22. டூருக்குச் செல்லும்போது நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், பத்திரங்கள் போன்றவற்றை பேங்க் லாக்கரில் வைத்துவிட்டுச் செல்லுங்கள். பட்டுப் புடவை, வெள்ளிப் பாத்திரம் போன்ற முக்கியமான பொருட்களாக இருந்தால், நெருங்கிய உறவினர் வீட்டில் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்.
23. விலை உயர்ந்த பொருட்களை பேங்க் லாக்கரில் வைத்துவிட்டாலும், உங்கள் ஏரியா கூர்க்காவுடம் 'எக்ஸ்ட்ரா செக்யூரிட்டி ஃபேர்' கொடுத்து, உங்கள் வீட்டை அடிக்கடி நோட்டம் விட்டுக்கொள்ளச் சொல்லுங்கள்.
24. இன்னுமொரு அருமையான வழியும் இருக்கிறது. வெளியூருக்கு நீண்ட நாள் பயணமாக செல்வதென்றால், குடியிருக்கும் ஏரியாவுக்கு உட்பட்ட காவல் நிலையத்துக்குச் சென்று... எதற்காக, எத்தனை நாட்கள், எந்த ஊருக்குச் செல்லவிருக்கிறீர்கள் போன்ற விவரங்களை பெட்டிஷனாக எழுதிக் கொடுத்துவிட்டு, 'லாக்டு அவுட்' எனப்படும் ரெஜிஸ்தரில் கையெழுத்திட்டு, அங்கு இருக்கும் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துவிடுங்கள். மறக்காமல் உங்கள் மொபைல் எண்ணையும் கொடுத்துவிட்டுக் கிளம்புங்கள்.
25. நீங்கள் சென்ற பிறகு, பூட்டிய உங்கள் வீட்டின் கதவில் 'பட்டா புக்' என்கிற நோட்புக்கை போலீஸார் வைத்து விடுவார்கள். தினமும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸார், உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்து விட்டு, அந்த புக்கில் கையெழுத்திட்டுச் செல்வார்கள்.
சரியான சாப்பாடு... சந்தோஷமான டூர்!
பஸ், ரயில் நிறுத்தங்களில், செல்லும் இடங்களில் என்று கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டால், வயிற்றுக் கோளாறு ஏற்படலாம். இன்ஃபெக்ஷனால் சளி, ஜுரம் வரலாம். அது, டூரின் சந்தோஷத்தையே குலைத்துவிடும். எனவே, சாப்பாட்டு விஷயத்தில் கவனமும் கடிவாளமும் தேவை!
26. எல்லா வயதினரும் எண்ணெய்ப் பதார்த்தங்களை பயணத்துக்கு முன்பும், பயணத்திலும் தவிர்த்தால் 'தர்மசங்கடங்களை'த் தவிர்க்கலாம்.
27. காரில் நீண்டதூரம் பயணம் செய்யும்போது வண்டி ஓட்டுபவர் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், உடனே காரை நிறுத்திவிட்டு சிறிது தூரம் வாக் சென்று, சூடாக டீ சாப்பிட்டுவிட்டுத் திரும்ப... புத்துணர்ச்சி கிடைக்கும்.
28. பயணத்தின்போது சாப்பிடும் அயிட்டங்களை, அது சூடாக இருக்கும்போதே சாப்பிட்டால், நோ ஜெர்ம்ஸ் தொல்லை.
29. தண்ணீர் மூலம் நிறைய வியாதிகள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை எடுத்துச் செல்வது நல்லது. லாங்க் டூரில் அது முடியாதபட்சத்தில், காரில் செல்பவர்கள் வீட்டிலிருந்தே சில 'பேக்கேஜ்டு வாட்டர் கேன்'களை எடுத்துச் செல்லலாம். மற்றவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் லாட்ஜ்களில் இருந்து வெளியே கிளம்பும்போதே, பாட்டில்களில் ப்யூரிஃபைடு தண்ணீர் பிடித்துச் செல்லலாம்.
|