அறையின் விளக்கு, மின்விசிறி போன்றவற்றை கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் சுவரில் உயரத்தில் ஒன்று இருப்பதுடன், கட்டிலில் இருந்த படியே பயன்படுத்தும் வகையில் கைக்கு எட்டும் தொலைவில் ஒன்று இருப்பதும் நன்று. சுவர்கள் உறுத்தாத நிறத்திலும், எதிரெதிர் சுவர்கள் வேறுபட்ட நிறத்திலும், கதவு மற்றும் அலமாரிகள் அடர் நிறத்திலும் வண்ணம் பெற்றிருக்க வேண்டும்.
என்னதான் நவீன வசதிகளை வீட்டில் கொட்டி நிறைத்தாலும், இயற்கையை நேசிக்கும் மூத்த தலைமுறையினருக்கு அவை நிறைவைத் தராது. எனவே, ஜன்னலை ஒட்டியே வெளிப்புறத்தில் பசுமையான செடி, கொடிகளை வளர்க்கலாம்.
பாத்ரூமை பொறுத்தவரையில் அங்கு சரிபாதி இடம் உலர் தரையாக இருக்கும்படி வடிவமைக்க வேண்டும். தரை எந்த நிலையிலும் பிடி இழக்காததாக இருப்பதோடு, சுவரோரம் கைப்பிடி அமைப்பதும் நல்லது. டாய்லெட்டிலும் இந்தக் கைப்பிடி அத்தியாவசியம். இந்திய அமர்வைவிட வெஸ்டர்ன் டைப்பே சிறப்பானது என்பதைத் தனியாக சொல்ல வேண்டியதில்லை.
சிறுநீர் உபாதையில் மற்றவர்களைவிட முதியவர்கள் அதிக முறைகள் இரவில் எழுவார்கள். அகால நேரத்தில் பாத்ரூமில் ஸ்விட்ச் போட்டதும், அந்தப் பளீர் வெளிச்சம், தூக்கத்தை தெறித்தோடச் செய்துவிடும். தூக்கமிழந்த மிச்ச இரவு அவர்களுக்கு ரணகளமாகிவிடும். எனவே, தரைக்கு மட்டுமே வெளிச்சமளிக்கும் விளக்குகளைப் பதித்தால், இந்தத் தொல்லைகள் எதுவும் இருக்காது."
|