கடந்த ஆண்டு வரை ஆண், பெண் இருவருக்கும் ஒரே கட்டணம் இருந்தது. ஆனால், இந்தியாவில் பெண் ஆட்சியர்கள் குறைவாக உள்ள நிலையை மாற்ற அவர்களுக்கான அனைத்துக் கட்டணங்களையும் ரத்து செய்துள்ளது மத்திய அரசு. தவிர, பிரதான தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத்தேர்வுக்குப் போகும் பெண்களுக்கான பயணப்படியையும் அரசே வழங்குகிறது. இந்த ஆண்டில் அமலுக்கு வந்துள்ள இந்தச் சலுகைகள், அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் பொருந்தும்.
சிவில் சர்வீஸ் தேர்வானது, பிரிலிமினரி, மெயின், இன்டர்வியூ என்று மூன்று நிலைகளில் நடத்தப்படும். ஒரு மதிப்பெண் பொது அறிவுக் கேள்விகள் - 150, நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பப்பாடத்தில் (கொடுக்கப்படும் 23 பாடங்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் விருப்பப்பாடமாக தேர்ந்தெடுக்கலாம்) இருந்து இரண்டரை மதிப்பெண் கேள்விகள் - 120... இதுதான் பிரிலிமினரி வினாத்தாளின் உள்ளடக்கம். 450 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வு, அப்ஜெக்டிவ் வகையில் இருக்கும். தவறான பதிலுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், ஜியோகிராபி, இந்திய வரலாறு... இந்த மூன்றும் சிவில் சர்வீஸில் 'பாப்புலர் ஆப்ஷன்ஸ்' என்று செல்லமாக அழைக்கப்படும் பாடங்கள். இவற்றை எடுப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகம். இதனால் வடஇந்தியாவிலும், கேரளா போன்ற சில தென்னிந்திய மாநிலங்களிலும் இளங்கலையில் இவற்றையே குறிவைத்துப் படிக்கிறார்கள்.
அடுத்ததாக, பிரதான தேர்வு. பிரிலிமினரி தேர்வில் வெற்றியடைபவர்கள், ஒன்பது தாள்களை உள்ளடக்கிய பிரதான தேர்வை எழுத வேண்டும். பிரிலிமினரி போல 'அப்ஜக்டிவ்'வாக அல்லாமல், விவரித்து எழுதும் வகையில் இந்தத் தேர்வு அமையும்.
முதல் தாளில் ஒரு இந்திய மொழியையும் (தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்), இரண்டாம் தாளில் ஆங்கிலத்தையும் எழுத வேண்டியிருக்கும். மூன்றாம் தாளாக ஒரு கட்டுரைத் தேர்வு நடத்தப்படும். இதனை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். நான்கு மற்றும் ஐந்தாம் தாள்கள் பொது அறிவு மற்றும் உங்களின் சமூகப் பார்வை தொடர்பானவை. இதைத் தவிர்த்த பிற நான்கு தாள்களிலும் உங்கள் விருப்பப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் (நீங்கள் பிரிலிமினரி தேர்வில் தேர்ந்தெடுத்த அதே விருப்பப் பாடத்தை இதிலும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை). மூன்றாம் தாளுக்கு 200 மதிப்பெண்கள். மற்ற அனைத்துக்கும் தலா 300 மதிப்பெண்கள்.
|