"சுமார் பதினைந்து வருஷத்துக்கு முன்ன இருந்துதான் இந்த மாற்றம்.." என்று அந்த 'மாற்றங்களை' பட்டியலிட்டுப் பேச ஆரம்பித்தார் பேராசிரியரும், கவிஞருமான மணிவண்ணன்...
"நானெல்லாம் பிறந்து வளர்ந்தது நீலகிரி மண்லதான். அப்போவெல்லாம் மதியம் பன்னிரண்டு மணிக்குகூட வெடவெடனு உடம்பு ஆடற அளவுக்கு குளிர் அடிக்கும். ராத்திரி எட்டு மணி ஆகிட்டாலே குன்னூர், ஊட்டியிலயெல்லாம் கதவை இழுத்து சாத்திட்டு தூங்க ஆரம்பிச்சிடுவாங்க. அதனாலதான் 'தூங்கும் நகரம்'னு சொல்வாங்க. இப்போ மிட் நைட்லகூட ஹோட்டலும், டீக்கடையும் திறந்திருக்க, மதுரை மாதிரி 'தூங்கா நகரம்' ஆகிடுச்சு. நைட்டு பத்து மணிக்குகூட வெத்துடம்போட ஆளுங்க நடமாடறாங்கனா பார்த்துக்கோங்க.
சில வருஷங்களுக்கு முன்ன வரைக்கும் வீடுகள்லயோ, லாட்ஜ்கள்லயோ ஃபேன், ஏ.சி. எல்லாம் கிடையாது. அதுக்கு அவசியமும் இருக்காது. இன்னிக்கு எங்க வீடு உட்பட பல வீடுகள்ல ஃபேன் வந்துடுச்சு, ஏ.சி. வந்துடுச்சு. காரணம், அந்தளவுக்கு ஊட்டி 'ஹாட்' ஆகிடுச்சு!" என்ற மணிவண்ணன்,
"கணக்கு வழக்கில்லாம இங்க காட்டை அழிக்கறாங்க. ராட்சஸ லாரிகள்ல, பெரிய பெரிய மரங்களையெல்லாம் குட்டி குட்டியா வெட்டி, கட்டி கொண்டுட்டு போறதை கண் கலங்க பார்த்திருக்கேன். இங்க பல வன கிராமங்களுக்கு இன்னும் பஸ் ரூட்டே கிடையாது. ஆனா, அந்தப் பகுதிகளை தாண்டியும் மரக் கடத்தல் லாரிகள் கர்மசிரத்தையா போய் வர கடத்தலுக்காகவே 'தனி ரூட்' போட்டிருக்காங்க. மொத்தத்துல, ஊட்டியோட உயிரை கொஞ்சம் கொஞ்சமா உறிஞ்சுறாங்க!" என்றார் வருத்தத்துடன்.
"நீலகிரியோட நிலைமை மோசமாகிட்டே போறதுக்கு முக்கியமான காரணம் அசுரத்தனமான கட்டட ஆக்கிரமிப்புகளும்தான்..." என்று அடுத்த அதிர்ச்சியை ஆரம்பித்த 'ஊட்டி' முகமது ரஃபீக்,
"ஒரு காலத்துல குன்னூர் மற்றும் ஊட்டி டவுன் பகுதிகளை கொஞ்சம் உயரமான இடத்துல இருந்து பார்த்தீங்கனா... காடா தெரியும். இப்ப, காலி இடமே கண்ணுல தெரியாது. ஷாப்பிங் ஏரியாக்களும், லாட்ஜுங்களும் புதுசுபுதுசா முளைச்சு ஜன நெருக்கடியில திக்கித் திணறுது.
டவுன் நிலைமை இப்படினா, கொஞ்சம் தள்ளி விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் முழுக்க காட்டேஜு களோட ஆதிக்கம்தான். பூர்விக பழங்குடிகளா இருந்த இருளர், குரும்பர் எல்லாம் தங்களோட விவசாய நிலங்களை நல்ல ரேட்டுக்கு வித்துட்டு வேறே எங்கெங்கோ கூலி வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நிலமெல்லாம் டூரிஸ்ட்களுக்காக காட்டேஜ் ஆயிட்டிருக்கு. சம்மர்ல குடிநீர் பஞ்சமே வந்துடுசுன்னா பார்த்துக்குங்க.
|