மறுத்த, செய்ய விரும்பாத ஒரு 'நல்ல வேலை'யை உங்களிடம் கொடுத்தால்... 'இதை நான் எதற்காக செய்ய வேண்டும்?' என்று நினைப்பதைத் தவிர்த்து, 'இதை நான் முடித்தால் என்ன?' என்று செய்து பாருங்கள். அதே 'குட் புக் ஆஃப் ரெக்கார்டில்' உங்கள் பாஸிட்டிவ் மனநிலை பதிவாகும். அதன் பலன் எதிர்பாராத நேரத்தில் பல மடங்காகக் கிடைக்கும்.

69. நீங்கள் நிறுவன வளர்ச்சிக்காக ஒரு நல்ல ஐடியாவைக் கொடுக்கிறீர்கள். அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை... அல்லது நிராகரிக்கிறார்கள். இதேபோல் இரண்டாவது முறை, மூன்றாவது முறை என நீண்டு கொண்டே போனாலும் மனம் தளராதீர்கள். நான்-ஸ்டாப்பாக உங்கள் முயற்சியைத் தொடருங்கள். அது தலைமைப் பண்பை நீங்கள் தொட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் கண்ணாடி.

70. ஆபீஸ் நேரம் முடிந்ததும்கூட ஒரு வேலையை முடிக்க வேண்டிய அவசரத்தில் உட்கார்ந்து பணிபுரிகிறீர்கள். இன்னொருவர் பங்கிட்டு செய்தால் சீக்கிரம் முடிந்து விடும் என்று நினைக்கிறீர்கள். ஆனால், அவர்கள் எல்லாம் வீட்டுக்குப் பறந்து போகிறார்கள். அந்த நேரம் உங்கள் கண்களில் கண்ணீர் தளும்பி நிற்கிறதா..? இதேமாதிரி ஒரு சூழ்நிலையில் நீங்கள் ஒரு டீம் மெம்பராக இன்னொருவருக்கு உதவியிருக்கிறீர்களா என்பதை மட்டும் யோசித்து பாருங்கள். ஆம், எனில் நீங்கள் 'குட் எம்ப்ளாயி'.

71. உங்களுடன் பணிபுரிபவர்களைப் பற்றியும், உங்கள் நிறுவனத்தைப் பற்றியும் நீங்கள் கூறும் நெகட்டிவ் வார்த்தைகளால் உங்கள் நிறுவனத்துக்கு நஷ்டமில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். மாறாக... உங்களால்தான் நிறுவனத்துடன் ஒட்ட முடியாமல், பிரகாசிக்க வாய்ப்பில்லாமல் போய் ஒரே ஸீட்டில் பலகாலம் உட்கார்ந்திருக்கும் நிலைக்கு ஆளாவீர்கள்.

இவற்றிலும் அக்கறை எடுங்கள்!

நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் உங்கள் பணித்திறமை தவிரவும், சுமுக உறவுக்கு சில பண்புகள், அடிப்படை நாகரிகங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவற்றிலும் கவனம் தேவை...

72. நம் வெற்றியும், தோல்வியும் உழைப்பில் மட்டு மல்ல, நமது நடத்தையிலும் உள்ளது என்பதை மறவாதீர்கள். எனவே, சக அலுவலக நண்பர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையில் இம்மியளவும் குறையாதீர்கள்.

73. அலுவலகத்துக்கு லீவ் எடுக்கப் போகிறீர்கள் என்றால் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தெரிவித்து விடுங்கள். அடிக்கடி விடுமுறை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

74. ஒருவேளை அது நீங்கள் போய்த்தான் முடிக்க வேண்டிய வேலை... ஆனால், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால்... உண்மையான சூழ்நிலையை அலுவலரிடம் விளக்குங்கள். மாற்று வழியாக என்ன செய்யலாம் என்பதையும் சொல்லுங்கள். எப்போதும் மதிக்கப்படுவீர்கள்.

75. அலுவலக வேலைக்காக உங்களுக்கு மொபைல் போன் கொடுத்திருக்கிறார்கள் என்றால் காரணமின்றி அதை ஆஃப் செய்து வைத்து, அலுவலக அவசரத்துக்கு போன் செய்பவர்களின் எரிச்சலுக்கு ஆளாகாதீர்கள்.

76. எல்லோருடனும் முடிந்தவரை சுமுக உறவுடன் இருந்துவிட்டால்... எப்போதும் நன்மை. 'ஐயோ அவரா... சரியான சிடு மூஞ்சியாச்சே?!' என்பது போன்ற இமேஜை உருவாக்காதீர்கள். நம் அவசரத்துக்கு யாரும் ஆதரவாக கை நீட்ட மாட்டார்கள்.

77, அலுவலகத்தில் கொடுக்கும் அப்பாயின்ட்மென்ட் லெட்டர், சாலரி ஸ்லிப், போனஸ் ஸ்லிப், புரமோஷன் லெட்டர்... என ஒவ்வொரு தாளையும் பத்திரப்படுத்தி ஃபைல் பண்ணி வையுங்கள்.

கேரியர் மட்டுமல்ல... கேரக்டரும் முக்கியம்!

இன்றைய சூழலில் பணியிடங்களில் பெண்களின் சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது, வரவேற்புக்குரியது. கூடவே, அவர்கள் அங்கு சந்திக்கும் பிரச்னைகளும் அதிகரித்து வருவது, வருத்தத்துக்குரியது. அவற்றையெல்லாம் புறந்தள்ளி முன்னோக்கிச் செல்ல..

78. அலுவலக ஆண் நண்பர்களுடன் சிநேகமாக இருப்பது தவறில்லை. ஆனால், அதுவே மற்றவர்கள் 'கிசுகிசு'க்கும் டாபிக்காக உங்கள் நட்பு ஆகிவிடாதபடி, கண்ணியமாகத் தொடருங்கள் உங்கள் நட்பை.

79. ஒரு ஆணுடன் பேசும்போது அவருடைய கண்களைப் பார்த்து தைரியமாகப் பேசுங்கள். நாணிக் கோணி பேசுவதற்கு அவர் நம் நெருங்கிய உறவில்லை என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

80. வசீகரமான ஆடையைவிட கம்பீரமான ஆடை அணிந்தவர்களுக்கு எப்போதும் முதல் மரியாதை உண்டு. எனவே, ஃபேஷன் என்ற பெயரில் உடலை அப்பட்டமாகக் காட்டும் ஆடைகளைத் தவிர்த்து விடுவது, உங்களைப் பற்றிய 'பாஸிட்டிவ்' இமேஜை உருவாக்கும்.

81. உள்ளாடைகள் வெளியே தெரியாமல் ஆடை அணியப் பழகுங்கள். 'வெளியே தெரிகிறது' என்று உணர்ந்தால்... அடுத்த நொடியே அதை ரெஸ்ட் ரூமுக்குச் சென்று சரிசெய்து கொள்ளுங்கள்.

82. உங்களிடம் தவறான நோக்கத்தில் ஒருவர் பேசுகிறார் என்பதை உணர்ந்த உடன் அழுது கூப்பாடு போடாதீர்கள். 'நீங்கள் நினைக்கும் ஆள் நானில்லை' என்று தைரியமாக எடுத்துச் சொல்லுங்கள்.

83. பாலியல் தொந்தரவுகள், சீண்டல்களுக்கு ஆட்பட்டால் அந்த பணியிடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாறுவது தவறு. இடம் மாறினாலும் மனித குணங்கள் மாறுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, முடிந்தவரை அவருடன் கழிக்க வேண்டிய தருணங்களைத் தவிருங்கள். தொல்லை அப்படியும் தொடர்ந்தால், மேலதிகாரியிடம் புகார் செய்யுங்கள்.

84. உங்கள் அந்தரங்க விஷயங்கள், குடும்ப விஷயங்கள், கணவன் - மனைவி பிரச்னைகள் குறித்து எல்லோரிடமும் உளறிக் கொண்டிருக்காதீர்கள். 'பொண்ணு அப்போ வீட்டுல திருப்தியா இல்ல...' என்று அதுவே உங்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கு அவர்களுக்கு துருப்புச் சீட்டாகலாம்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

85. உங்கள் அலுவலக நண்பரைக் காதலிக்கிறீர்கள் என்றால், ஆபீஸில் உட்கார்ந்து அடுத்த ஸீட்டில் இருக்கும் அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருக்காதீர்கள். அலுவலகத்துக்கு வெளியே பொங்கட்டும் உங்கள் காதல்.

வேலை தேடும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கவனத்துக்கு!

படிப்பு முடிந்ததும் வேலை தேடும் பிள்ளைகளுக்கு, பெற்றோர் ஊன்றுகோலாக இருந்தால், அவர்களின் வாழ்க்கையோடு சேர்த்து, உங்கள் மனமும் பிரகாசமாகும். ஆனால், மாட்டை விரட்டும் தார்க்குச்சியாக அந்தப் பெற்றோர் இருந்தால்... பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடைவெளி அகன்று, பெரிய பள்ளமாகி மீளவே முடியாமல் போகலாம்! வேலை தேடும் உங்கள் பிள்ளைகளுக்கு ஊன்றுகோலாகவே இருக்க...

86. இந்தப் படிப்பு படித்தால் உடனே வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் பல ஆயிரங்களையும், லட்சங்களையும் தாரை வார்த்துதான் உங்கள் பிள்ளைகளை படிக்க வைத்திருப்பீர்கள் என்பது மறுப்பதற்கில்லை. அதற்காக படித்த முடித்த உடனேயே 'கை நிறைய' சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற உங்களின் எதிர்ப்பார்ப்பை, உங்கள் பிள்ளையின் மன, மானப் பிரச்னையாக்குவதைத் தவிர்த்து விடுங்கள்.

87. உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அறிந்தவர்கள் என பலரிடம் உங்கள் பிள்ளைகளின் படிப்பு தகுதி பற்றி பாஸிட்டிவ்வாகச் சொல்லுங்கள். இன்றைய விளம்பர உலகில், இம்மாதிரி 'வாய் வழி' கம்யூனிகேஷனுக்கு இப்போதும்கூட பெரிய பலன் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

88. செய்தித்தாள்களை வாங்கிப் படியுங்கள், பிள்ளைகளிடமும் கொடுங்கள். 'எம்ப்ளாய்மென்ட் வேகன்ஸி' பக்கங்களை நீங்களும் தவறாமல் புரட்டுங்கள். அப்போதுதான் எந்த மாதிரியான வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதுபற்றி நீங்களும் தெளிவாக முடியும்.

89. 'இவன் கவர்மென்ட் வேலைக்கு டிரை பண்ணினா என்ன...' என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதற்கான பிள்ளையார்சுழியை நீங்களே போடுங்கள். போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அது, 'அம்மா, அப்பா நம்ப மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க' எனும் பாஸிட்டிவ் எண்ணத்தை பிள்ளைகளிடம் உண்டு பண்ணும். அவர்களது பொறுப்பு உணர்வை அதிகப்படுத்தும் மனவியல் வழி இது!

90. ''உனக்குப் பின்னாடி படிப்ப முடிச்சவன் எல்லாம் பெரிய வேலைக்கு போயிட்டான். இன்னும் நீ ஊற சுத்துற'' என்பது போன்ற வார்த்தைகள் தரும் மனவலி அளவிட முடியாதது. அந்த வலியை எப்போதும் அவர்களுக்குத் தராதீர்கள். மிக முக்கியமாக... பிறருடன் ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்த்திடுங்கள்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

91. ''நீ வேலைக்குப் போனா... அப்பாவுக்கு ஃபைனான்ஷியல் சப்போர்ட்டா இருக்கும்'' என்று இதமாகச் சொல்லுங்கள். ''இவன் வேலைக்கு போனாத்தான் என்னால் நிம்மதியா மூச்சுவிட முடியும்'' என்று சொல்லி அவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்காதீர்கள்.

92. இந்த மன அழுத்தத்தின் வலி தாங்காமல் பொருத்தமில்லாத வேலையில் சிக்கித் தடுமாறி, அவர்கள் பிரகாசிக்கவே வழி இல்லாமல் போகலாம். இது பலரின் அனுபவ மொழி.

93. வேலை இல்லை என்ற காரணத்துக்காகவே வீட்டில் உள்ள மற்ற பிள்ளைகள் அவரை இழிவாக, மரியாதைக் குறைவாக நடத்துவதை அனுமதிக்காதீர்கள். கண்டிப்பாக, ஒரே வீட்டுக்குள் 'பேதம்' பார்க்காதீர்கள். 'விபரீத முடிவுகளுக்கு முதல் படி... பேதம் பார்த்தல்' என்கிறார்கள் 'மனம்' படித்த மருத்துவர்கள்.

94. ''உனக்குச் சீக்கிரம் வேலை கிடைச்சுடும், நம்பிக்கையா இரு. நல்ல வேலை கிடைக்கும்வரை பொறுமையா இரு'' என்று நல்ல வார்த்தைகளை அவ்வப்போது விதையுங்கள். நிச்சயம் பயன்மிகுந்த விளைச்சல் கிடைக்கும் என்பது பலரின் வாழ்வியல் உண்மை.

கோர்ஸ்கள்... கவனத்துக்கு!

இன்றைய இந்திய பொருளாதார மாற்றத்தினாலும், சில துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் அந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகம் உருவாக்கப்படும் என்கிறார்கள் அவற் றைக் கூர்ந்து நோக்கும் ஆய்வாளார்கள். அந்தத் துறைகள் சார்ந்த படிப்புகள் தமிழக கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப் படுகின்றன. பெற்றோர்களின் ஆலோசனைக்கும் பிள்ளைகளின் பரிசீலனைக்கும் அவற்றில் சில இங்கே...

95. கட்டுமானத்துறையில் வளர்ச்சி இருந்து கொண்டுள்ளது என்பதை ரியல் எஸ்டேட்டின் பெரும் வளர்ச்சி உணர்த்துகிறது. சாலை, நீர்த்தேக்கம், அணை கட்டுமானங்கள் சார்ந்த பொறியியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிப்புகளுக்கு வாய்ப்புண்டு.

96. இயற்கை வள மேலாண்மை தொடர்பான படிப்புக்கும், பெட்ரோலியம் இன்ஜினீயரிங், மரபு சாரா எரிசக்தி தொடர்பான தொழில்நுட்ப படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக சோலார் எனர்ஜி, காற்றாலை போன்ற துறைகளுக்குத் தொழிற் படிப்பு படித்த வர்கள் அதிக அளவில் தேவைப் படுவார்கள்.

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !

97. விவசாயத்துறையின் மேற்படிப்பான 'ஜெனடிக்ஸ்', 'ப்ளான்ட் பிரீடிங்' துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. இன்று எல்லா உணவுப் பொருட்களும் 'பேக்' செய்யப்பட்டு விற்கப்படுவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால்... உணவுப் பதப்படுத்துதல் மற்றும் உணவு சேமிப்புத் துறை சம்பந்தமான படிப்புக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் உண்டு.

98. ஊடகம் சார்ந்த தொழில்நுட்பப் படிப்புக்கு வேலை வாய்ப்பு உண்டு. பத்திரிகைகள், எஃப்.எம். ரேடியோ, டி.வி, இ-பத்திரிகைகள், சினிமா தொழில் சார்ந்த கலைஞர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்.

99. பொழுதுபோக்கு பூங்காக்கள் (Amusement Park, Theme park) , விளையாட்டு, சுற்றுலா மையங்கள், போன்றவை உள்ளடங்கிய பொழுதுபோக்குத் துறையும், அனிமேஷன் துறையும் வரும் காலத்தில் அகன்று விரியும்.

100. ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் துறை சார்ந்த கல்வி கற்றவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு.

வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா வேகமாக முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதால்... பயோ டெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் துறையில் உயர்கல்வி, தொழில் கல்வி கற்றவர்களுக்குக் கம்பீரமான வாய்ப்புகள் உண்டு.

'ஐ.டி. துறை..?' என்று புருவம் சுருக்குபவர்களுக்கு... இன்று ஐ.டி-யின் தொழிற் வாய்ப்புகள் ஆராயப்பட வேண்டிய பெரும் விஷயமாகிவிட்டது என்பதை அரசும், நிபுணர்களும் ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளார் கள். ஸோ ப்ளீஸ் வெயிட்!

அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்களும்... புரமோஷன் லெட்டர்களும் வெகு சீக்கிரம் உங்கள் கைகளில் தவழ வாழ்த்துக்கள்!

தொகுப்பு நாச்சியாள், என்.திருக்குறளரசி, இரா.மன்னர்மன்னன்

படங்கள் எம்.உசேன், ஆ.முத்துக்குமார்

தொகுப்புக்கு உதவியவர்கள்

டாக்டர் கார்த்திகேயன், இயக்குநர், கெம்பா ஸ்கூல் ஆஃப் ஹெச்.ஆர்., சென்னை

சிவகுமார், சி.ஈ.ஓ., கேபிட்டல் மார்க்கெட்டிங் சர்வீசஸ், சென்னை

வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !
 
வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !
வேலை வாய்ப்பு சிறப்பிதழ் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism