Published:Updated:

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

Published:Updated:

பகுதி -12
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
அப்பாவைப் போல கணவர்...அம்மாவைப் போல மனைவி !

சுவாமி சுகபோதானந்தா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

"ஒருவருக்கு தாய் மொழி மறந்து போகுமா?"

"நிச்சயமாக மறந்து போகாது!"

"காதல் மொழி மறந்து போகுமா?"

"?"

மறந்து போகக்கூடாது. ஆனால், ஏனோ தெரியவில்லை திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பல தம்பதிகளுக்கு காதல் மொழி மறந்துவிடுகிறது.

இதோ இந்தக் காட்சியைப் பாருங்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி. தூங்கி எழுந்து ஹாலுக்கு வரும் கணவன் அடுக்களையில் இருக்கும் மனைவியிடம், "நான் விரும்பிக் குடிக்கிறது இந்த காபி ஒண்ணுதான். அதையும் இப்படி ஆறிப்போய் கொடுத்தா எப்படி?" என்று சலிப்போடு கேட்கிறான்.

பத்தடி தூரத்தில்தான் மனைவி இருக்கிறாள் என்றாலும், எந்தப் பதிலும் இல்லை.

"என்ன மாலதி... நான் கேட்கறது உன் காதுல விழலையா?"

அப்போதும் பதிலில்லை.

தான் அலட்சியப் படுத்தப்படுவதாகவும், அவமானப் படுத்தப்படுவதாகவும் உணர்ந்து குரலை உயர்த்தி பேச ஆரம்பிக்கிறான்.

பதிலுக்கு மனைவி, "காலையில எழுந்து ஒரு வண்டி துணியை துவைச்சதுல மூச்சு பிடிச்சுக்குச்சு. தைலத்தை தேடி கொடுப்பீங்கனு 'என்னங்க... என்னங்கனு'னு காட்டுக் கத்து கத்தினேன். காதுலயே விழாத மாதிரி இழுத்துப் போர்த்திட்டு தூங்கிட்டு இருந்தீங்க. முதுகுவலியோட வீட்டைப் பெருக்கி, டிபன், சாப்பாடு எல்லாம் செஞ்சு முடிக்கற மட்டும் தூங்கிட்டு இருந்துட்டு, பத்து மணிக்கு எழுந்து வர்றீங்க. ஒரு பொம்பளை தனியா கிடந்து இவ்வளவு கஷ்டப்படறாளேனு ஒரு ஈவு, இரக்கம் வேணாம். பத்து மணிக்கு எழுந்து காபியை குடிச்சுட்டு ஆயிரெத்தியெட்டு நொட்ட சொல்லு சொன்னா, எப்படி பதில் சொல்லத் தோணும்?!"

"எனக்கு கிடைக்கிறதே ஒரே ஒரு நாள் லீவ். அதைச் சண்டைபோட்டு வீணடிச்சுடாதே!"

"என்னைப் பார்த்தா உங்களுக்கு சண்டைக்காரி மாதிரி தெரியுதா? நான் ஒண்ணும் உங்க அம்மா மாதிரி சண்டைக்காக அலையறவ இல்லை!"

முடிவேயில்லாமல் கணவனுக்கும் மனைவிக்கும் இப்படி வாக்குவாதங்கள் தொடர்கின்றன.

காதலிக்கும்போது கண் அசைவுகளாலேயே ஓராயிரம் வார்த்தைகள் பேசிக்கொள்ளும் காதல் ஜோடிகள், திருமணமாகி ஒன்று, இரண்டு ஆண்டுகள் ஆவதற்குள்ளேயே எப்படி காதல் மொழி பேசத்தெரியாத ஊமைகளாகிவிடுகிறார்கள் என்பது பெரும் ஆச்சரியம். கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று சொன்னாலும், பல தம்பதிகளின் வாழ்க்கையில் இது சாத்தியப்படுவதில்லை. விட்டுக் கொடுத்து வாழ்வது என்பது கம்பசூத்திரமில்லை.

கணவன், மனைவி உறவை கொஞ்சநேரம் மறந்துவிட்டு அப்பா - பெண், அம்மா - மகன் போன்ற உறவுகளை எடுத்துக் கொள்வோம். அப்பா என்கிறவர் குறைகளே இல்லாதவரா? அப்பாவும் உங்களை சினிமாவுக்கு அழைத்துப் போகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு கடைசி நேரத்தில் காலை வாரியிருப்பார்தானே? அப்பாவும் பல நாட்கள் வீட்டுக்கு லேட்டாக வந்திருப்பார் இல்லையா? அப்பாவும் உங்களிடம் சில சமயங்களில் கடும் சொற்களை சொல்லியிருப்பார்! இருந்தாலும் எல்லா மகள்களுமே அப்பாவிடமிருக்கும் குறைகளோடுதான் அப்பாவை நேசிக்கிறார்கள். நீங்களும் இப்படித்தான் உங்கள் அப்பாவை நேசித்திருப்பீர்கள்!

அப்பாவிடம் குறைகள் இருப்பது மாதிரி கணவரிடமும் குறைகள் இருக்கின்றன. ஆனால், பல சமயம் கணவர் மீது உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் வருகிறது. காரணம் என்ன தெரியுமா? அவருடைய குறைகள் மட்டுமல்ல. கணவர் மீது உங்களுக்கு வரும் கோபத்துக்கு முக்கிய காரணம்... உங்களிடமிருக்கும் குறைகளும்தான்.

நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்கள் குறைகளைக் கண்டு உங்கள் கணவர் கோபப்படுவது போல, உங்கள் அப்பா கோபப்பட மாட்டார். உங்கள் குறைகள் உங்கள் அப்பாவுக்கு பழகிவிட்டது போல, உங்கள் கணவருக்கும் பழகிவிட்டால் அவரும் கோபப்படமாட்டார்.

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !

உதாரணத்தோடு சொன்னால் இன்னும் சுலபமாகப் புரியும். மாதத்தில் மூன்று நாள் உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது கோபம் அதிகமாக வரும். அப்போது நீங்கள் என்ன பேசினாலும் அதைக் காதில் வாங்காமல் இருந்துவிட வேண்டும் என்று அப்பாவுக்குத் தெரியும். இந்த சின்ன விஷயம், கணவருக்குத் தெரியாது.

நீங்கள் சிறுமியாக இருந்தபோது, உங்கள் பள்ளித்தோழியிடம் சண்டை போட்டுக் கொண்டு அப்செட்டானால்கூட அதை அப்பாவே கண்டுபிடித்து ஆறுதல் சொல்வார். ஆனால், நீங்கள் அப்செட்டாக இருக்கிறீர்கள் என்றால் அதை உங்கள் கணவரால் தானாகவே புரிந்துகொள்ள முடியாது. "நான் அப்செட்டாக இருக்கிறேன்!" என்று நீங்கள் வாய்விட்டுச் சொன்னாலும், "அந்த பிரச்னையைஎல்லாம் என்கிட்ட ஏன் கொண்டுவர்றே?" என்று கணவராகப்பட்டவர் பல சமயம் விலகி நடக்க ஆரம்பித்துவிடுவார்.

"என்ன சுவாமி... எல்லாப் பிரச்னைகளுக்கும் மனைவிகளையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறீர்கள். கணவர்கள் எல்லாம் 22 காரட் தங்கங்களா?" என்று கேட்காதீர்கள். அவர்களுக்கும் நான் சொல்ல வேண்டியது ஏராளமாக இருக்கிறது.

மகாகணம் பொருந்திய கணவன்மார்களே... உங்களைப் பார்த்து கேட்கிறேன். உங்கள் அம்மா குறையே இல்லாதவரா? இருந்தாலும் உங்கள் அம்மாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறீர்கள்தானே? உங்கள் அம்மாவிடம் குறைகள் இருப்பது போலத்தான் உங்கள் மனைவியிடம் சில குறைகள் இருக்கின்றன. மனைவியை நேசிக்கவிடாமல் அவரோடு நீங்கள் சதா சண்டை போடுவதற்கு காரணமாக இருப்பது என்ன? யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே உண்மை விளங்கும்.

உங்கள் அம்மாவிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும் அவர் உங்கள் மீது பரிசுத்தமான பாசம் வைத்திருக்கிறார் என்பதில் உங்களுக்கு ஊசிமுனை அளவுக்குகூட சந்தேகமில்லை. உங்கள் மனைவியும் உங்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். ஆனால், அம்மாவுக்கு மனைவிக்கும் இடையே இருக்கும் ஒரு பெரிய வித்தியாசம்... நீங்கள் அம்மா செல்லம் என்பதால், அம்மா உங்கள் தவறுகளை உங்களுக்கு மென்மையாக எடுத்துச் சொல்வார். ஆனால், மனைவிக்கு உங்கள் மீது பாசம் உண்டே ஒழியே, உங்கள் அம்மா போல உங்களுக்கு 'செல்லம்' கொடுக்க மாட்டார். இந்த வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ளும்போது உங்கள் மனைவியிடமிருக்கும் குறைகளை பூதக்கண்ணாடிக் கொண்டு பார்க்கும் காரியத்தை நீங்கள் நிச்சயம் செய்ய மாட்டீர்கள்.

ஆக, கணவன் - மனைவி உறவுக்கு அச்சாணி யாகவும் மையப்புள்ளியாகவும் விளங்கும் ஒரே விஷயம் - நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் அதே விஷயம் - நிபந்தனையற்ற காதல்!

- அமைதி தவழும்...

சிந்தனை செய் மனமே!

'உன்னவிட நான்தான் அதிகமாக சம்பாதிக்கிறேன்' என்று மனைவியோ, அல்லது 'உன்னைவிட எனக்குத்தான் அதிக சொத்து பத்து இருக்கு' என்று கணவனோ அகங்காரத்தோடு நடக்க ஆரம்பித்தால்... கணவன் & மனைவி உறவு என்பது இரண்டு எதிரிகளுக்கு இடையிலான உறவுபோல இறுக்கமானதாகிவிடும்.

காகம் ஒன்று குப்பை தொட்டியில் அழுகிப்போன ஒரு மாமிச துண்டைப் பார்க்கிறது. பாய்ந்து சென்று அதை கவ்விக் கொண்டு விண்ணை நோக்கிப் பறக்க, ஒரு கழுகுக் கூட்டம் துரத்துகிறது. அழுகிப்போன மாமிசத்-துண்டை காப்பாற்றிக்கொள்ள அது எங்கெங்கோ பறக்கிறது. ஆனால், கழுகுக் கூட்டமும் விடாமல் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் அழுகிப்போன மாமிசத் துண்டை காகம் விட்டுவிட... கழுகுக் கூட்டமும் காகத்தை விட்டு, மாமிசத் துண்டை நோக்கி ஓடிவிட்டது. மாமிச துண்டை இழந்ததால்தான் கழுகுக் கூட்டத்தின் பிடியில் இருந்து காகத்துக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த கதையில் வரும் 'மாமிசத் துண்டு' என்பது அகங்காரத்தின் குறியீடு. அகங்காரத்தை விட்டுவிட்டால், துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும் என்பதே நீதி.

பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
 
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
பெண்ணே.... ரிலாக்ஸ் ப்ளீஸ் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism