"மனைய (வீடு) கட்டுறது எங்களுக்கு ஒண்ணும் பெரிய சிரமம் புடிச்ச காரியமில்லீங்க. புலியாடுற வனத்துக்குள்ளே (புலிகள் நடமாடும் அடர் வனப்பகுதி) ஆம்பளைங்க போயி, நல்லா வளர்ந்த மரமா பார்த்து எடுத்துட்டு வருவாங்க. நல்ல விசாலமா ஒரு வீட்டைக் கட்டுறதுக்கு பத்து மரக்கட்டை இருந்தா போதும். பொம்பளைங்க, மண்ணை தலைச்சுமையா கொண்டு வந்து போடுவோம்.
மொதல்ல சின்னதா ஒரு அஸ்திவாரம் தோண்டிட்டு, கட்டையை நட்டு வெச்சிடுவோம். அப்புறம் கூரை போடுறதுக்கு தருவை பில்லை (புல்) பிடுங்கிட்டு வந்து வேய்ஞ்சுடுவோம். மரத்துல இருந்து கெட்டியான பட்டை, வேர்களை எடுத்துக்கிட்டு வந்து கயிறாக்கி, கூரைகளை சேர்த்துக் கட்டுவோம். முன்னயெல்லாம் கூரைகளை அப்படியே வேய்ஞ்சுடுவோம். இப்போல்லாம் மொதல்ல பெரிய கண்ணாடி பேப்பரை (பாலீதீன் ஷீட்) விரிச்சுட்டு, அது மேலே புல்லு வேயுற பழக்கம் வந்திருக்கு. கூரை போட்ட பிறகுதான் சுவரு கட்டுவோம். அதுக்கும் இந்தப் புல்லுதான். சின்னச் சின்ன கம்புகளை வரிசையா வெச்சு கட்டி, உள் பகுதியில தருவை பில்லை வேய்ஞ்சுடுவோம். களிமண், செம்மண்ணை போட்டு நல்லா இடிச்சு குத்தி மொழுகிட்டு, தரையையும் போட்டுருவோம்" என்று, ஜஸ்ட் லைக் தட்... சிவில் இன்ஜினீயரிங் பேசுகிறார் கமலா.
|