''விஜய் டி.வி-யில 'யாமிருக்க பயமேன்' சீரியல் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க... நைட் டின்னருக்கு ஆம்லெட்கூட போட்டுத் தர மாட்டேங்கறாங்கப்பா, எங்க மம்மி! ஏன்னு யோசிக்கறீங்களா...? ஏன்னா... ஏன்னா... பக்தி சீரியலாம்!''
- இப்படி படுமொக்கையா ஒரு ஜோக் சொல்லித்தான் பேட்டியை ஆரம்பிச்சேன் விஜய் டி.வி-யோட புரோகிராம் ஹெட் பிரதீப் மில்ராய் பீட்டர்கிட்ட! 'ஹா ஹா ஹா!'னு சிரிச்சவர், சீரியல் பத்தின கதை சுருக்கத்தையும் சொன்னார்.
"பழனி முருகன் சிலையை உருவாக்கினது போகர்ங்கற சித்தர். இது புராணங்கள் கூறும் உண்மை. ஆனா, 'அதேமாதிரி இன்னொரு நவபாஷண சிலையையும் போகர் உருவாக்கியிருக்கார். அது பழனி மலைக்குள்ளதான் எங்கயோ இருக்கு'ங்கற நம்பிக்கையும் காலம் காலமா தொடர்ந்துட்டு வருது. அந்த 'இரண்டாவது சிலை'யை மையப்படுத்திதான் இந்த சீரியல் நகரும். கதைப்படி, இந்திராணி அம்மாவும் தினைக்காத்தான் என்ப வரும் அந்த சிலையை தங்களோட பரம்பரை சொத்தா நினைக்கறாங்க. இதனால அந்த ரெண்டு குடும்பத்துக்கும் பகை. இதுக்கு நடுவுல அந்த ஊர்ல நடந்த கொலையை விசாரிக்க புதுசா ஒரு இன்ஸ்பெக்டர் வர்றார். கூடவே, சிலையைத் தேடற கூட்டம் மலையில வாழற சித்தர்களைப் பார்க்கறாங்க. அவங்ககிட்ட நிறைய அமானுஷ்ய சக்திகள் இருக்கு. இதுக்கு மேல நீ சீரியல் பார்த்து தெரிஞ்சுக்கோ!" ஃபுல்ஸ்டாப் வச்ச பிரதீப்கிட்ட,
"ஆன்மிகத்தை, அது சார்ந்த நம்பிக்கையை வெச்சு சீரியல் எடுக்கறீங்க. கத்தி மேல் நடக்கற வேலை. எப்படிச் சமாளிக்கப் போறீங்க?"னு கேட்டேன்.
"இது இந்திரா சௌந்தரராஜன் சாரோட கதை ரீட்டா. அதனால, எதை, எங்கே, எப்படி ஜஸ்டிஃபை பண்ணணும்ங்கற பொறுப்பை எல்லாம் சார் அழகா பார்த்துப்பார். தவிர, இந்த கதையோட கருதான் புராண நம்பிக்கையை சார்ந்ததே தவிர, கதை நிகழ்வுகள் எல்லாம் முழுக்க முழுக்க கற்பனைதான். எல்லாத்துக்கும் மேல, முருகன் இருக்க பயமேன்?!"னு தெம்பா முடிச்சார் பிரதீப்!
விட்டா விஜய் டி.வி. ஆபீஸ்ல விபூதியே கொடுத்திருப்பாங்க! அவ்ளோ இன்வால்வ்மென்ட்டாம்!
கலைஞர் டி.வி. 'அபிராமி' சீரியலோட எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் கீர்த்தனாதான் சீரியலோட கதாசிரியர்னு தெரியவர, அட்ரஸ் வாங்கிட்டு அவங்க வீட்டுக்குப் போனேன். "வா ரீட்டா!''னு வெல்கம் பண்ணினது... குட்டி பத்மினி மேடம்!
|