'எப்படிப் படுக்கணும், எப்படி உட்காரணும், எதைஎல்லாம் சாப்பிடணும், எதையெல்லாம் செய்யக்கூடாது' போன்ற கேள்விகள் முளைத்துக் கொண்டே இருக்கும். விளைவு... புத்தகங்களிலும், இன்டர்நெட்டிலும் 'பிரசவம்' பார்க்கிறார்கள் கர்ப்பிணிப் பெண்கள்! அதில் எல்லாம் 'பிரசவம் எப்படி இருக்கும்'?' என்ற அவர்களின் தேடலுக்கு, 'இப்படித்தான் இருக்கும்' என்று அங்கே கொட்டுகிற தகவல்கள், பெரும்பாலும் குழப்பத்தை, பயத்தை மேலும் கிளறுவதாகவே இருக்கின்றன.
இந்த மனப் போராட்டங்களில் இருந்து உங்களை மீட்கும் உண்மை ஒன்றுதான்... 'நமக்கு நல்லபடியா குழந்தை பிறக்கும்' என்ற மன நம்பிக்கைதான் கர்ப்பிணிப் பெண்களுக்கான முதல் மருந்து, முழுமுதற் சத்து! 'கர்ப்பக் காலத்தில் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும், பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், நல்ல இசையை ரசிக்க வேண்டும்' என்றெல்லாம் நம் பெரியவர்கள் சொல்வதற்கு முக்கியமான காரணம், மனதில் ஏற்படும் இதுபோன்ற தேவையில்லாத குழப்பங்களை, அச்சங்களை விரட்டுவதற்காகத்தான்.
அப்படி பயங்கள் நீங்கி, மனம் தெளிவாக இருக்கும் போதுதான் உடம்பில் உள்ள தசைகளும், ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். புத்துணர்ச்சி பொங்கும். நிம்மதியான உறக்கம் வாய்க்கும். ஆரோக்கியம் வளரும். அதைப் பெற, தெளிவான மனதுடன் கர்ப்பக் காலத்தில் செய்ய வேண்டிய எளிய உடற் பயிற்சிகளும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
'உடற்பயிற்சி' என்றதும் 'பெரியவங்க 'அதை செய்யாதே', 'இதை தூக்காதே'னு சொல்றாங்க. நீங்க இப்படி சொல்றீங்களே? கர்ப்பக் காலத்துல ஒடம்பை வளச்சு உடற்பயிற்சி செய்யலாமா?' என்று கேள்விகள் பொங்கும் உங்களுக்கு.
|