Published:Updated:

பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !

பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !

பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !

பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !

Published:Updated:

ரேவதி
பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !
பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !"

நெகிழ வைக்கும் ஒரு ஹவுஸ் ஓனர்

மாமியார் - மருமகள் சச்சரவுகளுக்கு சற்றும் சளைத்தவை அல்ல... வீட்டு உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் இடைப்பட்ட மனஸ்தாபங்கள்.

'சத்தம் போடக்கூடாது', 'சுவத்துல எதையும் ஒட்டக்கூடாது' என்று நம்முடைய சுதந்திரத்தையும் வாடகையோடு சேர்த்துக் கேட்கும் வீட்டு உரிமையாளர்கள்...

பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !

இருக்க இடம் கொடுத்தவரிடம் படுக்க இடம் கேட்ட கதையாக வீட்டு உரிமையாளர்களின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் வில்லங்க வாடகைதாரர்கள்...

இப்படி வீட்டுக்கு வீடு வாசற்படியாக பல நூறு கதைகள் இங்கே உண்டு. சாம்பிளாக சிலரிடம் பேசியபோது கிடைத்த கதைகள்... எல்லோருக்குமான எச்சரிக்கையாக இங்கே இடம் பிடிக்கின்றன.

''வெளிச்சமும் காத்தும்தான் என்னை இப்போ வியாதியில்லாம வெச்சிருக்கு'' என்கிற 57 வயது வசந்தா வசிப்பது மேற்கு மாம்பலத்தில்.

''இதுக்கு முன்னால திருவல்லிக்கேணியில 1,300 ரூபாய் வாடகை வீட்டுல இருந்தேன். சின்னதா ஒரு ரூம். சின்ன சமையலறை மட்டும்தான். கொடுமை என்னனா... அந்த வீட்டுல காத்தும் வெளிச்சமும் உள்ள வர்றதுக்கு ஒரு ஜன்னல்கூட இல்லாமப் போனதுதான். இதனாலேயே எப்பவும் லைட் எரியும், ஃபேன் ஓடும். கரன்ட் பில் எகிறும். இப்படி வெளிச்சம் புகாத வீட்டுல அடைஞ்சு கிடந்ததுல எனக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம வந்துடுச்சு. 'போதும்டா சாமி'னு காலி பண்ணிட்டு இந்த வீட்டுக்கு வந்துட்டோம். வாடகை 2,350 ரூபா. ஆனா, வியாதியெல்லாம் இனாம் கிடையாது!'' என்று சிரிக்கிறார் வசந்தா!

பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !

''அபார்ட்மென்ட்னு ஆசைப்பட்டு குடிபோகும்போது, அங்க ஒழுங்கான பார்க்கிங், பாதுகாப்பு, மெயின்டனன்ஸ் எல்லாம் இருக்கானு பார்த்துக்கோங்க. இல்லைனா படாதபாடு படணும்...'' என்கிற அனுராதா ரமேஷ் இப்போது தி.நகர் ஃப்ளாட் ஒன்றில் வசிக்கிறார்.

''17 ஆயிரம் ரூபா வாடகை... மூணு பெட்ரூம் ஃப்ளாட்டுனு பெருசா சொல்லவும். தைரியாம குடி போயிட்டோம். ஆனா, ஒவ்வொரு நாளும் நரக வேதனையா போயிடுச்சு. டூ-வீலரை நிறுத்தற பார்க்கிங் இடம் ரொம்ப சின்னது. முதல்ல வர்றவங்க, வண்டியை முன்னாடி கொண்டு வந்து நிறுத்திடுவாங்க. மறுநாள் நாம சீக்கிரமா கிளம்ப வேண்டி வந்தா... வண்டியை எடுக்க முடியாம திணறணும். பார்க்கிங் இடம், பாதைனு எல்லாமே பராமரிப்பு இல்லாம குப்பையாவே கிடக்கும். நல்ல வாட்ச்மேனும் கிடையாது. அதனால உடனடியா காலி பண்ணிட்டோம்'' என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் அனுராதா.

இதெல்லாம் சும்மா ரகம்... அடுத்தடுத்து வரும் கதைகளைக் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்.

