போலீஸ் ஸ்டேஷன் இருக்கும் ஏரியாவை கடந்து போகக்கூட யோசித்த பெண்களின் மனநிலை எல்லாம், மிகப்பெரும்பாலும் இன்று மாறிவிட்டது. சொத்து விவகாரங்கள், குடும்ப வழக்குகள், புகார்கள் என்று கிராமங்களில்கூட காவல்நிலையத்துக்கு தைரியமாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்த விழிப்பு உணர்வை இன்னும் அகலப்படுத்தும் விதமாகவும், குடும்ப அமைப்பில் அவர்கள் தொடர்ந்து அடிமைகளாக நடத்தப்படும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்தான் 'குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்' கொண்டு வரப்பட்டிருக்கிறது.
'மனைவி ஒரு புகார் கொடுத்தால் போதும்... கணவருக்கு உடனடி தண்டனை' என்ற இந்த சட்டத்தால் குடும்ப அமைப்பு என்ற போர்வைக்குள் அடி, உதை என்று அல்லல்பட்டுக் கொண்டிருந்த கோடான கோடி சகோதரிகளுக்கு தைரியம் கிடைத்திருக்கிறது.
அதேசமயம், இதன் மறுபக்கமாக... 'இந்தச் சட்டமே குடும்பங்களை சிதைத்துவிடுமோ!' எனும் அச்சப்படும் அளவுக்கு தாறுமாறாக புகார்கள் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன.
"ஒங்க அம்மாகூட சேர்ந்துகிட்டு என்னைத் திட்டினீங்கனா... உள்ள வச்சுடுவேன்..." என்று தொட்டதற்கெல்லாம் கணவரை கூண்டில் ஏற்றிவிடுவதாக பயமுறுத்த பெண்களில் சிலர், அதன்படியே கணவரை 'உள்ளே' வைக்கவும் செய்தார்கள். அந்த 'சிலர்' இன்று 'பலர்' ஆகிவிட்டதுதான் வேதனை.
"ஆம்! இன்று பெண்கள் பதிவு செய்யும் புகார்களில் பாதிக்குப் பாதி குடும்ப வன்முறை வழக்குகள். அவற்றை விசாரித்தால், அற்ப காரணங்கள் என்பது தெரிகிறது. கேட்டால், 'ஒரு நாலு நாள் அவரை தூக்கி உள்ள வைங்க சார். அப்பதான் ஒரு பயம் இருக்கும்' என்கிற பெண்களை என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று வருத்தப்படும் தமிழக சமூகநல வாரியத்தின் தலைவி கவிஞர் சல்மா, அதற்காக கண்டறியப்பட்டுள்ள உருப்படியான தீர்வு, நன்றாகவே கைகொடுக்கிறது என்கிறார்.
"குடும்ப வன்முறைத் தடுப்பு சட்டத்தின்கீழ் புகார் கொடுக்க வரும் பெண்ணுக்கும், கணவருக்கும் கவுன்சிலிங் மூலம் தீர்வு ஏற்படுத்துவதுதான் அந்தத் தீர்வு. இதற்காக தமிழ்நாடு சமூகநல வாரியத்தின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் 66 குடும்பநல ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலேயே ஒரு மையத்தை ஆரம்பித்திருப்பது தனிச்சிறப்பு!
|