அவருக்கு ஜோதிடத்தில் அளவு கடந்த நம்பிக்கை. வழக்கமான ஜோதிடரிடம் ஒரு தடவை ஜாதகத்தைக் கொடுத்தார். 'உங்களுக்கு இன்னும் ரெண்டு வருஷத்துக்கு நேரம் சரியில்ல. மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும் வரும். அதனால கொஞ்ச காலத்துக்கு புதுசா எந்தக் காரியத்துலயும் ஈடுபடாம சும்மா இருங்க' என்று சொன்னார் ஜோதிடர்.
வீடு திரும்பியவர், சலிப்புடன் இந்த விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்டதுமே, 'ஏற்கெனவே நம் கணவர் தொட்டதுக்கெல்லாம் பயப்படுவார். இதுல இது வேறயா..?' என்று வருத்தப்பட்ட மனைவி, அடுத்த சில நாட்களில், 'நான் போய் என்னுடைய ஜாதகத்தைக் கொடுத்துப் பார்த்துட்டு வரேன்' என்று கிளம்பினார்.
திரும்பி வந்தவர், 'என்னுடைய ஜாதகம் ரொம்பவே சாதகமாக இருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துல எனக்குச் சொந்த வீடு அமையப் போகுதுனு ஜோசியர் சொல்லிட்டார்' என்று குஷியோடு கணவரிடம் கூறியதோடு, அவரை பல வகையிலும் தேற்றி, முடுக்கி விட்டார். 'மனைவி சொல்லே மந்திரம்' என்று கூடுதலாக உழைத்த கணவர், ஆபீஸ் மூலமாகவே வங்கிக் கடன் பெற்று சொந்த வீடு ஒன்றையும் வாங்கினார்.
கிரஹப்பிரவேசத்தன்று நட்பு வட்டம், உறவினர் வட்டம் எல்லாம் தேடி வந்து அவரைப் பார்த்து வாழ்த்த... வீடே அமர்க்களப்பட்டது. அப்போதுதான் ரகசியத்தை உடைத்தார் மனைவி...
'நான் ஜோசியரையே போய்ப் பார்க்கல. ஜோசியத்து மேல எனக்கும் நம்பிக்கை இருந்தாலும், நம்மளோட முயற்சியால கூடுமான வரைக்கும் எதையும் சாதிச்சிட முடியும்கிறத நம்புறவ நான். அதனாலதான், நேரம் காலம் சரியில்லனு நீங்க ஒரேயடியா ஓய்ஞ்சு போய் உட்கார்ந்துடக் கூடாதுங்கறதுக்காக அப்படிச் சொன்னேன். அது வெற்றியைக் கொடுத்துடுச்சு. ஒருவேளை அது என்னோட ராசியா கூட இருக்கலாம்.'
இது இணைய தளத்தில் படித்த ஒரு கதை. ஆனால், 'வீட்டுக்கு வீடு வாசற்படி' என்பதுபோல, இல்லத்தரசிகள் பலரும் நிஜத்திலும் இப்படி ஏதாவது காரணத்தோடு கணவன்களை முடுக்கிவிட... அதுதான் ஆனந்தம் விளையாடும் வீடாக எழுகிறது.
இப்படியெல்லாம் படாதபாடுபட்டு நீங்கள் கட்டும் வீட்டுக்கு... ராம காரியத்தில் அணில் போல வங்கிக் கடன், மனை, கட்டுமானம், சட்ட திட்டங்கள், வாஸ்து என்று பல்துறை தகவல்களையும் இங்கே திரட்டிக் கொடுத்திருக்கிறோம்!
'ஆடம்பரமான பங்களாவைவிட, தேவைக்குப் போதுமான வீடே மகிழ்ச்சியின் அஸ்திவாரம்' என்பார்கள். செங்கல், சிமென்ட், மணல் என்று குழைக்கும்போது... அன்பையும் இணைத்துக் கட்டுங்கள் தோழிகளே... அந்த மகிழ்ச்சி அங்கே நிரந்தரமாக குடியேறிவிடும்!
உரிமையுடன் உங்கள்
|