அப்பா, அம்மா, அண்ணன். அக்கா, தங்கை, தம்பி என அத்தனை அற்புத உறவுகளுடன் வளைய வந்தவள் நான். திருச்சியில் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரியில் எல்லாவற்றிலும் நான் முதல் மாணவி. என் பேச்சுத் திறமை, சுறுசுறுப்பு இதைஎல்லாம் பார்த்து வியந்து போய் பாராட்டிய கல்லூரித் தோழரிடம் மனதைப் பறிகொடுத்து, திருமணமும் செய்துகொண்டேன்.
அவர் வேற்று சாதிக்காரர் என்பதால், குடும்பமே என்னை வெறுத்து ஒதுக்கியது. நாளடைவில் ஒன்று கூடினாலும், பெரிதாக ஒட்டுதல் இல்லை. ஆனால், கட்டிய கணவருக்கு ஏற்ற மனைவியாக, இரண்டு பிள்ளை களுக்குத் தாயாக வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.
எனக்குப் பிடிக்காது என்பதால் அசைவ உணவுகளை, வீட்டில் சமைக்கக்கூட அனுமதிக்க மாட்டார் கணவர். அப்படித்தான் ஆரம்பித்தது இந்த 20 ஆண்டு கால இனிய வாழ்க்கை. ஆனால், ஆரம்பத்திலிருந்தே வெளிப்பட்டுக் கொண்டிருந்த அவருடைய கோப குணம், சமீபகாலமாக எல்லை மீறிப்போய்... வாழ்க்கை மீதான பிடிப்பையே தளர்த்த ஆரம்பித்துவிட்டது.
எந்த விஷயத்தைச் சொன்னாலும்... கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை நடப்பதோடு, வீட்டில் உள்ள பொருட்கள் உடைபடுகின்றன. டி.வி., கம்ப்யூட்டர், டேப் ரெக்கார்டர் என எங்கள் வீட்டிலிருக்கும் அத்தனைப் பொருட்களும் காயலான் கடைக்குப் போட வேண்டிய நிலைக்கு மாறிவிட்டன.
''ஏன் இப்படி?" என்று கேட்டால்... ''உன்னை அடிக்க முடியாதுல்ல..." என்று வெளிப்படையாகவே சொல்கிறார். ஏன்தான் இப்படி நடந்து கொள்கிறாரோ என்பது பிடிபடவே இல்லை.
ஒரு நாள் வேலை முடித்துவிட்டு, விடியற்காலையில் அவர் வீட்டுக்கு வர, ''கதவைத் திறந்ததுமே லைட்டைப் போடக் கூடாதா... இதென்ன எழவு வீடா... யாராவது செத்துட்டாங்களா?" என்று ஆரம்பித்து வார்த்தைகளை அள்ளி வீசினார். 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்பது போல கத்தித் தீர்த்துவிட்டேன். ஆனால், அதன்பிறகு, தாக்குதல் இன்னும் அதிகரித்ததுதான் சோகம். ஒரு நாள் சாப்பிட உட்கார்ந்தவர், ''இது என்ன உப்புச்சப்பு இல்லாத சாம்பார்? தயிர் சாதத்தை சாப்பிட நான் என்ன மயிலாப்பூரா?'' என்றபடியே தட்டை தூக்கி வீசியவர், சாதி ரீதியாகவும் கேவலப்படுத்த ஆரம்பித்துவிட்டார். என் பெற்றோர், உற்றார்கூட தப்பமுடியவில்லை.
ஒரு தடவை, தன்னுடைய தங்கையின் கணவர், தங்கையை கேவலமாகப் பேசினார் என்பதற்காக, போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைக்கும் அளவுக்கு போனார் என்னவர். அப்படிப்பட்டவருக்கு, மனைவியை மரியாதையாக நடத்தத் தெரியவில்லை என்பது எத்தனை கொடுமை?
'இரண்டு குழந்தைகளைப் பெற்றுவிட்டதால், அவர்களுக்கான கடமைகளை செய்து முடித்துவிட்டு கண்காணாத இடத்துக்குப் போய்விடவேண்டும்' என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதற்குள்ளாகவே பூகம்பமாக வெடித்துச் சிதறிவிடுவேனோ என்ற பயம் வாட்டி வதைக்கிறது. என் மனநோய்க்கு மருந்திடுங்கள் தோழிகளே...
ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி
என் டைரி 222-ன் சுருக்கம்...
|
|