Published:Updated:

ஆட்கள் தேவை !

ஆட்கள் தேவை !

ஆட்கள் தேவை !

ஆட்கள் தேவை !

Published:Updated:

'கெம்பா' கார்த்திகேயன்
ஆட்கள் தேவை !
ஆட்கள் தேவை !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆட்கள் தேவை !

பகுதி 2

'ஐந்து வருடங்களுக்குப் பிறகு, நீங்கள் என்னவாக ஆக வேண்டும்... என்ன வேலையில் இருக்கவேண்டும்? என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும்? என்று நீங்கள் எண்ணுபவற்றை எழுதிக் கொள்ளுங்கள்' என்று கடந்த இதழில் ஒரு ஹோம்வொர்க் கொடுத்திருந்தேன்.

"இதை எழுதினதுல ஒண்ணு மட்டும் தெரிஞ்சுது'' என்று தொலைபேசியில் ஆரம்பித்தார் தொலைதூர வாசகி ஒருவர்.

''என்ன தெரிஞ்சுது மேடம்?'' என்றேன் ஆவலுடன்.

ஆட்கள் தேவை !

''ஒண்ணும் தெளிவா தெரியலைனு தெரிஞ்சுது!'' என்று ஜோக்கடித்தவர், பின்னர் சீரியஸாகத் தொடர்ந்தார்.

''பின்னே என்ன சார்? வேலையில இருக்கறவங்களுக்காச்சும் இந்தத் துறையில இப்படியெல்லாம் முன்னேறலாம்னு தெரியும். ஆனா, எங்களப்போல வேலை தேடற வர்க்கத்துக்கு, 'படிச்ச படிப்புக்கு ஒரு நல்ல வேலை, அப்புறம் நல்ல வாழ்க்கை'ங்கறதைத் தாண்டி எதையும் பாயின்ட்டடா கற்பனைகூட பண்ண முடியல'' என்று வருத்தத்தைக் கொட்டினார்.

அவருடைய பேச்சில் எதார்த்தம் இருந்தாலும், ஓர் உண்மையை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக, 'என்னவாக வேண்டும்' என்பதைப் பற்றிய நம் ஆசை அல்லது கற்பனை, பருவத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும். இது இயல்பு!

சில துறைகளில் மிக இளவயதிலேயே சாதனை படைத்தோர்களுக்கு வேண்டுமானால் வருங்காலம் பற்றிய கற்பனை தெளிவாக இருக்கலாம். ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் டெண்டுல்கர் போன்ற மிகச் சிலரை உதாரணமாகச் சொல்லலாம். மிகப்பெரிய தொழிலதிபர் அல்லது அரசியல் பிரமுகர் வாரிசாக இருந்தால், '5 ஆண்டு வருங்கால கற்பனை' என்பது சுலபமாக இருக்கும். ஆனால், மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு இது மிகவும் குழப்பமான அல்லது கடினமான சிந்தனைதான்.

அதேசமயம், 'எதை நோக்கி நம் சிந்தனையையும் சக்தியையும் நாம் செலுத்துகிறோமோ, அதுதான் நமக்கு வசப்படும்' என்ற உளவியல் உண்மையையும் மறந்துவிடக்கூடாது!

என் பயிலரங்கங்களில், ''கடவுள் திடீரென்று நேரில் தோன்றி, '10 வினாடிகள் அவகாசம் தருகிறேன். என்ன வேண்டும் என்று கேளுங்கள். தருகிறேன். ஆனால், பதினோராவது நொடியில் நான் மறைந்து போவேன்!' என்றால், நம்மில் எத்தனை பேருக்கு நமக்கு தேவையானதை தெளிவாக கேட்டு வாங்க முடியும்?'' என்றொரு கேள்வியை முன் வைப்பது வழக்கம். இங்கேயும் அதே கேள்விதான்!

....சிந்தியுங்கள்!

பத்து வருடங்களாக தான் வளர்த்து வரும் டைரக்ஷன் கனவையும், கதையையும், அழுக்கு ஜீன்ஸ்களையும் வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடும் இளைஞனுக்கு, கடவுளிடம் வரம் கேட்க 10 வினாடிகள்கூட அதிகம். ஆனால், நாலைந்து வேலைகளுக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டு, தெளிவில்லாத இலக்குடன் காத்திருக்கும் ஓர் இளைஞனுக்கு...?

சென்ற வாரத்தில் எதிரெதிர் துருவங்களாக இரண்டு பேரைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் M.Sc., M.Phil., M.Ed., B.L. என படித்துவிட்டு, 'அரசாங்க வேலை கிடைத்தால் தேவல' என்றும், எந்தெந்த வேலைக்கு எவ்வளவு 'கொடுக்க' வேண்டியிருக்கிறது என பட்டியல் போட்டும் சொன்ன அந்த 36 வயது நண்பர், கடைசியாக தேசத்தையே குற்றம் சொன்னார்!

இன்னொருவர் குடும்ப சூழ்நிலையால் மாலை நேரக் கல்லூரியில் படித்துக்கொண்டே பகல் நேரத்தில் ஒரு ஓட்டலில் பகுதி நேர வேலை பார்த்து வரும் இளைஞர். ''கஷ்டமாயிருக்கா?'' என்றால் ''கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அனுபவம் சார் ஒண்ணொண்ணும். எப்படி தொழில் செய்யணும், செய்யக்கூடாதுங்கறதை எல்லாம் ஃபீஸே இல்லாம இங்க கத்துக்கிட்டு இருக்கேன். இன்னும் அஞ்சு வருசத்துல ஒரு 'கான்சப்ட் ஹோட்டல்' நடத்துவேன் சார்!'' என்றார் அந்த 22 வயது இளைஞர்.

ஆக... என்ன வேலை வேண்டும், என்ன தொழில் வேண்டும், என்ன வாழ்க்கை வேண்டும் என்பவற்றை பிறர் அபிப்பிராயங்களைக் கொண்டு தீர்மானிக்காதீர்கள். திசைகாட்டிகள் இருப்பவை உங்களுக்குள்தான். அதனால் உள்ளே தேடுங்கள்!

வெளியில் கிடைக்கும் படிப்புக்கும் வேலைக்கும் உங்களை பொருத்திக் கொள்ள நினைப்பதைவிட, உங்களுக்கு ஏற்ற படிப்பையும் வேலையையும் தேர்ந்தெடுங்கள். நம்மை சிந்திக்கவிடாத, பேச விடாத, சுயமாக எதையும் செய்யவிடாத இந்த கல்வி அமைப்பு தரும் சான்றிதழ்கள் மட்டும் உங்கள் அடையாளங்கள் அல்ல. உங்கள் தனித் திறமைகள், ஆற்றல்கள், விருப்பங்கள், அனுபவங்கள், சிறப்புத் தகுதிகள் என்னென்ன என்று பட்டியல் போடுங்கள். இவைதான் ஆதார சொத்து!

உங்களிடமுள்ள குறைகள் (அல்லது அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டுள்ளவை)கூட தகுதிகள் ஆகலாம்.

'அவன் ஒரு காரியத்தை நடத்தணும்னு நினைச்சுட்டா எல்லாரையும் எப்படியாவது கன்வின்ஸ் பண்ணிடுவான். ஆனா, அந்த சமத்து படிப்புல இல்ல' என்று தன் பையன் பற்றி குறைப்பட்டுக் கொண்டார் அந்தத் தந்தை.

'நல்ல சேல்ஸ் மேனேஜர் ஆகலாமே!' என்றேன்.

'கணக்குல பூஜ்யம் சார். ஆனா, எந்த கிளாசும் போகாம அற்புதமா படம் வரையறான் என் பையன். 'சிவில் என்ஜினியரிங் படிடா'னா முடியாதுங்கறான்' என்று பத்து ஆண்டுகள் முன்பு சொன்னவரின் புதல்வன்... இன்று ஒரு முன்னணி ஆங்கில வார இதழின் 'லே அவுட்' டிசைனர்!

'அவகிட்ட பேசி ஜெயிக்க முடியாது. பாயின்ட் பாயின்டா எடுத்துச் சொல்லி நம்ம மனசையே மாத்திடுவா' என்று தன் மகளின் வாயடிக்கும் தனத்தை சொன்ன அந்த அம்மாவிடம், 'ஹெ.ஆர்-ல சேர்த்து விடுங்களேன்!' என்றேன். இன்று 500 பேர் கொண்ட நிறுவனத்தில் அந்தப் பெண்தான் Employee Relations Manager.

பிக்னிக், பார்ட்டி என்றால் முன்னிருந்து நடத்துவதில் ஆர்வமுள்ள என் நண்பரின் மகள், தன் இரண்டு வருட ஐ.டி. வேலை அனுபவத்துக்குப் பின், இப்போது ஒரு சிறு நிறுவனத்தில் பங்குதாராக சேர்ந்துள்ளார். என்ன வேலை தெரியுமா? A to Z கல்யாண கான்ட்ராக்ட். பெரிய வட்டத்து நிகழ்ச்சிகளை மிகப்பெரிய அளவில் நடத்தித் தரும் Event Management. ஆம்பத்தில், 'கல்யாண கான்ட்ராக்டா...' என்று இழுத்த என் நண்பர், இப்போது லட்சங்களில் தன் பெண் சம்பாதித்து வருவது குறித்து பூரித்துப் போயுள்ளார்.

என்னிடம் வரும் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ எந்தத் துறையில் சேர்ந்தால் பிரகாசிப்பார் என்று தெரிந்துகொள்ள உளவியல் ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு வருவார்கள். அதில் சிலர், 'எப்படியாவது அவன இன்ஜினீயரிங் சேர ஒப்புக்க வையுங்களேன்' என்றே உரையாடலை ஆரம்பிப்பார்கள்.

'என்ன வேலை எனக்குக் கிடைக்கும்?' என்ற கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக... 'என்ன வேலை எனக்கு வேண்டும்?' என்ற கேள்வி முக்கியம். வெறும் படிப்பை மட்டும் காரணமாக வைத்து வேலை தேடுவதால்தான் வேலையில்லா திண்டாட்டமும் மகிழ்ச்சியற்ற பணிச் சூழல்களும்! படிப்பை சாதாரணமாகக் கொண்டு வேலை தேடுவது எப்படி இருக்கும் என்பதற்கு இந்த ஜென் கதையைக் கொண்டு யோசிக்கலாம்.

கண் பார்வை இழந்த பாதசாரி ஒருவர், வயல் வழியாக இரவில் அடுத்த கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். இருட்டில் எதிராளி தன் மீது முட்டி விடக்கூடாது என்பதற்காக ஒரு விளக்கை முன்னால் நீட்டியவாறு நடந்தார். தெரிந்த வழி என்பதால் தைரியமாக போய்க் கொண்டிருந்தவர் மீது ஒருவர் நேராக மோத,

'பார்த்து வரக் கூடாது? எனக்குத்தான் கண் பார்வை கிடையாது. உனக்காகத்தானே விளக்கு பிடித்து நடந்து வருகிறேன். அப்படியும் பார்க்காமல் வந்து மோதினால் என்ன அர்த்தம்?' என்று கோபப்பட்டார். எதிர்புறம் வந்த நபர் அமைதியாகச் சொன்னார்... 'உங்கள் விளக்கு அணைந்து விட்டது. பாவம், அது உங்களுக்கு எப்படித் தெரியும்?'

நம் படிப்புச் சான்றிதழ், இந்த விளக்கு போலத்தான். எப்போது உபயோகப்படும், எப்போது உபயோகப்படாது என்பதை எதிராளி சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டி வரும்.

எனவே, படிப்பு ஒரு அடையாளம். அது வேலையின் ஆதாரம் அல்ல. உங்களுக்கான வேலையை தெரிந்தெடுங்கள். தேடிவந்து அந்த வேலை உங்களைத் தேர்வு செய்யும்.

ஆட்கள் தேவை !
-தேடுவோம்
ஆட்கள் தேவை !
ஆட்கள் தேவை !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism