ஊட்டி,கொடைக்கானல், தேக்கடி, மைசூர், பெங்களூரு... 'டூர்' என்றவுடன் நம் மனதுக்குள் ரீங்காரமிடும் இடங்கள் இவைதான்!
''இதெல்லாம் டூப்பு! நாங்க போயிட்டு வந்தோம் பாருங்க 'அட்வென்சர் டூர்', அதுதான் டாப்பு!'' என்று உற்சாகமாகும் சென்னையைச் சேர்ந்த சுமதி சீனிவாசன், அவர் சென்று வந்த 'சாகச சுற்றுலா'வின் சந்தோஷங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இங்கே!
'' 'போன இடத்துக்கே போய், போட்டோ எடுத்துட்டு வந்துனு... ஒரே போர்பா. கொஞ்சம் வித்தியாசமான டூரா இருந்தா நல்லாயிருக்குமே'னு மனசு கேட்டப்போதான், தமிழக சுற்றுலாத்துறை 'டாப் ஸ்லிப்' பகுதியில 'வீக் எண்ட் அட்வென்சர் ஈக்கோ டூர்' நடத்தறதா என் அலுவலகத் தோழி சொன்னாங்க! சட்டுனு என் கணவருக்கும் சேர்த்து 'ஆன் லைன்'லயே டிக்கெட் புக் பண்ணிட்டேன்.
சென்னையில இருந்து கிளம்பிச்சு வண்டி. சாஃப்ட்வேர் ஆசாமிகள், காலேஜ் ஸ்டூடன்ட்ஸ், சமூக ஆர்வலர்கள், குழந்தைகள்னு முப்பது பேருக்கும் மேல ஆர்வமா கிளம்பினோம் சாகச சுற்றுலாவுக்கு! எல்லாரோட முகத்துலயும் ரியல் அட்வென்சரை சந்திக்கப் போற த்ரில்ல்ல்! பழனி, உடுமலைப்பேட்டையெல்லாம் கடந்து 'டாப் ஸ்லிப்'ல வண்டி ஹால்ட் ஆனப்போ, நாங்க முப்பது பேரும் 'ஃப்ரெண்ட்ஸா'கியிருந்தோம்!
டாப் ஸ்லிப்... வாவ்!
நகரத்து வாகனங்களோட இரைச்சல், மாசுக் காற்று, அடுக்கு மாடிக் கட்டடங்கள், டிராஃபிக் சிக்னல்கள்னு சாபப்பட்ட நமக்கு, அது ஒரு பசுமை சொர்க்கம்! வண்டியை விட்டு கீழ இறங்கினதும், மேகக்கூட்டம் நம்மைத் தழுவிப் போக, காது நுனி சிலிர்க்குது! கொஞ்ச நேரத்துக்கு முன்னால மழை வேற பெய்திருந்ததால, பச்சை மண்வாசனை நுரையீரல்ல அப்புது! 'வாங்க... வாங்க'னு வந்து வரவேற்றாங்க தமிழகச் சுற்றுலாத்துறை அலுவலர்கள்... ஸ்வீட், காரம், காபியோட!
|