இவற்றையெல்லாம் வழிபட்ட பின்னர் நேரமிருந்தால் ஆர்வமுள்ளவர்கள் கோயிலைச் சுற்றி பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் ராமதீர்த்தம், சீதாதீர்த்தம், கோதண்டராமர்கோயில், கந்தமானபர்வதம், ஜடாதீர்த்தம், தனுஷ்கோடி ஆகிய இடங்களுக்குச் செல்லலாம். 'கந்தமானபர்வதம்’ என்பது ராமர் உயரமான மணல்மேட்டில் நின்று இலங்கையை பார்த்ததாக சொல்லப்படும் இடம். அங்கு ராமரின் பாதங்கள் இருக்கின்றன. 'ஜடாதீர்த்தம்’ என்பது ராமன் தன் ஜடையை சுத்தம் செய்து கொண்ட இடம்.
தனுஷ்கோடி மணலும்கூட சாமிதான்!
ராமேஸ்வரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற தனுஷ்கோடியில்தான் ராமர் சம்பந்தப்பட்ட அனைத்தும் நடந்ததாக புராணம் சொல்கிறது. 1964-ம் ஆண்டு வரை புனித யாத்திரையாக வருபவர்கள், அதை நிறைவு செய்தது இங்கேதான். அந்த ஆண்டு அடித்த பெரும்புயலின்போது தனுஷ்கோடி நகரம் முற்றிலுமாக அழிந்து விட்டது. அங்கிருந்த சர்ச், பிள்ளையார் கோயில், ரயில்வே ஸ்டேஷன், ஊழியர் குடியிருப்பு, பொதுமக்கள் வசிப்பிடம் என எல்லாவற்றையும் கடல் கொண்டு போய்விட்டது. தனுஷ்கோடிக்கு சென்று கொண்டிருந்த ஒரு ரயிலும்கூட பயணிகளோடு கடலுக்குள் போய்விட்டது. அதிலிருந்தே யாத்திரை என்பது ராமேஸ்வரத்தோடு நின்றுபோய்விட்டது.
ராமேஸ்வரத்திலிருந்து பதினோரு கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்தில் வந்து, அங்கிருந்து 7 கிலோ மீட்டர் தூரம் பாரம் ஏற்றும் வேன் மூலமாக ஆளுக்கு 60 ரூபாய் கொடுத்து மூட்டை கணக்காக அடைபட்டு மாமனார், மாமியார் சகிதம் தனுஷ்கோடிக்கு வந்திருந்தார் சிங்கம்புணரியைச் சேர்ந்த சாந்தி சேகர். ''இங்கயிருந்த தெய்வங்களைத்தான், பிறகு ராமேஸ்வரத்துல பிரதிஷ்டை பண்ணினதா சொல்றாங்க. அதனாலதான் இவ்வளவு செரமப்பட்டு இங்க வந்திருக்கோம். கோயில், சிலைனு இங்க எதுவும் இல்லைனாலும், சீதாதேவி மணல்ல சிவலிங்கம் எழுப்பின இந்த தனுஷ்கோடி மணலையே சாமியா நெனச்சு கும்பிட்டுக்கறாங்க மக்கள்’’ என்றார் பயணம் தந்த களைப்பு மறந்து பக்தி பரவசத்தில்!
மீண்டும் கிடைத்த அரச வாழ்க்கை!
ராமேஸ்வரம் கோயிலின் ஆலய கைங்கர்யம் என்ற பொறுப்பில் இருக்கும் நம்புவைத்யா, ''ராவணனை வதம் செய்ததால தன்னை பீடிச்ச பிரம்மஹத்தி தோஷம் நீங்க (பிராமணரைக் கொன்றால், பிடிப்பதுதான் பிரம்மஹத்திதோஷம். ராவணன், பிரம்மனின் பேரனுடைய மகன் என்பதால், அவனும் பிராமணனே என்கிறார்கள்) இங்கே சிவபூஜை செய்தார் ராமர். அதனால அவரோட தோஷம் நீங்குச்சு. அதோட விபீஷணனுக்கு அரசப் பட்டம் கட்டப்பட்டதும் இங்கதாங்கறதால, இங்க வந்து வழிபடறவங்களோட பாவங்களும், தோஷங்களும் நீங்கி, அரச வாழ்க்கை அமையும்ங்கறது காலங்காலமா இருக்கற நம்பிக்கை.
சீதாதேவி சிவலிங்கம் செஞ்ச இந்த கடற்கரை மணலை எடுத்துப்போய் காசியில கங்கை நதியில கரைச்சுட்டு, அங்கயிருந்து கங்கை நீர் எடுத்து வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்றதுங்கறது இந்துக்களோட மிகப்பெரிய ஐதீகம். சேதுக்கரையில முன்னோர்களுக்கு தர்ப்பணம் செஞ்சா, அது அவங்களை மோட்சத்துக்கு அனுப்பி வைக்கும். சிவம், வைணவம்னு ரெண்டு பிரிவுக்கும் பொதுவான தலமாவும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டவும் விளங்கற இந்தப் புனித மண்ணுக்கு, நாள்தோறும் மக்கள் வெள்ளம் வந்துட்டே இருக்கு. இறைவன் அருள் தந்துட்டே இருக்கார்!’’ என்று கடவுளின் பெருமை சொன்னார்.
இடைத்தரகர்கள் உஷார்!
அபிஷேகங்களைச் செய்ய விரும்பும் பக்தர்கள், அவற்றுக்கான கட்டணங்களை முன்கூட்டியே செலுத்தி, நேரத்தை நிச்சயம் செய்து கொள்ளலாம். தேவையான அனைத்துப் பொருட்களும் ஆலயத்தின் உள்ளேயே கிடைக்கும். இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம். இங்கிருக்கும் தீர்த்தங்கள் மற்றும் புனித இடங்களையெல்லாம் சுற்றுலா துறை அல்லது கோயில் மூலமாக முன்கூட்டியே தெரிந்து கொண்டு சுற்றிப் பார்ப்பது நல்லது. அதற்காக யாரையாவது நம்பினால், உங்களுடைய பர்ஸிலிருந்து அளவுக்கு அதிகமாக காசு கரைய வாய்ப்பிருக்கிறது... ஜாக்கிரதை!
எப்படிச் செல்வது?
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதியியிலிருந்தும் நேரடி பேருந்துகள் உள்ளன. பேருந்து நிலையத்தில்இருந்து பத்து நிமிடத்துக்கு ஒருமுறை கோயிலுக்கு நகரப் பேருந்து செல்கின்றது. சென்னை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து ரயில் வசதி உண்டு. ரயில் நிலையத்திலிருந்து, கோயிலுக்கு பேருந்து வசதிகள் குறைவு. ஆட்டோக்கள் உண்டு.
தங்குவதற்கு, கோயிலுக்குச் சொந்தமான அறைகள் நிரம்ப உண்டு. கூடவே, ஒவ்வொரு சமூகத்தாரும், ஒவ்வொரு மாநிலத்தாரும் அவரவர் சார்பில் மடங்களைக் கட்டியுள்ளார்கள். யாத்திரை வருகிறவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து அறை பெற்று வருவது நல்லது. தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாக 'அது நல்ல விடுதியா' என்று கேட்டுப் பதிவு செய்வது முக்கியம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் காலை ஐந்து முதல் பகல் ஒரு மணி வரை. மாலை மூன்று முதல் ஒன்பது மணி வரை. கோயில் அலுவலக தொலைபேசி எண்கள் 04573-221223, 221224.
|
|