'இந்தக் காலத்தில்... இருபது வயதிலேயே பலரையும் சோம்பேறித்தனம் விழுங்கி கொண்டிருக்கும் நிலையில், நூறு வயதிலும் இப்படியரு பங்ச்சுவாலிட்டியா!' என்று வியந்த நாம், அவரைப் பின் தொடர்ந்தோம். சொன்ன சொல் மாறாதவராக தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்த பிறகே நம்மிடம் வந்து நின்றார். அந்தக் காலத்து டாட்டூஸ் (பச்சை) குத்தப்பட்ட கைகள், வளர்ந்துத் தொங்கிய காதுகள் என்று நூறு ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் இரும்பு மனுஷி, பொக்கை வாய் திறக்கிறார்...
"சோளக்கஞ்சி, குருதவாலி கஞ்சி, தெனங்கஞ்சி, தொவரங்கஞ்சி, வரகுக்கஞ்சி, சோளக்கூழு, கேப்பக்கூழு, கம்மங்கூழுனு சாப்பிட்டு, வயக்காட்டுல வேர்வை சிந்தி உழைச்சதனாலதான் இப்ப வரைக்கும் அந்தத் தெம்பு எங்கிட்ட இருக்குது. குதிரைவாலி சோத்துக்கு, காணத் (கொள்ளு) தொவையல மறுமாத்தமா (சைட் டிஷ்) பண்ணி சாப்பிட்டா அப்படி ருசிக்கும். ஆத்துல இறங்கி ரெண்டு கிலோ அயிர மீனை, சேலை முந்தானையிலயே புடிச்சு சாறு வெச்சு, கேப்பக் களியைக் கிண்டி சாப்பிட்டு, நீச்ச தண்ணிய (சோறு வடிச்ச தண்ணி) குடிச்சுட்டு வயக்காட்டுக்கு போனா... வெயிலுக்கு சும்மா குளுகுளுனு இருக்கும்.
இப்படி வாழறதாலதான்... காய்ச்சல், தலைவலினு ஆஸ்பத்திரி பக்கம் போகவிடாம வெச்சுருக்கு. தலைவலினா... வெங்காயம், உப்புக்கல்லை அரைச்சு தலைல பூசிட்டு கம்னு படுத்துடுவேன். ரெண்டு நாள்ல சரியாப் போயிடும்'' என்று பாட்டி தெம்பாகச் சொன்னபோது, பாத்தி கட்டி மருந்து, மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தலைமுறையின் தலையெழுத்தை நொந்துக் கொள்ளத் தோன்றியது.
''செத்தப் பிறகு மேல போறப்ப, 'என்ன கொண்டு வந்தே?'னு எம தர்மராசா கேப்பாராம். பணம், நெக்லஸ§, ஒட்டியாணம்னு கொண்டு போக முடியாது. அதனால, விதம்விதமா பச்சைக் குத்திட்டுப் போயி காமிச்சா... சொர்க்கத்துக்கு அனுப்பி வைப்பாராம்'' என்று பச்சைக் குத்துதலுக்கு பயங்கரமான காரணம் சொன்ன பாட்டி, ''இதைக் குத்துறப்ப வலி, ரணமா இருக்கும். 'அதையெல்லாம் தாங்குறவதான், குடும்பப் பிரச்னைகள பொறுமையா தாங்குவா'னு சொல்லுவாக. அதுக்காகவே குத்திப்போம்ல'' என்றவர், தன் மலரும் நினைவுகளில் எம்.ஜி.ஆரைக் குறிப்பிடத் தவறவில்லை.
|