"கணவருக்கு சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை. திருமணத்துக்கு அப்பறமும் நானும் வேலையைத் தொடர்ந்தேன். ஒருகட்டத்துல, 'இந்தத் துறையில தேவையானதைக் கத்துக்கிட்டோம். இனி, சொந்தமா ஒரு பில்டிங் கன்சல்டன்ஸி ஆரம்பிக்கலாம்'னு நம்பிக்கை வந்தது. கூடவே அந்தச் சமயத்துல நீலகிரியில ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர்களும் குறைவாவே இருந்தாங்க. இன்னொரு பக்கம் புதுசுபுதுசா பில்டிங்குகளும் எழ ஆரம்பிச்சிருந்து. 'நமக்கான சரியான தருணம் இதுதான்!'னு முடிவெடுத்து, ஆரம்பிச்சுட்டேன் பிஸினஸை.
பிஸினஸ் ஒரு பக்கம் பிக்-அப் ஆக, இன்னொரு பக்கம் எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க பிறந்தது, கணவருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சது குடும்பத்துலயும் சில மாற்றங்கள், முன்னேற்றங்கள்!" என்றவர், இப்போது தன் குழந்தைகளின் பள்ளியை அனுசரித்து குன்னூரில் தங்கியுள்ளார். தொடர்ந்து, தன் துறையிலுள்ள மேடு, பள்ளங்களை பகிர்ந்துகொண்டார்.
"வீடு கட்டணும்கிற எண்ணத்தோட அணுகற கஸ்டமர்களுக்கு கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மெட்டீரியல் வாங்கறது, நிலத்தின் தன்மையை அளவிடறது, மண்ணோட தன்மையைப் பரிசோதிக்கறது, தரமான கான்ட் ராக்டர்களை ஏற்பாடு செஞ்சு தர்றது, பில்டிங்கோட பிளானை டிசைன் செஞ்சு தர்றதுனு... எல்லாத்தையுமே எங்க கன்சல்டன்ஸி பொறுப்பேத்துக்கும். உதாரணத்துக்கு, இப்போ குளம், ஏரி மற்றும் பள்ளத்துக்கு பக்கத்துல இருக்கற ஒரு இடத்தைக் காட்டி, 'இங்க வீடு கட்டணும்'னு கஸ்டமர் சொன்னா, 'கடினத் தன்மை இல்லாத இந்த மண்ணுல வீடு கட்டுறது ரிஸ்க்'னு அவங்களுக்கு புரிய வைக்கறதோட, அதுக்கு ஒரு மாற்று வழியையும் அவங்களுக்கு பரிந்துரைக் கணும்.
அடுத்ததா, எங்க கிளையன்ட் ஒரு வீட்டு மனை வேணும்னு எங்ககிட்ட வந்தார்னா, அதை நாங்க இன்னொரு பார்ட்டிகிட்ட இருந்து வாங்கி, இவங்களுக்கு விற்போம். ஒருவேளை அந்த மனையில ஏதாவது வில்லங்கங்கள் இருக்கற பட்சத்துல, பிரச்னைகள்தான். போலீஸ்ல புகார் தர, பேங்க்ல பதில் சொல்லணு அலைச்சல் ஆரம்பிச்சுடும்.
இப்போ கிளையன்ட் நம்மகிட்ட ஒரு கன்ஸ்ட்ரக்ஷனுக்கு வர்றார். அதுக்கான ஒரு தொகையை நாம 'கோட்' பண்ணுவோம். ஆனா, வேலை நடக்கும்போது சில காரணங்களால தொகை நாம எதிர்பார்த்ததைவிட அதிகமா செலவாகும். புரிஞ்சுக்கற கிளையன்ட்ஸ்கிட்ட தொகையை வாங்கிடலாம். ஆனா, பிரச்னை பண்ற கிளையன்ட்ஸையும் நஷ்டத்தையும் பொறுத்துதான் போகணும். ஏன்னா, இந்த தொழில்ல நல்ல பேரும் கிளையன்ட்ஸும்தான் நமக்கு முக்கியம்!" என்று அனுபவம் பேசிய புனிதா,
"இந்த ரியல் எஸ்டேட் கன்சல்டன்ஸியை பொறுத்தவரை கோர்ட், கேஸ்னு அலைய வேண்டிவரும்போது சோர்ந்து சுருங்கிடாம, 'இது தனிப்பட்ட மான, அவமானத்துக்கான விஷயம் இல்ல. நம்ம தொழில்ல இருக்கற நியாயத்தை எடுத்து சொல்ல வேண்டிய இடம்'னு தைரியமா நிக்கணும்'' என்று 'கோலங்கள்' சீரியலில் வரும் 'அபி' போல நிமிர்ந்தவர்,
''லாபமும் நஷ்டமும் மாறி மாறி வர்ற இந்த தொழில்ல, வெற்றி வந்தா கொண்டாடக்கூடாது. நஷ்டம் வந்தா, 'அய்யய்யோ... பணம் போயிடுச்சே'னு உட்கார்ந்துட்டா... அடுத்து நடக்க வேண்டிய வேலையும் போயிடும். அதனால கிடைச்ச அனுபவத்தை குறிச்சு வச்சுக்கிட்டு, அடிச்சு புடிச்சு பணத்தைப் புரட்டி தொழிலை நடத்திக்கிட்டே இருக்கணும். சரியா சொல்லணும்னா... கீழே விழுந்தாலும் குதிரை மாதிரி உடனே எந்திரிச்சு ஓடிக்கிட்டே இருக்கணும்" என்றார், இத்தனை வருட அனுபவமும் உழைப்பும் தந்த தன்னம்பிக்கையில்!
படங்கள் ஜா.ஜாக்சன்
|