சூளைமேட்டைச் சேர்ந்த ஜெனிதாவின் மகனுக்கு திருமணமாகி, சம்பந்தி வீட்டாரெல்லாம் வந்திருக்கிறார்கள். இரவு பதினோரு மணியளவில் எல்லோரும் சந்தோஷம் பொங்கப் பேசிக் கொண்டிருக்க... அங்கே வந்து நின்ற வீட்டுக்குச் உரிமையாளர்... "மொத்தம் நாலு பேரு குடியிருக்கப் போறோம்னுதானே குடி வந்தீங்க. இப்ப இப்படி ஒரேயடியா கூட்டமா இருக்கே. முதல்ல எல்லாரையும் கிளம்பிப் போகச் சொல்லுங்க" - 'தூள்' பட சொர்ணாக்கா ரேஞ்சுக்கு அடாவடி செய்திருக்கிறார்.

"பையனுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து எல்லா சங்கதியும் அந்தம்மாவுக்குத் தெரியும். எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும் அந்தம்மா ஒப்புக்கவே இல்ல. உடனடியா கிளம்பியே ஆகணும்னு அடம்பிடிச்சாங்க. இது தெரிஞ்சதும், அங்க குடியிருக்கற மத்த குடித்தனக்காரங்க மூணு பேரும் எனக்கு சப்போர்ட்டா வந்து, 'இப்படியெல்லாம் செஞ்சா... உடனடியா நாங்க எல்லாருமே வீட்டைக் காலி பண்ண வேண்டியிருக்கும்' எச்சரிக்கையா சொல்லவே... அந்தம்மா அடங்குனாங்க. ஆனா, நாங்க அடங்கல. சொல்லி வெச்ச மாதிரி, அடுத்த பதினைஞ்சு நாளைக்குள்ள அத்தனை பேருமே வீட்டைக் காலி பண்ணிட்டுக் கிளம்பிட்டோம். அந்தம்மா பேயறைஞ்ச மாதிரியாகிட்டாங்க" என்று சொன்னார்.

பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !

அடுத்து பேசுபவர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சரவணவேல். அவர் சொல்லப்போவது... வாடகைக்கு வந்தவரால் படாதபாடுபட்ட வீட்டு உரிமையாளரின் பரிதாபக் கதை.

"புரசைவாக்கத்துல ஒரு வயசான தம்பதி தன்னோட வீட்டு கீழ் போர்ஷனை வாடகைக்கு விட்டிருந்தாங்க. வாடகையை சரியா கொடுக்காததோட, வீட்டு ஓனருக்கு ஏகப்பட்ட தொந்தரவும் கொடுத்திருக்காங்க குடியிருக்க வந்தவங்க. வீட்டைக் காலி பண்ண சொன்னதுக்கு, ஓனரையே மிரட்டியிருக்காங்க. அவங்க வயசான தம்பதிங்கறதால, ஓரளவுக்கு மேல எதிர்த்து பேச முடியல. ஆனா, அவங்களோட வயசுக்குக்கூட மரியாதை கொடுக்காத குடித்தனக்காரங்க, அந்தத் தம்பதி வெளியில போயிட்டு வர்றப்பவெல்லாம், நாய்களை விட்டு கடிக்க விடற மாதிரி மிரட்டறது, நடுராத்திரில அதிகமா சத்தத்தை எழுப்பறதுனு குடைச்சல் கொடுத்திருக்காங்க.

இந்த விஷயம் என்கிட்ட வரவும், கோர்ட்டுக்கு கொண்டு போனேன். அட்வகேட் கமிஷனை அபாயின்ட் பண்ணினாங்க. போய் பார்த்தா... வாடகைக்கு வந்த இடத்துல நாலு நாய்களை வேற வெச்சுக்கிட்டு ஏக இடைஞ்சல் கொடுத்தது தெரிஞ்சுது. நியூசென்ஸ்தான்னு ஃப்ரூவ் பண்ணதும்... கோர்ட் மூலமாவே அவங்களை காலி பண்ண வெச்சோம்" என்று 'திக் திக்' கதை சொன்னார்.

சரி, வீட்டு உரிமையாளர்-வாடகைதாரர் என்றாலே கீரி-பாம்புதானா...? என்று கேட்டுவிடாதீர்கள். 'கண்ணுபடப் போகுதய்யா சின்னகவுண்டரே' என்று பாடி, சுத்திப்போடும் அளவுக்கான நட்புக் கதைகளும்கூட இருக்கத்தான் செய்கின்றன.

