Published:Updated:

வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...

வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...

வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...

வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...

Published:Updated:

 
ம.பிரியதர்ஷினி
வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...
வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வில்லங்கமில்லாத வீடு -மனைகள்....

இங்கே நிச்சயிக்கப்படுகின்றன !

'கையில இருக்கற காசையெல்லாம் போட்டு, அஞ்சு சென்ட் மனையை வாங்கிப் போட்டா... நேரம் கூடிவரும்போது நிதானமா வீட்டைக் கட்டிக்கலாம்...'

- மிடில் கிளாஸ் வர்க்கத்தின் பரவலான, நியாயமான, ஆசையான முயற்சி இது! ஆனால், 'நில மோசடி'யில் இப்போது கோடீஸ்வரர்கள் முதல் தெருக்கோடியிலிருக்கும் அண்ணன் முனீஸ்வரன் வரை அனைவரும் பாரபட்சமின்றி ஏமாற்றப்படுவது, ஏமாறுவது கண்கூடு! சமீபத்தில் சென்னையில் பலகோடிகள் நில மோசடி செய்த தனியார் நிறுவனமும், 'வில்லங்கம் தெரியாம வாங்கிப்புட்டேன்...' என்று மீடியா கேமராவில் கண்ணீர்விட்ட நடிகர் வடிவேலுவின் கவர் ஸ்டோரிகளும் அதற்கான சில உதாரணங்கள்.

வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...

"நிலம் வாங்குவது, வீடு கட்டுவது, வீடு வாங்குவது என்று இந்த ஏரியாக்களில் எல்லாம் ஏகப்பட்ட மோசடிகளும், தில்லுமுல்லுகளும் நீங்கள் சொந்தமாக்கவுள்ள மண்ணுக்கு கீழே மறைந்து கிடக்கலாம். எனவே, அசையா சொத்து கை மாறும்போது சில சட்ட அடிப்படைகளை அறிந்து வைத்துக் கொள்வது, உங்களின் அறியாமையைப் போக்கும். வீடு, மனை போன்றவற்றை வில்லங்கமில்லாமல் வாங்குவது உங்களின் கைளில்தான் இருக்கிறது... உங்களிடம் மட்டுமே இருக்கிறது!'' என்று விழித்துக்கொள்ள வழி சொல்லும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமன், நிலம் வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி முதலில் பேசினார்.

"நீங்கள் பணத்தை கை மாற்றும் நபர், உண்மையிலேயே அந்த நிலத்துக்கு உரிமையாளர்தானா என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி ஒருமுறைக்கு பல முறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், சமீபகாலமாக ரியல் எஸ்டேட்களின் கடுமையான விலையேற்றத்தை பயன்படுத்திக் கொண்டு, ஊரார் நிலத்தை 'என்னோட இடம்தான்...' என்று கூசாமல் சொல்லி காசு பார்க்கும் கும்பல் அதிகரித்துள்ளது. எனவே, பெரும்பாலும் ஏற்கெனவே அறிமுகமான, நம்பிக்கயான நபர்களின் இடங்களையே வாங்குங்கள்.

அதேபோல, 'ரியல் எஸ்டேட் புரோக்கர்கள்' என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் மீடியேட்டர்களிடம் கவனம் தேவை. இவர்களும் ஏற்கெனவே அறிமுகமான நபராக இருப்பது, பாதுகாப்பானது. சில மீடியேட்டர்கள், பத்திரத்தை கிரயம் செய்யும் கடைசி நிமிடம் வரை இடத்தின் உரிமையாளரிடம் நம்மை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு 'பார்த்துக்' கொள்வார்கள். 'நான்தான் அவருக்கு ரைட் ஹேண்ட், லெஃப்ட் ஹேண்ட் எல்லாம். எதுவானாலும் எங்கிட்டயே டீல் பண்ணுங்க...' என்றெல்லாம் உதார் விடுவார்கள். இவர்கள் போலிகளாகவோ, அல்லது இடத்தின் விலையை உரிமையாளர் நிர்ணயித்தைவிட கூடுதலாக ஏற்றிவிட்டு காசு பார்ப்பவராகவோ இருக்கலாம். எனவே, அறிமுகப்படலத்தோடு புரோக்கர்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு, உரிமையாளரிடம் நேரடியாகப் பேசுவதே நல்லது!'' என்றவர், நிலம் வாங்கும்போது சரிபார்க்க வேண்டிய பத்திரங்கள் பற்றி பட்டியலிட்டார்.

வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...

"சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம், பதிவு செய்யப்பட்ட கிரய பத்திரம், இதர தாய் பத்திரங்கள், ரெவின்யூ ரெக்கார்ட்ஸ் (பட்டா, சிட்டா அடங்கல்), சுவாதீன அனுபவ சான்றிதழ் (கிராம நிர்வாக அலுவலர் வழங்க கூடிய சான்றிதழ்), பதிவு செய்யக் கூடிய நாள் வரையிலான வில்லங்க சான்றிதழ் (Encumberance certificate), இடத்தின் அரசாங்க அப்ரூவ்டு லே- அவுட், மின் இணைப்பு (ஒருவேளை நீங்கள் வாங்கப் போகும் நிலத்தில் கிணறு போன்றவை இருந்தால் மின்சார சப்ளை தேவைப்படுமே), குடிநீர் மற்றும் கழிவு நீருக்கான இணைப்பு சான்றிதழ் முதலியவற்றை உரிமையாளரிடம் சரிபார்த்து பெற்றுக்கொள்ளுங்கள். இதில் ஏதாவது ஒன்று இல்லையென்றாலும், அவரிடமே விவரம் கேட்டு வாங்கிவிடுங்கள்'' என்ற அழகுராமன், நிலம் வாங்கும்போது நாம் ஏமாறுவதற்கு சாத்தியங்கள் உள்ள கூறுகளையெல்லாம் தோலுரித்தார்.

"ஒருவர் தனது ஐம்பது ஏக்கர் நிலத்தை பிளாட் (Plot) விற்கும்போது, அதில் ஐந்து சென்ட் வாங்கும் உங்களிடம் மற்றவர்களிடமும் நிலத்தின் ஒரிஜினல் டாகுமென்டைக் காண்பித்திருக்க மாட்டார். அதன் நகல் மட்டுமே நிலத்தை வாங்குபவர்களின் கண்களில் காட்டப்படும். அப்படி ஒரு சூழ்நிலையில், அவர் அந்த ஒரிஜினல் டாகுமென்ட்டை வங்கியிடமோ, வேறு நபர்களிடமோ அடமானம் வைத்திருக்கவும் கூடும் என்பதால், அவரின் கடனுக்கு நீங்கள் பொறுபாளியாகிவிடாமல் இருக்க, எப்போதும் பத்திரத்தின் ஒரிஜினலை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

பொதுவாக, 'வீட்டுமனை பிரிவு'க்கு உட்பட்ட இடத்தில்தான் வீடு கட்ட அரசு அனுமதி உண்டு. சிலர் வணிக வளாகம், தொழிற்சாலை சம்பந்தப்பட்ட இடங்கள், இன்ன பிற உபயோகத்துக்கான இடங்களை உங்களிடம் ஏமாற்றி விற்றுவிடக் கூடும். பின் அந்த இடத்தில் நீங்கள் எழுப்பும் வீடு, என்றாவது ஒருநாள் உங்களிடமிருந்து சட்டப்பூர்வமாக பறிபோகக்கூடும். எனவே, சம்பந்தப்பட்ட இடம் 'வீட்டுமனைப் பிரிவு'க்கு உட்பட்டதுதான் என்பதை முக்கியமாக உறுதி செய்து கொள்ளுங்கள்!'' என்று விளக்கியவர், வாங்கிய இடத்தில் வீடு கட்டக் கிளம்புவர்களுக்கும் சில எச்சரிகை மணிகளை அடித்தார்.

"வீடு கட்டுவதற்கு, நம்பகமான பில்டரை தேர்ந்தெடுங்கள். இல்லையெனில் அவர் என்றாவது ஒருநாள் உங்களை ஏமாற்றிவிட்டு ஓடிப் போகக்கூடும். அடுத்ததாக, ஆரம்பத்திலேயே 'பில்டர்ஸ் அக்ரிமென்ட்' போட்டுவிடுங்கள். அந்தப் பத்திரத்தில் எந்தத் தேதியில் வேலை ஆரம்பிக்கப்படும்; எந்த ரக சிமென்ட், பெயின்ட், டைல்ஸ், மரங்கள் பயன்படுத்தப்படும்; எந்த தேதியில் வீட்டை முடித்து சாவி உங்கள் கையில் தரப்படும்; மொத்த எஸ்டிமேட்; பில்டருக்கான சம்பளம் போன்ற எல்லா விவரங்களையும் முன்கூட்டியே எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். இது இருதரப்புக்குமே நல்லது. பின்னாளில் வேலையில் குறை, குறிப்பிட்ட நேரத்துக்குள் வீட்டை முடித்துத் தராமல் இழுத்தடிப்பது, எஸ்டிமேட்டைவிட அதிகமான பணம் கேட்பது போன்ற பிரச்னைகளில் இருந்து உங்களுக்கும், சம்பள செட்டில்மென்டில் தாங்கள் ஏமாற்றப்பாடாமல் இருக்க பில்டருக்கும் இந்த அக்ரிமென்ட் கை கொடுக்கும்!

தவிர, வீட்டை கட்டுவதற்கு முன், அரசாங்கத்திடம் அதற்கான அனுமதி பெற்றுவிடுவது மிக மிக அவசியம். கூடவே, குடிநீர், மின்சார இணைப்பு போன்ற வசதிகளைப் பெறுவதற்கும் அரசாங்க அனுமதி அவசியம்'' என்ற அழகுராமன், அபார்ட்மென்ட் வீடு வாங்கும் கனவில் இருப்பவர்களுக்கும் சில நிதர்சனங்களை அடுக்கினார்...

வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...

"நீங்கள் வாங்கப்போகும் அபார்ட்மென்ட் கட்ட டம், முறையான அரசு அனுமதி பெற்று கட்டப்பட்டதா என்பதைக் கவனியுங்கள். 'ஒரு ஃப்ளாட்' (Flat) வாங்குகிறீர்கள் என்றால், அபார்ட்மென்ட்டின் மொத்த பரப்பளவில் 'ஒரு ப்ளாட்'டுக்கான பாகம் (Undivded Share) உங்களுக்குக் கிரயம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைக் கணக்குப் பாருங்கள். தவிர, வீட்டுப் பத்திரம், சாங்ஷன் பிளான், வில்லங்கச் சான்றிதழ் போன்றவற்றை உரிமையாளரிடமிருந்து சரிபார்த்துப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றவர்,

"சில இடங்களில் மிகப்பெரிய அபார்ட்மென்ட்களில் கட்டட வேலை நடந்து கொண்டிருக்கும்போதே, ஃப்ளாட்களை விற்க ஆரம்பித்துவிடுவார்கள். முன்பதிவுக்கு முட்டி மோதுபவர்களிடம், 'நாங்களே பேங்க்ல ஹவுஸிங் லோனும் சாங்ஷன் பண்ணித் தர்றோம்' என்று தேன் தடவி, ஏதாவது ஒரு வங்கியில் உங்களுக்கு லோனுக்கும் ஏற்பாடு செய்து தந்துவிடுவார்கள்.

ஆனால், அவ்வளவு பெரிய அபார்ட்மென்ட் கட்டும் புரமோட்டர்கள் அல்லது பில்டர்கள், அந்த ப்ராஜெக்ட்டுக்காக சம்பந்தப்பட்ட இடத்தின் ஆவணங்களை வைத்து வங்கியில் பெரிய தொகையை லோனாக வாங்கியிருக்கலாம். எனவே, அவர்கள் ஏதாவது சொதப்பும்பட்சத்தில் அந்த வங்கி, சம்பந்தப்பட்ட கட்டடத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம். கட்டுமானப் பணிகள் பாதியிலேயே முடக்கப்பட, ஒரு பக்கம் மாதா மாதம் உங்களின் ஹவுஸிங் லோன் மட்டும் உங்களை கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும். இன்று சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் இப்படிபட்ட பிரச்னைகளால் பாதியில் நிற்கும் அபார்ட்மென்ட் கட்டடங்களின் கதைகள் ஏராளம். எனவே, கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அபார்ட்மென்ட்டை கிரயம் செய்யும் முன்பாக முழுகவனம் எடுத்துக் கொண்டு ஆராயவும்!'' என்ற அழகுராமன்,

"இடம், வீடு, அபார்ட்மென்ட் என்று எது வாங்குவதாக இருந்தாலும், அதன் மீதும் வழக்குகள் எதுவும் நிலுவையில் இருக்கிறதா என்பதையும், 'பவர் ஆஃப் அட்டர்னி' சம்பந்தப்பட்ட சொத்துக்களில் பவர் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா, பவர் ரத்து செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதையெல்லாம் ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசித்துவிட்டு சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்வதே நலம்!'' என்று முடித்தார்.

ஆசைக்காக நாம் வாங்கும் வீட்டில், பிறரின் பேராசை கள்ளாட்டம் ஆடிவிடக்கூடாது... கவனம்!

வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...
படம் து.மாரியப்பன்
வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...
வில்லங்கமில்லாத வீடு-மனைகள் ...
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism