Published:Updated:

வீடு சிறப்பிதழ் !

வீடு சிறப்பிதழ் !

வீடு சிறப்பிதழ் !

வீடு சிறப்பிதழ் !

Published:Updated:

 
வீடு சிறப்பிதழ் !
வீடு சிறப்பிதழ் !
வீடு சிறப்பிதழ் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவு இல்லம் கைவசமாக....

வீடு சிறப்பிதழ் !

சொந்த வீடு... இதுதான் நம் எல்லோருக்கும் வாழ்நாள் கனவு! அது, ஒருவரின் சமூக அந்தஸ்தையும், கௌரவத்தையும் நிர்ணயிக்கும் அடிப்படை அடை யாளமாகவும் பார்க்கப்படுவதால் மிகுந்த பொருட்செலவிலும், கனவு களைக் குழைத்தும் கட்டுகிறோம்! அந்த இல்லம் வாழ்வாங்கு வாழ, முக்கியமான சில விஷயங்களை 'அவள்' அழகாக அடுக்கியிருக்கிறாள் இங்கே. வீடு கட்ட முடிவெடுத்து விட்டால்... முதலில் இந்த அடுக்குகளை அவசியம் ஒவ்வொன் றாகப் பிரித்துப் பாருங்கள்!

ஹேவ் எ ஹேப்பி ஹோம்!

 

வீடு கட்டுவதற்கு முன்... பாத்தி போட்டு விடுங்கள்!

வீடு கட்டத் தொடங்கும் முன் மரம், செடி, கொடி வளர்க்கவும் திட்டமிட்டால்... வீடு கட்டி முடிக்கும்போது சிறு தோட்டமும் செழித்து வளர்ந்து, வீட்டின் அழகை அதிகப்படுத்தும். சரி... என்னென்ன செடிகள், மரங்கள் வீட்டுக்கு அத்தியாவசியம்..? இதோ...

1. வீட்டைச் சுற்றிலும் மரம் வளர்ப்பதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. வீட்டின் முன்பக்கம் பப்பாளி, மல்லிகை, செம்பருத்தி போன்றவற்றை வைக்கலாம். மாலையில் மனமும் உடலும் சோர்ந்து இருக்கும் வேளையில்... மல்லிகையின் மணம்... வீட்டையும் நம்மையும் ரம்மியமானதொரு சூழலுக்குள் ஆழ்த்தும்.

வீடு சிறப்பிதழ் !

2. வீட்டின் முன் கட்டாயம் வளர்க்க வேண்டிய மரம்... வேம்பு. இது வீட்டின் முன் இருப்பது, ஒரு டாக்டர் வீட்டிலேயே இருப்பதற்குச் சமம். வீட்டுக்குப் பின்பக்கம் புங்கன் மரம் வளர்க்கலாம். இது சுத்தமான ஆக்ஸிஜனைத் தரக்கூடியது.

3. பெரிய தோட்டம் அமைந்து, அதில் பல மரங்கள் வைக்கும் வரம் பெற்றால்... பலன் தரும் தென்னை, மா போன்றவற்றை தகுந்த இடைவெளியோடு நடலாம். கவனம்... வீட்டுக்கு அருகில் இத்தகைய மரங்களை நடுவது வேறு சில இடையூறுகளுக்கு வழி வகுக்கும்.

4. வீட்டில் புளியமரம், ஆலமரம், அரசமரம் போன்ற வேர்களை அதிகமாக ஊடுருவச் செய்யும் மரங்களை வளர்க்கக் கூடாது. யூக்லிப்டஸ் மரத்தையும் தவிர்க்கலாம். இது நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிவிடும்.

5. ஆரோக்கியமான வாழ்க் கைக்கு வீட்டுத் தோட்டத்தில் காயங்களை ஆற்றும் வெட்டுக்காய பச்சிலை, பெண்களின் மாதாந்தர வயிற்றுவலிக்கு நிவாரணியான அம்மான் பச்சரிசி இலை, வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் உடம்பு சூட்டைத் தணிக்கும் ஆவாரம் பூ, மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும் கீழாநெல்லி ஆகிய மூலிகை செடிகளை வளர்க்கலாம்.

6. வீடு கட்டும்போது, எழும்பும் சுவருக்கு அருகில் ஏற்கெனவே மரம் இருந்தால் அந்த மரத்தை வெட்டத் தேவையில்லை. மரத்துக்கு நேராக சுவரை ஒட்டி ஒரு கால்வாய் எடுத்து, வேர்களை மட்டும் வெட்டிவிட்டால் போதும். மரத்தால் எந்த தொந்தரவும் இருக்காது.

மனை எழும்புகிறது... மகிழ்ச்சி வளர்கிறது!

வீடு சிறப்பிதழ் !

வீடு கட்டும்போது இன்ஜினீயரின் கையில் பொறுப்பைக் கொடுத்துவிட்டு விலகிக் கொள்ளாமல், தண்ணீர், அஸ்திவாரம், சிமென்ட், செங்கல், ஃப்ளோர், பெயின்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்! அதற்கு...

7. தண்ணீர் தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரிமானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.

8. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, 'நீர்மூழ்கி மோட்டார்களை'த் தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களில் உஷாரக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம்கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார்பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்னை இருக்காது.

9. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் 'அலாரம்' பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

வீடு சிறப்பிதழ் !

10. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.

11. சிமென்ட் தரமான சிமென்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமென்ட்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமென்ட்.

12. மூட்டைக்குள் இருக்கும் சிமென்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமென்ட்டைப் போடும்போது அது மிதந்தால்... தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் கெட்டி தட்டி இருந்தாலும் தரமற்றது.

13. சிமென்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.

14. மணல் மணலில் அதிக தூசு தும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

15. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

16. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால், கடல் மணலுக்கு கண்டிப்பாக 'நோ' சொல்லிவிடுங்கள்.

வீடு சிறப்பிதழ் !

17. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய 'சிலிக்கா' அதிகம் இருந்தாலும், பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.

18. வீடு கட்டுவதற்கு முன்பு கட்டாயமாக மண் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் ஃபவுண்டேஷனைத் தீர்மானிக்கலாம் என்கிறது 'இண்டியன் பெஸ்ட் கன்ட்ரோல்' எனும் அமைப்பு.

19. அஸ்திவாரம் அமைக்கும்போது கரையான் மருந்து தெளிப்பதும் அவசியம். குறைந்தபட்சம் 60 ஆண்டுகள் நீடித்திருக்க வேண்டிய சிமென்ட் கட்டடங்கள்... கரையான் காரணமாக, 30 ஆண்டுக்குள்ளேயே ஆட்டம் காண வாய்ப்பிருக்கிறது.

20. இரும்புக் கம்பிகள் கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வீடு சிறப்பிதழ் !

21. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

22. இரும்பின் மேல் கொஞ்சம்கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயின்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்தவித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால்... பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.

23. செங்கல் வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

24. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய, நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள். பிசிறு பிசிறாக வந்தால்... தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.

25. இப்போதெல்லாம் 'இன்டர்லாக் செங்கல்கள்' என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.

'சுவர் பாதி...
தரை மீதி...
கலந்து கட்டிய
கோயில் நான்'!

நாம் குடியிருக்க கட்டிய வீட்டை கம்பீரமாகக் காட்டுவது சுவர் களும் தரைகளும்தான். அவற் றுக்கும் பாய்ச்சுங்கள் கொஞ்சம் அக்கறை!

26. 'ஃப்ளோரிங் மெட்டீரியல்' என சொல்லப்படும் தரை தளத்துக்கு முன்பு சிமென்ட்டைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தினார்கள். பிறகு... மொசைக். அது வளர்ந்து டைல்ஸ், மார்பிள், கிரானைட் என நீண்டாலும்... நடுத்தரமக்கள் விரும்புவது டைல்ஸைத்தான்.

வீடு சிறப்பிதழ் !

27. மார்பிள்ஸைவிட விலை மலிவானது டைல்ஸ். அதோடு பலவிதமான டிசைன்களில் கிடைக்கிறது என்பதால் அதிக டிமாண்ட் இதற்கு. பரவலாக செராமிக் டைல்ஸ்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

28. டைல்ஸ் பயன்படுத்தும்போது அடுத்தடுத்த கற்கள் சந்திக்கும் பகுதியில் ஒரு சின்ன இடைவெளி வரும். அதில் நாளடைவில் அழுக்கு சேர ஆரம்பிக்கும். அதை 'கெமிக்கல் லிக்விட்' போட்டுக் கழுவும்போது, அந்த இடத்தில் தரை வீணாகும். இதைத் தடுப்பதற்கு, இரு டைல்ஸ்களுக்கு இடையேயான இடைவெளியை நிரப்ப 'ஃபில்லர் மெட்டீரியல்' (தனியே கிடைக்கிறது) பயன்படுத்தினால், பல வருட பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டு.

29. தரமில்லாத டைல்ஸையும் ஒரிஜினல் போலவே தயாரிக்க பல நிறுவனங்கள் வந்துவிட்டதால் நல்ல டைல்ஸ் எது என்று கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. பிராண்டட் டைல்ஸ், பிராண்டட் அல்லாத டைல்ஸ் இரண்டையும் தனித்தனியாக எடை போட்டுப் பார்க்க வேண்டும். பிறகு இரண்டையும் தனித்தனியாக தண்ணீரில் அமிழ்த்தி வைத்து எடுத்து எடை போட, எடையில் வித்தியாசம் காட்டினால் அது போலி! நல்ல டைல்ஸ் எடை மாறாது.

வீடு சிறப்பிதழ் !

30. மார்பிள்ஸ்... இயற்கையாக கிடைக்கும் ஒருவகையான சுண்ணாம்புக் கல். ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பூமியின் உள்ளே பாறை பாறையாக மார்பிள்ஸ் கிடைக்கின்றன. டைல்ஸைவிட சற்று விலை கூடுதலானது. ஆனால், இது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஏற்ற ஒன்றாக இருக்காது - குறிப்பாக, சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கு!

31. 'வெளிநாட்டு மார்பிள்ஸ்' என்றவுடன் ஆசையாக வாங்கத் தேவையில்லை. ஏனெனில், சில சமயங்களில் அவர்கள் ஓட்டை உள்ள மார்பிள்ஸை பசை வைத்து அடைத்து செகண்ட் குவாலிட்டியாக விற்கிறார்கள். பசை பிரிந்து, மார்பிள் உடைந்து, தரை நாசமாகிவிடும் என்பதால் செலக்ஷனில் ஜாக்கிரதையாக இருங்கள்.

32. கிரானைட் கற்களும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியவைதான். வெளி மாநில கற்கள் தரமானது என்ற எண்ணம் தவறானது. நம் தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் கிடைக்கும் கற்களும் தரமானவையே. தமிழ்நாடுதான் கிரானைட் தொழிலில் இந்தியாவின் முன்னோடி. 'சிலேட் ஸ்டோன்' எனப்படும் கடப்பா கற்களையும் கிரானைட்டுக்குப் பதிலாக பயன்படுத்தலாம்.

சுவர் பராமரிப்பு பற்றி சில வரிகள்!

சுவரின் சுவாசம்... டிஸ்டெம்ப்பர், பெயின்ட் வகைகள்தான்! அதன் தரமும் நிறமும் சுவர்களுக்குக் கூடுதல் பொலிவைத் தரும். எனவே, அவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது... கீழே இடம்பெற்றிருக்கும் விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்!

33. வீட்டுக்குள் அடிக்க வேண்டிய பெயின்ட் நிறங்களைத் தேர்வு செய்வதில் ஏனோதானோ மனநிலை இருக்கக் கூடாது. வீட்டின் அழகோடு சேர்ந்து, நம் சிந்தனையையும் சுகாதாரத்தையும்கூட தீர்மானிப்பவை நிறங்கள். 'சரியான நிறங்களை சுற்றுப்புறங்களில் பயன்படுத்தும்போது கேன்சரைக்கூட கட்டுப்படுத்த முடியும்!' என்கிறது அறிவியல்.

34. வீட்டின் உள்பகுதிகளில் பொதுவாக வெளிர் நிறங்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. அது அமைதியான மனநிலைக்கு உதவும்.

35. வீட்டு உபயோகப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தும் வரவேற்பறை உள்ளிட்ட அறைகளில் வெள்ளை அல்லது க்ரீம் நிறங்களைப் பயன்படுத்தலாம். இவை எந்த நிறமுள்ள வீட்டு உபயோகப் பொருட்களோடும் இணைந்துபோகும்.

வீடு சிறப்பிதழ் !

36. எந்தெந்த அறைகளில் யார் யார் வசிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து, அதற்கேற்ப வண்ணங்களைப் பயன்படுத்தலாம். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் அறைக்கு, அவர்களை உற்சாகப்படுத்தக்கூடிய வெளிர் நீல நிறத்தைப் பயன்படுத்தலாம்.

37. கம்ப்யூட்டர், டி.வி. போன்ற கண்ணுக்கு சோர்வு தரும் காட்சி சாதனங்கள் உள்ள அறையில் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் பசுமை நிறத்தைப் பூசலாம்.

38. குழந்தைகளின் அதீத அடம் மற்றும் கோபத்தைக் குறைக்க 'சாந்த குண'த்தைத் தூண்டும் பிங்க் நிறத்தை அவர்களுடைய அறைகளில் அடிக்கலாம்.

39. குழந்தைகளுக்கென்றே தனி பெயின்ட் ரகங்கள் உள்ளன. ஆம்... சுவரில் கிறுக்கி விளையாடும் குழந்தைகளுக்கான அறைக்கு 'சாக் போர்டு பெயின்ட்' என்ற பெயின்டை அடிக்கலாம். அவர்கள் கிறுக்குவதை அழிப்பது எளிது.

40. இரவில் ஒளிரும் நட்சத்திரங்கள், மின்னும் ரயில், தேவதை பொம்மை ஆகியவற்றை படுக்கை அறையில் வரைவதற்கு என்றே 'கிட்ஸ் எமல்ஷன்' என்ற பெயின்ட் வகையும் உள்ளது.

வீடு சிறப்பிதழ் !

41. அதிக அடர்த்தியும் எதிரொளிப்புத் திறனும் கொண்ட சிவப்பு நிறத்தை வீட்டுக்குள் அடிப்பதைத் தவிர்க்கவும்.

42. மொத்தமாக கலர் காம்பினேஷன்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. வீடுகளுக்கான கலர் காம்பினேஷன்கள் அலுவலகங்களுக்கும், அலுவலகங்களுக்கான கலர் காம்பினேஷன்கள் வீடுகளுக்கும் பொருந்தாது.

43. அதிகம் அழுக்குபடியும் இடங்களை எளிதாகச் சுத்தம் செய்ய 'சிந்தடிக் எனாமல்' வகை பெயின்ட்டுகளை அடிக்கவும். இவற்றில் பல காலமாக உள்ள 'ஆயில் பேஸ்டு' வகையைவிட, தற்போது வந்துள்ள 'வாட்டர் பேஸ்டு' வகை சிறந்தது.

44. உட்புறச் சுவர்களுக்கான சிறந்த பெயின்ட் ரகம் 'எமல்ஷன்'தான். டிஸ்டெம்பெர், சிமென்ட் பெயின்ட்... இவற்றைவிட எமல்ஷனே சிறந்த ஃபினிஷிங்கைக் கொடுக்கும்.

45. வெளிப்புறச் சுவர்களுக்கு 'வெதர் ஃபுரூஃப்' பெயின்ட்டுகளைப் பயன்படுத்துவது சிறந்தது. அதிகம் தூசு படியும் இடங்களிலும், அதிக ஈரப்பதம் உள்ள இடங்களிலும் இவற்றை மட்டுமே பயன்படுத்தவும்.

46. புதிதாகக் கட்டப்பட்ட வெளிப்புறச் சுவருக்கு 'பிரைமர்' ஒரு கோட் கொடுத்த பின்பு, 'எமல்ஷன்' அடிப்பது சிறந்தது. உள்புறச் சுவர்களில் நல்ல ஃபினிஷிங்குக்கு... முதலில் 'பட்டி' அடித்து, விட்டு பின்பு பிரைமர் அடித்துவிட்டு, கடைசியில் பெயின்ட் அடிக்கலாம்.

47. பெங்களூரு பகுதிகளில் பட்டி கொடுக்கும் வழக்கமே இல்லை. அங்கே சுவரைக் கட்டி முடித்த உடனேயே கெட்டிச் சுண்ணாம்பை அடித்து விடுகிறார்கள். இதுவும் நல்ல ஃபினிஷிங்கைத் தருகிறது.

படுக்கை அறை நிம்மதியின் உறைவிடமாக இருக்க!

நமக்கே நமக்கான நம் வீட்டிலும்... நமக்கே நமக்கான இடம்... பெட்ரூம்தான்! நம் தனிமையின், சுதந்திரத்தின், நிம்மதியின் தூணாக இருக்கும் அந்த அறையை மெருகேற்ற...

வீடு சிறப்பிதழ் !

48. நிம்மதியான தூக்கமும் காலை எழுந்தவுடன் மிகுந்த புத்துணர்வும் கிடைப்பதற்குச் சுத்தமான படுக்கை அவசியம் என்பது மருத்துவர்களின் பரிந்துரை.

49. கட்டிலை ஜன்னலுக்கு அருகில் போடக்கூடாது. அப்படிப் போட்டால்... பனிக்காலத்திலும் குளிர்காலத்திலும் குளிர்காற்று உடல்நிலையைப் பாதிக்கும்.

50. படுக்கை அறையில் அதிகமான ஃபர்னிச்சர்களை போட்டு இடத்தை அடைக்க வேண்டாம். கட்டில் அருகில் ஒரு டேபிள் மட்டும் இருப்பது சுகம். அதன் மேல் ஒரு கடிகாரம், நைட் லேம்ப், அழகான உங்கள் குடும்பப்படம் இருந்தால் அது இன்னும் அழகு.

வீடு சிறப்பிதழ் !

51. படுக்கை அறையானது... சமையல் அறையின் அருகிலும், வாசல் பார்த்தும் இருக்க வேண்டாம். புகையும் சத்தமும் உறக்கத்தைப் பாதிக்கும்.

52. பயன்படுத்தும் மெத்தையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது திருப்பிப் போட வேண்டும். இது பெட் பள்ளமாவதைத் தடுக்கும்.

மணக்கும் சமையல் அறை இனிக்க..!

பெண்களின் ஆயுள் பெரும்பகுதி கழிவது இங்குதான்! அதற்கான அக்கறையை, மரியாதையை அதன் வடிவமைப்பில் கொடுப்பது அவசியம்தானே... இதைப்போல...

வீடு சிறப்பிதழ் !

53. சமையலறை கட்டும்போது புகை வெளிச்செல்லும் எக்ஸாஸ்ட் ஃபேன் அமைவதற்கான இடத்தில் இரும்பு வளையம் அமைக்க வேண்டும். நல்ல விசாலமான ஜன்னல்கள் அவசியம்.

54. சமையல் மேடையின் இடது ஓரத்தில் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கான சிங்-ஐ வைத்தால் கையாள்வது சுலபம். 'சிங்' ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் இருந்தால்... பராமரிப்பு ஈஸியாக இருக்கும். இதன் தண்ணீர் குழாயை சற்று உயரத்தில் அமைத்தால் பாத்திரம் கழுவது ஈஸியாக இருக்கும்.

குளியலறை... குளுகுளு! புழங்குவதற்கு பிடித்ததாக குளியலறை இருக்க...

55. குளியல் அறையில் மாடங்களை அமைப்பது அவசியம். சோப்பு, ஷாம்பு, உள்ளாடைகள், சவரம் செய்ய உதவும் சாதனங்களை வைக்க கைக்கெட்டும் தொலைவில் மாடங்களை உருவாக்க வேண்டும். இதற்கு மூடிகள் இருந்தால் இன்னும் அழகு.

56. குளியலறையில் நாம் பயன்படுத்தும் தண்ணீர், குளோரின் மற்றும் பிளீச்சிங் பவுடர் நிறைந்ததாக இருக்கும். இத்தகைய தண்ணீர் கடினமான கார வகையைச் சேர்ந்தது. நாம் பயன்படுத்தும் சோப்பு போன்றவை மென்மையான கார வகையை சேர்ந்தவை. இவையிரண்டும் கலக்கும்போது தரையின் வழுக்கும் தன்மை அதிகரிக்கும். அது காலை வாரிவிட்டு, கீழே விழ வைக்கும். அதைத் தவிர்க்க, குளியலறையைப் பயன்படுத்திய பின்பு, கிணற்று நீர் அல்லது நிலத்தடி நீரால் கழுவினால், வழுக்காது.

வீடு சிறப்பிதழ் !

57. குளியலறை, கழிவறையை வாரம் ஒரு முறை 'ஃபினைல்' போட்டுக் கழுவுவது... குட். வேலைப் பளுவால் முடியாதவர்கள் மாதம் இருமுறையாவது சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

படிக்கும் இடம்... புத்திக்கு போதிமரம்!

உங்கள் பிள்ளைகள் பாடம் படிக்க வசதியான ஒரு இடம் வேண்டுமா? உங்களுக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்க அமைதியான ஒரு ஸீட் வேண்டுமா..?

58. உங்கள் படுக்கை அறை அல்லது வசதியான அறை ஒன்றின் மூலையைத் தேர்ந்தெடுங்கள். அங்கே ஒரு நாற்காலியைப் போடுங்கள். இது மரத்தால் செய்யப்பட்ட அந்தக் கால வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம். பிரம்பு அல்லது நாரால் பின்னப்பட்ட இருக்கை மற்றும் சாய்மானம் ஏற்றது.

59. வெளிச்சம் மற்றும் காற்றுக்காக ஏற்றி இறக்கக் கூடிய வெட்டி வேர்த் தட்டி அல்லது மூங்கில் தட்டி இருப்பது நல்லது. இப்போது உங்கள் படிக்கும் இடம் எத்தனை பாந்தமாக இருக்கிறது என்பதை உணர்வீர்கள்.

60. படிப்பதுடன் கூடவே, பிள்ளைகளின் புத்தகங்களை, உங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்துக் கொள்ள நினைப்பீர்கள். இதற்கான அலமாரிகளை உங்கள் ரசனைக்கேற்ப நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உலோகச் சட்டங்கள் மற்றும் கண்ணாடித் தகடுகள் கடைகளில் கிடைக்கின்றன. தேவைக்கேற்ற அளவில் வாங்கிக் கொள்ளுங்கள். நீங்களே இணைத்து அலமாரியை உருவாக்கிவிடலாம்... சுலபமாக!

மனதைக் கொள்ளையடிக்கும் மரச்சாமான்கள்!

மரச்சாமன்கள் நம் வீட்டுக்கு ஒரு பாரம்பரிய லுக் கொடுப்பதுடன், வீட்டின் மரியாதையையும் கூட்டிவிடும்! காசு கொடுத்து வாங்கும் அந்த மரச்சாமன்களை காலத்துக்கும் பயன்படுவதற்கு ஏற்ப பராமரிப்பதும் அவசியம். அதற்கு...

61. மரப்பொருட்கள் எப்படி காட்சி தரவேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம். அடர் நிறம், வெளிர் நிறம் அல்லது துல்லியமாக அதன் ஒவ்வொரு கோடும் தெரிவதற்கு 'ஸ்டெயினர்' பயன்படுத்தலாம்.

வீடு சிறப்பிதழ் !

62. மரச்சாமான்களின் கூடுதல் பளபளப்புக்கு 'மெலமின்' அல்லது 'பாலிஷ்' பயன் படுத்தலாம். பொதுவாக மெலமினைவிட, பாலிஷ் சிறந்தது. 'பாலியூத்திரைன்' எனும் மேம்படுத்தப்பட்ட பாலிஷ், வெளிப்புற மரச்சாமான்கள் மற்றும் உட்புற மரச்சாமான் களுக்கு என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

63. வெளிப்புற மரச்சாமான்களுக்கான 'பாலியூத்திரைன்', மரப்பொருட்களை வெயில், மழை, காற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும். உள்புறத்தில் அடிக்கப்படும் 'பாலியூத்திரைன்' பளபளப்பு மங்காமல் பாதுகாக்கும்.

64. கதவு, ஜன்னல், நிலை மற்றும் மரச்சாமான்களை வாரம் 3 முறையாவது துடைத்தால்... அதன் ஆயுள் அதிகரிக்கும், அழகு ஜொலிக்கும்.

65. கதவு, ஜன்னல், நிலை போன்றவை வெகுகாலம் பயன்பட வேண்டுமென்றால் 'ஆன்டி டெர்மைட் டிரீட்மென்ட்' என்பதை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்தால் பலகாலம் பொலிவு குறையாமல் இருக்கும்.

66. நிலைக்கதவு போன்றவற்றுக்கு தேக்கு மரம் சிறந்தது. ஆனால், காஸ்ட்லியானது. பட்ஜெட் கொஞ்சம் குறைவாக இருக்க வேண்டுமானால்... விலை குறைந்த படாக், வேங்கை மரங்கள் சிறந்தவை.

67. இப்போதெல்லாம் நிலையை தேக்கு, படாக், வேங்கை மரங்களில் ஏதாவது ஒன்றால் அமைத்து விட்டு... 'ப்ளஷ் டோர்' எனும் ரெடிமேட் கதவுகளைப் பொருத்துவதையே பலரும் செய்கின்றனர். இது சிக்கனமானது.

68. மரத்தால் அலமாரிகளை அமைக்கும்போது, அதன் கதவுகளையும் மரத்தில் செய்வது செலவைக் கூட்டும். அதற்கு ரெடிமேட் கதவுகளையே வாங்கிக் கொள்ளலாம். இவை அனைத்து அளவுகளிலும் கிடைக்கும்.

69. 'மரக்கதவுதான் வேண்டும்' என்பவர்கள்... ரப்பர் போன்ற எடையும் விலையும் குறைவான மரங்களிலான கதவுகளைப் பயன்படுத்தலாம். இவையும் அனைத்து அளவுகளிலும் ரெடிமேடாக கிடைக்கின்றன.

70. ஒரு மரத்தின் மருத்துவ குணம் தெரியாமல், அதை நிலை, கதவு மற்றும் ஜன்னலில் பயன்படுத்தக் கூடாது. அயல்நாட்டு மரங்களில் 'படாக்' போன்ற தெரிந்த மரவகைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

71. மாடுலர் கிச்சன்களுக்கு 'பைசன் போர்டு' எனும் மரத்தைப் பயன்படுத்துவது சிறந்தது. அது எளிதில் தீப்பிடிக்காது!

இஷ்டப்பட்டு செய்யுங்கள் இன்ட்டீரியர்!

வீடு சிறப்பிதழ் !

உங்கள் வீட்டுக்குத் தேவைப்படும் உள் அலங்காரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதற்கு நீங்கள் ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. பொறுமை ப்ளஸ் கற்பனை இருந்தாலே போதும். அருமையான அலங்காரம் கிடைத்து விடும்.

72. வீட்டை அலங்கரிக்க செம்பு, பித்தளை, வெள்ளி போன்ற உலோகத்திலான பல கலைப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி நிரப்பினால்தான் உண்டு என்பதில்லை. சிம்ப்பிள் அண்ட் ஸ்வீட்டாக... நீங்கள் ரசித்துச் சேர்க்கும் அழகுப் பொருட்கள்தான் அதிகம் ஈர்க்கும்.

73. டெரகோட்டா எனப்படும் விதவிதமான களிமண் பொம்மைகளை சிக்கன விலையில் வாங்கலாம். களிமண் என்று தெரியாத அளவுக்கு பலவித வண்ணங்களில் அழகிய வேலைப்பாடு நிறைந்த பொம்மைகள் நம் அறைகளுக்கு அழகூட்டும்.

74. சிலர் வெவ்வேறு அளவுகளிலான விநாயகர் உருவங்களை வாங்கிச் சேர்ப்பார்கள். வேறு சிலர் மணிகளைச் சேகரிப்பார்கள். பழங்குடியினர் பயன்படுத்தும் துணி வகைகளில் அழகிய வேலைப்பாடுகள் இடம் பெற்றிருக்கும். அவற்றை வாங்கி வந்து அலங்கரிப்புப் பொருளாக பயன்படுத்துவதும் பொருத்தமாக இருக்கும்.

75. உங்கள் சமையல் கூடத்திலாகட்டும், குழந்தைகள் அறையிலாகட்டும்... வெள்ளை ரைட்டிங் போர்டு ஒன்றைப் பொருத்தி வையுங்கள். அவசரமாக வரும் தொலைபேசி எண்களைக் குறித்துக் கொள்ள, முக்கிய விஷயங்களைப் பதிவு செய்ய, கேஸ் தீரும் தேதி, மின்சார கட்டணம் செலுத்தும் தேதி போன்ற முக்கிய தேதிகளைக் குறித்துக் கொள்ள... என பல வழிகளில் இது பயன்படும்.

76. நீங்கள் பெரும் பணத்தைச் செலவு செய்து வீட்டுக்குத் தரை போட்டிருப்பீர்கள். மார்பிள், டைல்ஸ் என்று அசத்தி வைத்திருப்பீர்கள். கொஞ்சம் கவனம் தேவை. அலட்சியமாக நடந்து சென்றால் வழுக்கி விழ நேரும். இதற்கு, தென்னை நார் கயிறுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ரக், கார்ப்பெட் வகைகளை விரித்து வைப்பது சரியான தீர்வாக அமையும்.

வீடு சிறப்பிதழ் !

77. படித்து முடித்த பத்திரிகைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றைக் கவனமாக அடுக்கி வைக்க பிரம்புக் கூடை, மூங்கில் கூடை என தயார் செய்யுங்கள். வீட்டுக்கே ஒரு ஒழுங்கு, நேர்த்தி வந்துவிடும்.

மொட்டை மாடி... மொட்டை மாடி... அழகான மொட்டை மாடி!

பல லட்சங்களைக் கொட்டி வீட்டைக் கட்டுவோம். ஆனால், மொட்டை மாடியை மட்டும் பெரும்பாலானவர்கள் அலட்சியமாக விட்டுவிடுவோம். வடகம் காயப் போடுவதற்கும் துணி உலர்த்துவதற்குமான இடமாக மட்டும் மாறிப்போய், கவனிப்பாரற்ற பிள்ளையாகி விடும் அது! ஆனால், மொட்டை மாடியையும் அழகாக, சுத்தமாகப் பராமரித்தால்... அது ஒரு சின்ன சொர்க்கம்தான் தெரியுமா?

78. ஃப்ளாட்டில் குடியிருக்கும் அனைவருக்கும் மொட்டை மாடி பொதுவானது எனும்போது, அனைவரும் அதை சேர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற புரிதலுடன் இருப்பது அவசியம். 'இந்த மாதம் நீங்கள் பராமரியுங்கள், அடுத்த மாதம் நாங்கள்' என முறை வைத்துக் கொள்ளலாம்.

79. தனி வீட்டுக்காரர்கள் வீட்டில் வேஸ்ட்டாகும் பொருட்களை 'டம்ப்' செய்யும் இடமாகப் மொட்டை மாடியைப் பயன்படுத்தினால்... கரையான், பூச்சிகள் அதன் வேலையைக் காண்பிக்கும். நாளடைவில் மொட்டை மாடி பாழடைந்துவிடும்... ஜாக்கிரதை.

80. மொட்டை மாடியில் 'டெரஸ் கார்டன்' அமைக்கலாம். சின்ன சின்னத் தொட்டிகளில் பூச்செடிகளையும் காய்கறி செடிகளையும் வளர்த்தால்... அது பொழுதுபோக்காகவும் இருக்கும். மாலை நேரத்தில் அங்கு வரும்போது உங்கள் மனத்தை ரிலாக்ஸாக்கும் இடமாகவும் அமையும்.

81. வீட்டில் குழந்தைகள் இருந்தால் மொட்டை மாடியை அழகான விளையாட்டு மைதானமாக்கலாம். சுவர்களிலும், தரையிலும் அழகான வண்ணம் பூசி குழந்தைகள் விரும்பும் இடமாக்கலாம்.

82. பெரியவர்களின் துணைகொண்டு அங்கு டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். ஆனால், அதன் சுற்றுச்சுவர் கொஞ்சம் உயரமாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் இருக்கட்டும்!

வீடு சிறப்பிதழ் !

83. உங்கள் குழந்தைகள் மாலை நேரத்தில் படிக்கும் இடமாக அதைப் பயன்படுத்தினால், ரம்மியமாக இருக்க பூந்தொட்டிகளை ஆங்காங்கே வளருங்கள்; எப்போதும் அழகு தரும்.

84. காலநிலை மாற்றத்தால் மொட்டை மாடிதான் அதிகம் பாதிக்கப்படும். வெயில் காலத்தில் சிமென்ட் பூச்சு அதிகளவு காய்ந்து விரிசல் விடும். அதைத் தடுக்க அவ்வப்போது தண்ணீர் தெளித்துப் பராமரிக்கலாம்.

85. 'மொட்டை மாடிக்குத் தெளிக்க எதற்கு நல்ல தண்ணீர்' என்று துணி துவைத்த சோப்புத் தண்ணீரை பயன்படுத்தினால் அது விரிசலை அதிகப்படுத்தும்.

86. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று சுவர் ஓரங்களில் பாசி படரும். அதைக் கவனிக்காமல் நாம் கால் வைக்கும்போது வழுக்கி விழ ஏதுவாகும். எனவே, மழைக்காலம் முடிந்ததும் நீர் தேங்காமல் அதனைச் சுத்தப்படுத்துவது அவசியம்.

பாதுகாப்பு பிரதானம்!

வீட்டைப் பார்த்துப் பார்த்து செதுக்கிவிட்டு, கடைசியில் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுவிடக் கூடாது. கீழ் வரும் ஆலோசனைகள் நினைவில் இருக்கட்டும்!

87. வீட்டின் முன்பக்கக் கதவில் கட்டாயம் 'டோர் லென்ஸ்' பதிக்க வேண்டும். உள்ளேயிருந்து கொண்டே வெளியில் இருப்பவர்களைக் கண்டறிய இது மிகவும் அவசியம்.

வீடு சிறப்பிதழ் !

88. அதேபோல, கதவு சட்டென்று திறந்துவிடமுடியாத அளவுக்கு சிறியதாக அமைக்கப்படும் 'டோர் லாக்' சங்கிலி இணைப்பும் அவசியம்!

89. லாக்கரை எங்கே வைப்பது என்பதை வீடு கட்டும் முன்பே முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் வெளியே தெரியாத வகையில் ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் அமைக்க முடியும்.

வீடு சிறப்பிதழ் !

90. தரைக்குள் அமைக்கப்படும் லாக்கர்கள் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும்... உள்ளே உள்ள பொருட்கள் சுற்றுப்புறத்தின் வெப்பத்தாலும் ஈரப்பதத்தாலும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே, சுவரில் அமைப்பதே சிறப்பு.

91. லாக்கர்களை வெளியே தெரியாமல் மறைக்க என்றே தனிவகை படங்களும் அலமாரிகளும் உள்ளன.

92. பூட்டு, நம்பர் லாக், கைரேகை பதிவு லாக்... இவைதான் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் 'வாய்ஸ் மேட்ச்', 'ஐ வியூ மேட்ச்' போன்ற அதிக துல்லிய தன்மை கொண்ட பாதுகாப்பு சாதனங்களும் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

93. லாக்கரை நாம்தான் பராமரிக்க வேண்டும். பிறரிடம் அந்த வேலையைக் கொடுக்கக் கூடாது.

பழைய வீட்டை வாங்குகிறீர்களா..?!

வீடு சிறப்பிதழ் !

பல்வேறு காரணங்களால் பழைய வீட்டை வாங்குபவர்கள், சில விஷயங்களில் கவனமாக இருந்துவிட்டால் பின்பு அவஸ்தைப்பட வேண்டிய தேவையே இருக்காது...

94. வீட்டை வாங்கும்போது அந்த வீட்டைக் கட்டி எத்தனை வருடங்கள் ஆகியுள்ளன. ஒரிஜினலாக அது யாருக்குச் சொந்தம் என்பதைப் பார்க்கத் தவறாதீர்கள்.

95. வாங்கும் வீட்டின் தாய் பத்திரத்தையும் கேட்டு வாங்குங்கள். அதற்குப் பிறகு அந்த வீடு யார் கைக்கு மாறியது என்பதை அறிந்துகொண்டு, வீட்டின் சக்ஸஷன் பத்திரத்தையும், அட்லீஸ்ட் அந்த வீட்டின் 30 வருஷத்தின் 'சக்ஸஷன் பத்திரத்'தின் நகலையும் சப்-ரெஜிஸ்தரார் அலுவலகத்தில் வாங்கிவிட்டால் பிரச்னைகள் வர வாய்ப்பிருக்காது. இது, அந்த வீட்டை அடமானம் வத்திருந்தாலோ, அந்த வீட்டின் மேல் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ நாம் ஏமாறாமல் இருக்க உதவும்.

96. வீட்டுக்கான ஒரிஜினல் டாக்குமென்ட் இல்லாவிட்டால் அந்த வீட்டை வாங்காமல் இருப்பதுதான் நல்லது. உண்மையில் அந்த டாக்குமென்ட் தொலைந்து போயிருந்தால், பேப்பரில் முதலில் விளம்பரம் கொடுக்க வேண்டும். பிறகு, அந்த விளம்பரத்தை சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் சமர்பித்து, டூப்ளிகேட் டாக்குமென்டுக்கு அப்ளை பண்ணலாம். அந்த டூப்ளிகேட் டாக்குமென்டில் வீட்டை விற்பதற்கான உரிமை உள்ளது என்பதை எழுதி பதிவு செய்துகொள்வது நல்லது.

வீடு சிறப்பிதழ் !

97. முக்கியமாக, அந்த வீட்டின் மீது எந்த வில்லங்கமும் இல்லை, யாருக்கும் அடமானம் வைக்கவில்லை என்பதை உறுதி செய்ய சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழையும் வாங்க வேண்டும்.

98. வீட்டுப் பத்திரத்தின் மூலம் மற்றும் நகல் இரண்டையும் கட்டாயம் வாங்க வேண்டும். பதிவு செய்யும்போது 1+1 என்று போட்டிருப்பார்கள். அசல், நகல் இரண்டையும் வாங்கினால்தான் நகலை வைத்து யாரும் பிரச்னை செய்ய முடியாது.

99. நீங்கள் வாங்கும் சொத்து பாகப் பிரிவினையில் வந்திருந்தால்... அதன் மூலப் பத்திரத்தின் நகலை வாங்குவது உத்தமம். மூலப்பத்திரத்தின் நகலை சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் 100 ரூபாய் பணம் கட்டி, டாக்குமென்ட் நம்பரைக் கொடுத்தால் தருவார்கள்.

வீடு சிறப்பிதழ் !

100. வீட்டின் முன்னாள் உரிமையாளர் வீட்டின் சொத்துவரி, தண்ணீர் வரி, கரன்ட் பில் எல்லாவற்றையும் நீங்கள் வீடு வாங்கும் அந்த தேதி வரை தவறாமல் கட்டியுள்ளாரா என்பதை உறுதி செய்து, அதன் ரசீதுகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், இரண்டு வருடங்கள் வீட்டு வரி கட்டவில்லை என்று நோட்டீஸ் வந்து பணத்தை நீங்கள் கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

வீடெனப்படுவது
யாதெனில் பிரியம்
சமைக்கிற கூடு!

- த.அகிலன்

தொகுப்பு நாச்சியாள், இரா.மன்னர்மன்னன்
படங்கள் ஆ.முத்துக்குமார், து.மாரியப்பன்
தொகுப்புக்கு உதவியவர்கள்

எம்.கே. சுந்தரம், முன்னாள் தலைவர், பில்டர்ஸ் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா, சென்னை

பி.கோபிநாத், பொட்டன்ஷியல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், சென்னை.

வீடு சிறப்பிதழ் !
 
வீடு சிறப்பிதழ் !
வீடு சிறப்பிதழ் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism