'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம்' என்று கிண்டலாகச் சொல்வார்கள். வானம்... யாரும் எளிதில் ஏறிச் சென்றுவிட முடியாத பகுதி என்பது அந்தப் பழமொழி பிறந்த காலத்தில் உண்மையாக இருந்திருக்கலாம். இன்றோ... வான்வெளியிலும்கூட ஜாலி டூர் போவது சாத்தியமே என்கிறது அறிவியல் வளர்ச்சி.
அதைப் பற்றி இங்கே பேசுகிறார் 'சந்திரயான்' விண்வெளித் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. '' 'ஸ்பேஸ் டூர்' என்பது 1990-ம் ஆண்டுகளின் இறுதியில்தான் உருவானது. டென்னிஸ் டிடோ என்கிற அமெரிக்கர்தான் 2001-ல் முதன்முதலா ஒரு ஸ்பேஸ் டூரிஸ்டாக விண்வெளியில் 9 நாட்கள் தங்கியிருந்தார்.
இந்த டூரில் 2 வகை இருக்கிறது. பூமியிலிருந்து கிட்டத்தட்ட 120 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் போய், ஒரு இரண்டரை மணிநேரம் இருந்துவிட்டு, உடனே திரும்பி வருவது. இதில் ஜாலியான விஷயம், புவியீர்ப்பு விசை இல்லாத அந்த இடத்தில் அந்தரத்தில் மிதக்கின்ற அற்புத உணர்வுதான். அங்கிருந்து பூமி முழுவதையும் பறவைப் பார்வையில் பார்க்கலாம்.
இன்னொரு வகை டூர்... ஏற்கெனவே வான்வெளியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் சில நாட்கள் இருந்துவிட்டுத் திரும்புவது. 'ஸ்பேஸ் அட்வென்சர் லிமிடெட்' என்கிற அமெரிக்க நிறுவனம், ரஷ்ய விண் வாகனங்களில் 2001-ம் ஆண்டிலிருந்து இப்படி டூர் அனுப்பி வருகிறது. இதுவரை 8 பேர் இப்படி ஜாலியாகப் போய் வந்திருக்கிறார்கள். அங்கே அதிகபட்சம் 15 நாட்கள் தங்கியிருக்க முடியும்'' என்று அவர் சொன்னதுமே நமக்கும் விண்ணில் சிறகடிக்கும் ஆசை துளிர்விட்டது... ஆனால், ''அதற்காக அவர்கள் கட்டிய தொகை 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள்'' என்று சொன்னதுமே, இந்திய மதிப்பில் கணக்குப் போட்டுப்பார்த்து (சுமார் 91 கோடி ரூபாய்), நம் தலை கிறுகிறுக்க ஆரம்பித்து விட்டது.
|