திருமணமும் விமரிசையாக முடிந்து, வலது காலை எடுத்து வைத்து நுழைந்த அன்றே, என் மகனிடம் முகம் கொடுத்து பேசவில்லை மருமகள். யாரையும் நேருக்கு நேர் பார்ப்பதில்லை. தனக்குத் தானே சிரித்துக் கொள்வதும், எல்லோரையும் எதிரிபோல் பார்ப்பதும், கண்டபடி ஏதேதோ உளறுவதும், எப்போதும் தலை விரிகோலமாக திரிவதுமாக எங்களையெல்லாம் திகிலில் ஆழ்த்திவிட்டாள். சமையலாவது தெரியுமா என்றால், அடுப்பை பற்றவைத்து, வெறும் சட்டியை வைத்துவிட்டு போய்விடுவாள். எந்த வேலையும் முழுமையாக செய்யத் தெரியவில்லை. வெளியே அழைத்துப் போனால் பார்ப்பவர்களிடமெல்லாம் சண்டை.
அவளுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று விசாரித்தபோது, அவள் மனநோயால் பாதிக்கப்பட்டு, வருடக்கணக்கில் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டு வருவதும், 'திருமணம் செய்தால் சரியாகிவிடும்' என்ற நம்பிக்கையில் திருமணம் நடத்தியதாகவும் தெரிந்து, கதிகலங்கிப் போனோம்.
இதுபற்றி, சம்பந்தியிடம் கேட்டபோது, எங்களின் பரிதவிப்பைச் சற்றும் உணராமல், "வேணும்னா டைவர்ஸ் பண்ணிடுங்க" என்று மகளை அழைத்துப் போய்விட்டார்.
பதினைந்து நாட்கள் கழித்து சம்பந்தி வீட்டுக்குச் சென்றபோது, மருமகள் மட்டும் தனியாக இருந்தாள். அவளுடைய செய்கைகளில் துளியும் மாற்றமில்லை. எங்களைக் கண்டபடி அசிங்கமாகத் திட்டி அனுப்பிவிட்டாள். அவளுடைய பெற்றோரும் "இப்படி திடீர்னெல்லாம் வீட்டுக்கு வராதீங்க" என்று போன் மூலம் மிரட்டலாகச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல், கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடக்கிறது.
திருமணமான ஒரே வாரத்தில் குடும்பத்தின் ஒட்டுமொத்த நிம்மதியையும் இழந்து, ஊருக்குள்ளும் அவமானப்பட்டு நிற்கிறோம். படித்த பெண், பார்ப்பதற்கும் நன்றாக இருக்கிறாள் என்பதை மட்டுமே பார்த்த நாங்கள், முழுமையாக விசாரித்து அறியாது போனதால் வந்த தண்டனை இது!
வாழ்க்கை போனது ஒரு பக்கமிருக்க... வழக்கு எப்படி போகுமோ... மகனின் வாழ்க்கை என்னாகுமோ... என்றெல்லாம் ஏராளமான கேள்வி களுடன் கதறுகிறது என் நெஞ்சம். என் மன உளைச்சலுக்கு மருந்திடுங்கள் தோழிகளே..!
- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
|
|