எங்கள் தமிழ்ப் பேராசிரியர், அவருடைய நகைச்சுவை பேச்சின் காரணமாக மாணவர்களிடம் ஏக பிரபலம். எங்கள் கல்லூரியில் குடிநீர் குழாய் இல்லாததால் ஒவ்வொரு வகுப்புக்கு வெளியேயும் ஒரு டிரம்மில் தண்ணீரும், டம்ளர்களும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு வகுப்பில் டம்ளர்கள் வைக்கப்படாததால், அந்தத் துறை மாணவர்கள் கோபத்துடன் முதல்வரிடம் முறையிட கும்பலாகச் சென்றனர். இடையே எதிர்ப்பட்ட தமிழ்ப் பேராசிரியர், மாணவர்களிடம் விஷயத்தை விசாரிக்க, அவர்களும் விளக்கினார்கள்.
பேராசிரியர், ''சரி நீங்கள் எந்தத் துறை மாணவர்கள்?'' என்று விசாரிக்க, ''விலங்கியல் துறை ஐயா'' என்று கோரஸாகக் கூறினார்கள் மாணவர்கள். உடனே அவர், ''அதனால்தான் பணியாளர் உங்களுக்கு டம்ளர் தேவையில்லை என்று நினைத்துவிட்டார் போல!'' என்று கூற, கோபத்துடன் சென்ற மாணவர்களிடம் குபீர் சிரிப்பு. பின், ''பியூனிடம் சொன்னாலே இந்தப் பிரச்னை சரியாகிவிடும். இதற்கு எதற்கு பிரின்ஸிபால்?'' என்று அந்த மாணவர்களை கூல் செய்து, கிளாஸுக்கு அனுப்பி வைத்தார்!
- ஆர்.விஜயலட்சுமி, கடலூர்
இந்தப் பகுதிக்கு உங்கள் கல்லூரி அனுபவங்களையும் எழுதி அனுப்பலாம். முகவரி 'ஃப்ளாஷ்பேக்'
அவள் விகடன், 757, அண்ணாசாலை சென்னை-600 02 |
|