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் நடுநாயகமாக கிணறு, தனித்தனியே நான்கு குடித்தனம். குடித்தனக்காரர்கள் ரமாமணி, கீர்த்தனா...

''பத்து வருஷத்துக்கு மேலா இந்த வீட்டுல குடியிருக்கோம். மூவாயிரம் ரூபாய் வாடகை, மூணு மாச அட்வான்ஸ், தனி மீட்டர், தண்ணிக்கு மோட்டார்னு எல்லா வசதியும் செஞ்சு தந்திருக்காங்க. நாங்களே மோட்டார் போட்டுக்க வசதியா தனி ஸ்விட்ச் இருக்கு. ஓனர் கூடவே இருக்கறது ஒரு பெரிய பாதுகாப்பு. காலையில எழுந்துக்க கொஞ்சம் லேட்டானாகூட, எங்க வாசல்லயும் கோலம் போட்டிருக்கும். குடித்தனக்காரங்கள்குள்ளயும் அப்படியரு ஒற்றுமை'' என்றவர்களை தொடர்ந்தார், வீட்டு ஓனர் பூமா...

'பணத்தை தாண்டி மனுஷங்களோட மனசுதாங்க எங்களுக்கு முக்கியம். அட்வான்ஸ் வாங்கறதுகூட சிலசமயம் கஷ்டம்னு வரும்போது, வாடகை கொடுக்க அவங்க திண்டாடக் கூடாதுனுதான். எதுக்கும் கண்டிஷன் போடாததால, எந்தப் பிரச்னையும் நான் சந்திச்சதில்ல. அடுத்தவங்களோட கஷ்டத்தை நாமளும் உணர்ந்து நடக்கும்போது, அங்க நிம்மதி நிரந்தரமா தங்கிடும்!'' என்றார் பூமா.

மேலே கண்ட அனுபவங்களைப் பாடமாகவும், இந்த கடைசி அனுபவத்தை மெச்சத் தகுந்த உதாரணமாகவும் எடுத்துக்கொள்வோம்!

பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !

வீட்டு உரிமையாளர் - வாடகைக்கு குடியிருப்பவர் இருவருக்கு இடையேயான சட்ட டீலிங் பற்றி வழக்கறிஞர் ஜே. சரவணவேல் கூறும்போது... "தமிழ்நாடு பில்டிங்ஸ் லீஸ் அண்ட் ரென்ட் கண்ட்ரோல் ஆக்ட் (1960), செக்ஷன் 72 படி, ஓனர், ஒரு மாத வாடகையைத்தான் அட்வான்ஸாக பெறவேண்டும். ஒரு வீட்டில் வாடகைக்கு அல்லது லீசுக்கு போகும்பட்சத்தில், இருதரப்பினரும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் செய்துகொள்வது நல்லது. அப்படிச் செய்யாதவர்கள் இருதரப்புக்கும் பிரச்னை என்று வந்தால், வாடகைதாரர் அந்த வீட்டில் இருந்த தற்கான ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டெலிபோன் பில் போன்ற ஏதாவது ஒரு ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரே இடத்தில் பதினோரு மாதத்துக்கு மேல் வசிப்பவராக இருந்தால், ஒப்பந்தம் போடும்போது, கட்டாயம் பதிவும் செய்யவேண்டும். அப்படி பதிவு செய்யத் தவறினால், ஸ்டாம்ப் டியூட்டி, பெனால்டி கட்ட வேண்டியிருக்கும். பதினோரு மாதங்களுக்கு ஒரு தடவை ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருந்தால், அக்ரிமென்ட்டை பதிவு செய்ய தேவை இல்லை" என்ற வழக்கறிஞர்,

"இப்படி வாடகைதாரருக்கும் உரிமையாளருக்கும் சட்டத்தில் நிறைய பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், நம்பிக்கை, நாணயத்துடன், கொஞ்சம் மனிதாபிமானத்தையும் இருதரப்பும் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்!" என்றார்.

பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !
- ரேவதி, படங்கள் து.மாரியப்பன்
பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !
பணத்தைத் தாண்டி...மனுஷங்கதாங்க முக்கியம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism