கூடவே, இவரது மொட்டை மாடி முழுவதும் கத்திரி, வெண்டை, மிளகாய் என்று காய்கறி செடிகள் தலையசைக்கின்றன. ''இவ்வளவு செடிகளுக்கும் தண்ணீர்?'' என்றோம் வியப்புடன்.
'' 'பேசிலஸ்' எனப்படும் நன்மை செய்யும் ஒரு வகை பாக்டீரியாவை கப்பல், விமானங்களில் உள்ள கழிவறைத் தொட்டிகளில், கொட்டிவிடுவார்கள். அவை மனிதக் கழிவுகளைச் சிதைத்துவிடும். இதனால் கழிவறைத் தொட்டிகளில் கழிவு எதுவும் இருக்காது. தண்ணீர் மட்டும்தான், துர்நாற்றம் துளிகூட வீசாது.
இந்த பேசிலஸ் பாக்டீரியாவைத்தான் இப்போது எங்கள் வீட்டுக் கழிவறைகளிலும் பயன்படுத்துகிறேன். ஐந்து பேர் கொண்ட குடும்பம் வசிக்கும் வீட்டில் உள்ள ஒரு செப்டிக்டேங்குக்கு, 50 கிராம் பேசிலஸ் பாக்டீரியா போதும். போட்ட ஒரு வாரத்தில் செப்டிக் டேங்கில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்களை, இந்த பேசிலஸ் பாக்டீரியாக்கள் உண்டு விடுவதால், வெறும் தண்ணீர் மட்டும்தான் இருக்கும். அந்தத் தண்ணீரைச் செடி, கொடிகளுக்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் வேலையும் இல்லை. செடி, கொடிகளுக்குத் தண்ணீரும் கிடைக்கிறது!'' என்றவர்,
''இந்த பேசிலஸ் பாக்டீரியா ஒன்றும் குதிரைக் கொம்பு அல்ல... குதிரை சாணத்தில் இருந்துதான் பிரித்து எடுக்கப்படுகிறது'' என்று சிரிப்போடு சொன்னவர், ''இந்த பாக்டீரியா கிடைக்காதவர்கள், குதிரை சாணத்தையே கூட பயன்படுத்தலாம். ஒரு முறை இந்த பாக்டீரியாவை போட்டாலே போதும். அது பெருகி வளர்ந்து கொண்டே இருக்கும். மொத்தத்தில், இந்த பாக்டீரியாக்கள் சம்பளம் வாங்காத சுத்திகரிப்பு தொழிலாளர்கள்!'' என்றார் புன்னகையுடன்.
பளிங்கு நீராக பளிச்சிடும் கழிவுநீர் !
|
|