ஆரத்தழுவிக் கொள்ளுதல் என்பது அன்பின் அடையாளம். குழந்தையைத் தாய் அணைக்கும்போது, அன்பின் மிகுதியால் தாயின் பிடி இறுகிவிட்டால், அது குழந்தைக்கே ஆபத்தாக முடிந்துவிடும் இல்லையா?
"என்ன சுவாமி சொல்கிறீர்கள்? நீர் அடித்து நீர் விலகுமா? இல்லை கோழி மிதித்து குஞ்சுதான் முடமாகுமா? தாய் அணைத்து சேய் சேதமடைந்துவிடுமா?" என்று நீங்கள் கேட்கக்கூடும். அன்றாட வாழ்கையில் நீங்கள் சந்திக்கும் சில காட்சிகளை உங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்களுக்கே உண்மை விளங்கும்.
"எனக்கு சின்ன வயசுல நல்ல கல்வி கிடைச்சிருந்தா, நல்ல காலேஜுல படிக்க வாய்ப்பு கிடைச்சிருந்தா, நானும் இன்னிக்கு ஒரு நல்ல வேலையில இருந்துருப்பேன்...",
"சின்ன வயசுல எனக்கு பாட்டு, பரதநாட்டிய கிளாஸ் போகணும்னு ஏக்கம். ஆனா, கொடுத்து வைக்கல...",
"சின்ன வயசுல எனக்கு சத்தான உணவு கொடுத்திருந்தா, இந்த முப்பது வயசுலயே இப்படி அலுப்பு, சோர்வுனு அல்லல்பட்டிருக்க மாட்டேன்..."
- இப்படி எல்லாருக்குமே ஒரு பட்டியல் இருக்கும். விளைவு, 'எனக்குக் கிடைக்காத இதெல்லாம் என் பிள்ளைகளுக்கும் கிடைக்காம போயிடக் கூடாது’ என்ற பயம் பல இளம் தாய்மார்களை இப்போது பாடாய்ப்படுத்துகிறது.
சமீபத்தில் நான் சென்னை வந்திருந்தபோது ஒரு இளம் தாய், யூ.கே.ஜி. படிக்கும் தன் மகனுக்கு சோறு ஊட்டிய காட்சியையும், வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்ததையும் பார்க்க நேர்ந்தது. ஹிட்லரின் சித்திரவதைக் கூடங்கள் எவ்வளவோ தேவலாம் என்று அப்போது தோன்றியது எனக்கு.
குழந்தைகளை இன்றைய தாய்மார்களில் பலரும் குழந்தைகளாகவே இருக்க விடுவதில்லை. தங்களின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக்காட்டும் கருவிகளாகவே பார்க்கிறார்கள்.
"குரங்கு மாதிரி மேலேயும் கீழேயும் குதிக்காம, ஓரமா ஒரு இடத்துல உட்கார்" என்று சொன்னால்... எந்தக் குழந்தைக்குத்தான் பசி எடுக்கும்? பசியே இல்லாதபோது குழந்தையை தலையில் குட்டி சாதம் ஊட்டுவதை என்னவென்று சொல்வது? குழந்தைகள் ஏதாவது கேள்வி கேட்டால், "சும்மா தொணதொணனு பேசிட்டு இருக்காதே" என்று அதை அடக்கிவிட்டு, புத்தகங்களில் இருக்கும் வாக்கியங்களை எல்லாம் குழந்தையின் புத்திக்குள் திணிக்கும் செயல்களையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?!
|