Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:

கேபிள் கலாட்டா!
ரிமோட் ரீட்டா
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"கண்ணா... சினிமாப்பாட்டெல்லாம் இங்க நாட் அலவ்ட்!''


கேபிள் கலாட்டா!

"பாவம் இந்த மகா... அவளை இந்தப் பாடுபடுத்தறாளே அந்த ராணி..?! அவ வேஷம் சீக்கிரம் கலைஞ்சுடும் பாரு ரீட்டா..."னு ரொம்ப எமோஷனலா பேசினாங்க நம்ம வாசகி விஜயலட்சுமி.

இப்படி பல தாய்க்குலங்களை எமோஷனலாக்கி இருக்கற அந்த சீரியல் பொண்ணுங்களைப் பிடிச்சேன்.

விஜய் டி.வி 'மகாராணி' சீரியல்ல மகாலட்சுமியா நடிக்கற சுஜிதாவும், ராணியா நடிக்கற அர்ச்சனாவும்தான் அந்த அழகான சண்டைக்கோழிங்க.

கதைப்படி ஒரு பணக்கார வீட்டுக்கு தத்துப்போறா ராணி. அவங்க வீட்டுல வேலைக்காரியா இருக்கா மகா. ஆனா, மகாதான் அந்த தம்பதியோட உண்மையான வாரிசு. இந்த உண்மை ரெண்டு பேருக்கும் தெரியறப்ப, வில்லி ராணியும், ஹீரோயின் மகாவும் மோதறதுதான் இப்போ நகர்ந்திட்டு இருக்கற கதை!

ஸ்ட்ரெயிட்டா 'மகாராணி' சீரியல் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனேன். ஷாட் பிரேக்ல மகாவும் ராணியும் பாசத்தை பொழிஞ்சுட்டு இருக்க, "தமிழ்நாடே உங்க சண்டைய ஆர்வமா பார்த்துட்டு இருக்கு. நீங்க கொஞ்சி குலாவிட்டு இருக்கீங்களே... நியாயமா?'னு ஆரம்பிச்சேன்.

"நிஜத்துல நாங்க ரெண்டு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ்..."னு திக்கி திக்கி தமிழ் பேசினாங்க கேரள சேச்சி அர்ச்சனா!

"எப்படி இருக்கு எங்க தமிழ் சேனல் ஏரியா?"

"ரொம்ப நல்லாயிருக்கு ரீட்டா! 'மகாராணி' சீரியல் ஆக்சுவலா மலையாளத்துல ஃபேமஸா ஓடிட்டு இருக் கற 'மானுஷ புத்திரி' சீரியலோட ரீமேக். ரெண்டு சீரியல்லயுமே 'ராணி' கேரக்டரை நான்தான் பண்றேன். ரெண்டுலயுமே எனக்கு நல்ல வரவேற்பு. அந்த சக்சஸ் தான் அக்ஷய்குமாரோட ஒரு ஹிந்திப் படம், ப்ரியதர்ஷன் இயக்கத்துல ஒரு ஹிந்திப் படம், ஒரு மலையாளப் படம்னு எனக்கு சினிமா சான்ஸ§ம் வாங்கிக் கொடுத் திருக்கு!"னு பெருமையா சொன்ன அர்ச்சனாகிட்ட,

"ஓ.கே... உங்க எதிரி சுஜிதா பத்தி சொல்லுங்க"னு 'பிட்'டைப் போட்டேன்.

கேபிள் கலாட்டா!

"திரும்ப திரும்ப தப்பா சொல்ற பாரு. ராணிக்குதான் மகா எதிரி. அர்ச்சனாவுக்கு சுஜா செல்ல அக்கா மாதிரி"னு ஓவரா பாசம் படரவிட்ட அர்ச்சனாவை ஓரம் கட்டிட்டு, சுஜிதாகிட்ட ஆஜரானேன்.

"இது ரொம்ப ஜாலியான யூனிட் ரீட்டா. டைரக்டர், கேமராமேன்னு எல்லாருமே யூத்தான். அதனால ஏரியா எப்பவுமே சென்னை டிராஃபிக் மாதிரி சத்தமாவேதான் இருக்கும். அரட்டை கச்சேரி போர் அடிச்சாதான் ஷுட்டிங்கே நடக்கும்னா பாத்துக்கோயேன்!" உற்சாகமா சொன்னவங்ககிட்ட "சரி... 'விளக்கு வச்ச நேரத்துல' (கலைஞர் டி.வி.) எப்படி போயிட்டு இருக்குனு?"னு கேட்டேன்.

"பாக்கியராஜ் சாரோட 'முந்தானை முடிச்சு' படத்துல சின்ன குழந்தையா நடிச்ச எனக்கு, இப்போ மறுபடியும் அவரோட சீரியல்ல ஹீரோயின் சான்ஸ்! ரொம்ப சுவாரஸ்யமா கதை நகர்ந்துட்டு இருக்கு!"னு சொன்ன சுஜிதாவோட கணவர் தனுஷ், 'ஆரஞ்ச் ட்ரீ'ங்கற பேர்ல விளம்பரக் கம்பெனி நடத்தறார். சுஜிதா வர்ற விளம்பரங்கள் எல்லாம் மேட் பை தனுஷ்தான்!

மேட் ஃபார் ஈச் அதர்!

'மக்கள் அரங்கம்' விசு சார், இப்போ புதுசா 'சின்ன சின்ன ராகம்'னு (ஜெயா டி.வி.) ஒரு புரோகிராமோடவர்றார்.

வாழ்த்துகள் சொல்லப் போன ரீட்டாகிட்ட, அந்த கம்பீர குரலோட நிகழ்ச்சி பத்தி பேச ஆரம்பிச்சார் சார்.

"இது பள்ளி குழந்தைகளுக்கான சங்கீத நிகழ்ச்சி. ஒரு ஸ்கூல்ல இருந்து 12 பிள்ளைகள்னு, மொத்தம் 16 பள்ளிகள் கலந்துக்கப் போறாங்க. பல சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில, மொத்தம் எட்டு நடுவர்கள்! எல்லா சுற்றுகள்லயும் ஜெயிச்சு முதலாவதா வர்ற பள்ளிக் குழந்தைகளை தமிழ்நாடே கொண்டாடப் போகுது பாரு ரீட்டா!"னு சொன்ன விசு சார்கிட்ட,

"ஏற்கெனவே இங்க எல்லா சேனல்களும் குழந்தைகளுக்கான பாட்டு போட்டிகள்ல பிஸி. நீங்க புதுசா என்ன பண்ணப் போறீங்க..?"னு கேட்டா,

"இந்த கேள்வியைதான் எதிர்பார்த்தேன் ரீட்டா! இந்த நிகழ்ச்சியில... நாட்டுப்புறப் பாடல்கள், எழுச்சிப் பாடல்கள், கிராமிய பாடல்கள், சமூக மற்றும் சமுதாயப் பாடல்கள், மற்றும் ஆன்மிகப் பாடல்கள்னு வெரைட்டியா பாடுவாங்க குழந்தைங்க. முக்கியமான விஷயம்... சினிமாப் பாடல்கள் இங்க நாட் அலவ்ட்! பச்சப் புள்ளைங்கள எல்லாம் 'தூது வருமா தூது வருமா'னு ஹஸ்கி வாய்ஸ்ல பாடவிடற கொடுமையப் பார்த்து வருத்தப்பட்டவங்களுக்கு, இந்தக் குழந்தைங்க இப்படி ஆரோக்கியமான பாடல்களை மழலைக் குரல்ல பாடக் கேட்கறது ரொம்பவே ஆறுதலா, ஆனந்தமா இருக்கும்!"னு முடிச்சார்.

சீனியர் சொன்னா... சரிதான்!

'டம்டம்... டமடம... டம்டம்...

கேபிள் கலாட்டா!

சகலமானவர்களுக்கும் அறிவிக்கிறது என்னனா, நம்ம தூர்தர்ஷனுக்கு இது பொன்விழா ஆண்டு. அதனால, இந்த 2010 முழுக்க அவங்களுக்கு விழாக்காலம்தான். அதைக் கொண்டாடற விதமா சென்னையில வெரைட்டி என்டர்டெயின்மென்ட், கலைவிழா, சங்கீத நிகழ்ச்சிகள்னு நடத்தி அதை டெலிகாஸ்ட் பண்ணப் போறாங்க. அந்த விதமாதான் சமீபத்துல கர்னாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை கலந்த ஜுகல்பந்தி விழா நடத்தினாங்க. டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவும் பண்டிட் அஜோய் சக்ரவர்த்தியும் இணைந்து கொடுத்த அந்த இசை மகாமகம், வெகு சீக்கிரமே தூர்தர்ஷன்லயும் டெலிகாஸ்ட் ஆகயிருக்குதுங்கறது.. சம்மர்க்கு ஏத்த ஒரு ஐஸ்க்ரீம் நியூஸ்!'

அப்போ 'கார்னெட்டோ' சாப்பிட்டுட்டே 'பைபை' சொல்லிக்கறா ரீட்டா!

வாசகிகள் விமர்சனம்!

"ஜெயா டி.வி-யில் பழம்பெரும் பாடகி ஒருவரின் பேட்டி, தொடங்கிய சற்று நேரத்துக்குப் பிறகே நான் காண நேர்ந்தது. 'ஆனந்த ராகம்' என்ற அந்த நிகழ்ச்சியில் பேட்டியினிடையே அவரது பாடலுக்கான சினிமா காட்சிகளும் இடம்பெற்றன. நன்கு பரிச்சயமான அவருடைய பெய ரைத் தெரிந்து கொள்ளும் ஆவலோடு, முக்கால் மணி நேரத்துக்கும் மேல் நிகழ்ச்சியைப் பார்த்தேன். ஆனால், கடைசிவரை அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. தவறாமல் வரும் விளம்பரங் களுக்கு முன்பு அல்லது பின்பும், நிகழ்ச்சி முடியும்போதும் சம்பந்தபட்ட நபர்களின் பெயர், தொழில் என்று முக்கியமான விஷயங்களைக் குறிப்புகளாக போடலாமே!" என்று ஆதங்கப்படுகிறார் மயிலாடுதுறையில் இருந்து சோனா.மணிமொழி.

"சன் டி.வி-யில் வரும் 'மாதவி' தொடரில் மாதவியாக நடிக்கும் சரா ஆலம்பராவுக்கு அழகிய சாந்தமான முகம். அழும்போதுகூட சிரிப்பது போலவே இருக்கிறது. கோபம் காட்டினாலும் சாந்தமான முகமாகவே தெரிகிறது. 'கோலங்கள்' அபியின் முகமும் சாந்தமானதுதான். ஆனால், நடிப்பில் நவரசங்களும் தெரிந்தன. மாதவி கொஞ்சம் முகபாவங்களை மாற்றி கொண்டால் நன்றாக இருக்கும்" என்று ஆலோசனை சொல்கிறார் சென்னையில் இருந்து எஸ்.பிரேமா.

"ஜெயா டி.வி-யில் 'ஹரிஹரனுடன் நான்' எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடுவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வசந்தன், சுமாராக பாடிய ஒரு பெண்ணிடம், 'இவ்வளவு வருடம் பாட்டு கற்றுக் கொண்டும் என்ன பாட வேண்டும் என்றுகூட தெரியவில்லையே...' என்று முகத்தில் அறைந்தாற் போல் கூறியது நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் மனதையும் புண்படுத்துவதாக இருந்து. நடுவர் எனும் பொறுப்புக்கு வருபவர்கள், கொஞ்சம் இதமாக நடந்து கொள்வது நல்லது'' என்று அறிவுரை சொல்கிறார்கள் சென்னையில் இருந்து பி. சாரதாம்பாள் மற்றும் பெங்களூருவில் இருந்து ஜி. இந்திரா.

"விஜய் டி.வி-யில் 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியை மறுபடியும் நடிகை லட்சுமி ஆரம்பித்துள்ளார். அதில், தந்தையாலேயே சீரழிக்கப்பட்ட மகளைப் பற்றி சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பினார்கள். ஆரம்பித்திலேயே டி.வி-யை அணைத்துவிட்டேன். துளியும் நியாயப்படுத்த முடியாத இத்தகைய கொடூரம், பல கோடியில் ஒன்றாக எங்காவது நடப்பதுண்டு. ஆனால், அதை இப்படி பலர் அறிய விவாதிப்பது சரியா? இதைப் பார்க்கும் அப்பாக் களின் மனது என்னவாகும்... மகள்களின் மனநிலையில் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்... என்றெல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் யோசித்திருக்க வேண்டாமா? சீனியரான லட்சுமிக்கு கூடவா இதெல்லாம் தெரியாது?" என்று கொந்தளிக்கிறார் பாண்டிச்சேரியிலிருந்து

ஒய்.ராஜேஸ்வரி.

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.75

கேபிள் கலாட்டா!
 
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism