Published:Updated:

ஆட்கள் தேவை !

ஆட்கள் தேவை !

ஆட்கள் தேவை !

ஆட்கள் தேவை !

Published:Updated:
ஆட்கள் தேவை !
ஆட்கள் தேவை !
ஆட்கள் தேவை !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கெம்பா’ கார்த்திகேயன்
ஆட்கள் தேவை !

கல்விச் சுற்றுலாவுக்கு வந்த மாணவியர் குழுவுக்கு 'காலேஜ் டு கார்ப்பரேட்' என்கிற தலைப்பில் பயிற்சி அளிக்கச் சென்றிருந்தேன். பயிற்சி நேரத்தை தாண்டிய கேள்வி நேரத்தில் மீண்டும் மீண்டும், வெவ்வேறு வார்த்தைகளில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று இருந்தது. அதை, நூற்றுக்கணக்கான கூட்டங்களில் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி (FAQ-Frequently Asked Questions) எனலாம். அது - "பெண்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் அதிகமுள்ள துறைகள் என்னென்ன... அதற்கான தகுதிகள் என்னென்ன..?"

- இந்தக் கேள்விகளுக்கான விரிவான விடைதான் இந்தத் தொடர்!

பொதுவாக, வேலைச்சந்தை பற்றிய தெளிவில்லாத பெற்றோர்களும் ஆசிரியர்களும், 'நேற்றைய' அனுபவத்தைக் கொண்டு 'நாளைய' தேவைகளைக் கணித்து... யூகங்கள், ஆலோசனைகள் என்று வழங்கிக் கொண்டிருப்பது மாணவ - மாணவியருக்கு குழப்பத்தைத்தான் தருகிறது.

ஒரு காலத்தில் பொறியியல் மற்றும் மருத்துவம் மட்டும்தான் பெரிய வேலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. 80-களில் பேங்க் வேலைதான் மத்திய தர குடும்பங்களின் ஆதர்ச துறை. 90-களின் மத்தியிலிருந்து கம்ப்யூட்டர் துறைகள் தலையெடுத்தன. இன்றோ... பன்னாட்டு நிறுவனங்களில் சேர்வதும், பகட்டான சம்பளம் வாங்குவதும்தான் பெரும்பாலானவர்களின் டார்கெட். ஆனால், பெயர் தெரியாத புதுத் துறைகள், கம்பெனிகள், படிப்புகள் என வருவதால் பல பெற்றோர்களுக்கு மிகுந்த குழப்பம்.

இதை, " 'எங்க, என்ன வேலை பார்க்கறீங்க'னு எல்லாம் இப்போ யாரையும் நான் கேட்கறதில்ல. சொன்னா நமக்கு புரியவா போகுது? முன்னயெல்லாம் கவர்மென்ட், ரயில்வேஸ், டி.வி.எஸ்-னும், இன்ஜினீயர், ஆபீஸர், மேனேஜர்னும் வேலைக்குப் பேர் சொல்லுவோம்... இப்போ?! அதனால 'நல்லா இருக்கிறியா'ங்கறதோட நிறுத்துக்குவேன்!" என்று வேடிக்கையாகச் சொல்வார் என் தந்தை.

ஆட்கள் தேவை !

ஒரு தடவை, 'என்ன வேலை பார்த்துக்கிட்டிருக்க?' என்று தன் உறவுக்கார பெண்ணிடம் அவர் கேட்க, அதற்கு கிடைத்த... 'ஆபீஸ் டைகர்ல கிளயன்ட் இன்டர்ஃபேஸ் (Office Tiger, Client interface) பண்றேன்' என்ற பதில்தான் இந்த முடிவுக்குக் காரணம்!

பெற்றோர்களிடம் புதுப்பிக்கப்பட்ட தகவல் அறிவு குறைந்து போய் விடுகிறது. ஆசிரியர்கள் பலருக்கும்கூட ஆழம் உள்ள அளவு, அகன்ற தகவல் அறிவு திரட்டுவது கடினம். அதனால் வேலையில் வெற்றி பெற்ற (?) நண்பர்களும் உறவினர்களும் சொல்லும் ஆலோசனைகள்தான் இன்று அதிகாரப்பூர்வமாகக் கருதப்படுகின்றன.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

ஒருபுறம் படிப்பும், தகுதியும், ஆர்வமும் உள்ள கூட்டம் 'எனக்கான சிறந்த வேலை எது?' என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் தகுதியான, வேலைக்குத் தயாரான ஆட்கள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றன நிறுவனங்கள்!

என்ன சிக்கல் என்றால், டெய்லர்கள் தேவை, கடை ஊழியர்கள் தேவை, டிரைவர்கள் தேவை என கடைநிலை ஊழியர்கள் தேவை என்பதை 'ஆட்கள் தேவை' போர்டுகளை வாசலில் தொங்கவிட்டுத் தெரியப்படுத்தலாம். ஆனால், 'White Collar’' பணியாளர் களுக்கு இப்படி பலகை தொங்கவிட்டுத் தேட முடியாது. தீவிரமாக ஆங்கில தினசரிகளில் விளம்பரம் பார்ப்பவருக்கு வேண்டுமானால் ஓரளவு பிடிபடலாம். ஆனால், வேலைச் சந்தைப் பற்றி தற்போதைய நிலையையும், நாளை ஏற்படவிருக்கும் தொழில் சந்தை நிலவரத்தை கணித்து ஆலோசனை சொல்லவும் 'ஹெச்.ஆர்' (HR-Human Resources) அனுபவம் தேவை.

இதில் இன்னும் சில பக்கங்களும் உள்ளன. ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்க நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல நிறுவனம் போன்ற வெளிக்காரணங்கள் மட்டும் போதுமா? உங்கள் தனித்தன்மை, ஆர்வம், சிறப்புத் தகுதி, அனுபவம் போன்ற தனி மனித காரணங்கள் தேவையில்லையா? எளிமையாகச் சொன்னால்... எதில் வாய்ப்பு அதிகம் என்று பார்த்துத் தீர்மானிப்பதா? அல்லது எதில் ஆர்வமும் ஆற்றலும் உள்ளது என்று பார்த்துத் தீர்மானிப்பதா?

தொடர்ந்து விவாதிப்போம் இந்தத் தொடரில்..!

ஆட்கள் தேவை !

'நாற்று நடுவதிலிருந்து, நாடாளுமன்றம் வரை பெண்கள் பணியாற்றுகிறார்கள்' என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும், பெரும்பாலான அமைப்புகளில், நிறுவனங்களில் கீழ்மட்டம் அல்லது அடுத்த சில மட்டங்கள் வரைதான் பெண்களால் உயர முடிகிறது. பெண் தொழிலாளிகள் உள்ள அளவு, பெண் மேலாளர்கள் இருப்பதில்லை! உயர் பதவிகளில் ஆண்கள் ஸ்திரமாக உள்ள நிலையில், பெண்களால் ஒரு அளவுக்கு மேல் உயர்வதில் பல சிக்கல்கள் உள்ளன. இதை 'கிளாஸ் சீலிங்' (Glass Ceiling)என்பார்கள். அதாவது, பார்த்தால் வானம் தெரியும். எந்தத் தடையும் தெரியாது. உயரப் பறக்க நினைக்கையில் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடி விட்டம் தடுத்து நிறுத்தும்.

மாறி வரும் காலச் சூழ்நிலையில் இந்தக் கண்ணாடி விட்டத்தை உடைப்பது எப்படி? அறிமுக நிலை முதல் உச்சி வரை பெண்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன? படிப்பை மீறிய தகுதிகள் என்னென்ன தேவைப்படுகின்றன? எந்தத் துறைகள் பெண்களுக்கு மிக ஏற்றது? பத்து வருடங்கள் கழித்து விஸ்வரூபம் எடுக்கக் கூடிய துறைகள் என்னென்ன? உங்கள் ஆர்வத்துக்கேற்ற வேலை இதுதானா என எப்படிக் கண்டு பிடிப்பது?

ஒவ்வொன்றாக அலசி ஆராய்வோம்..!

சரி, இந்த வேலை வாய்ப்பு ஆலோசனைகள் எல்லாம் யாருக்கு?

கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடுதலோடு இருப்பவர்களுக்கு மட்டும்தானா? இல்லவே இல்லை. 'வேறு வேலை பார்க்கலாமா...?' என்று எண்ணும் எக்ஸிக்யூட்டிவ்களுக்கும், 'ஒரு நாளைக்கு 6 மணி நேரம் டி.வி-யும் மொபைல் அரட்டையுமாக கழிகிறதே, ஏதாவது செய்யலாமே...' என்று எண்ணும் இல்லத்தரசிகளுக்கும், 'நாற்பத்தைந்தில் வி.ஆர்.எஸ். வாங்கியாகி விட்டது. அடுத்து என்ன செய்யலாம்' என்று எண்ணுவோருக்கும், ஓய்வுக்குப் பிறகும் தங்கள் இறுதி கட்ட வாழ்வை லகுவான வேலையில் இணைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ள 'மூத்த 'இளைஞர்களு'க்கும் என, எல்லோருக்கும்தான்.

பொதுவாக, வேலை தேடலுக்கு சில திறன்கள் உள்ளன. சில செயல்பாடுகள் உள்ளன. சி.வி. (CV-Curriculum Vitae) எழுதுவது, இன்டர்வியூவில் பதில் சொல்வது, சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எடுத்துக் கொள்வது... இப்படி பல. வரும் இதழ்களில் அவற்றுள் பிரவேசிப்பதற்கு முன், ஒரு சின்ன ஹோம்வொர்க். ஐந்து வருடங்கள் கழித்து, 'நீங்கள் என்னவாக ஆக வேண்டும்? என்ன வேலையில் இருக்கவேண்டும்?' என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்று நீங்கள் எண்ணுபவற்றை எழுதிக் கொள்ளுங்கள்.

உங்கள் கற்பனையே வித்து... அதுவே நாளை விருட்சம்!

- தேடுவோம்...

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்...

சென்னையில் உள்ள 'கெம்பா மேனேஜ்மென்ட் கன்சல்டிங்' என்ற மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர். தனது 20 வருட ஹெ.ஆர். அனுபவத்தில், 35 ஆயிரம் கார்ப்பரேட் மேனேஜர்களை தன் பயிற்சியால் உருவாக்கியவர். கடந்த சில ஆண்டுகளாக 'காலேஜ் டு கார்ப்பரேட்' என்ற தலைப்பில் இவர் நடத்திவரும் 'மாணவர் வழிகாட்டு பயிலரங்கங்கள்', தன் படிப்பு என்ன, திறமை என்ன, அதற்கான வேலை என்ன என அடுத்தடுத்த கேள்விகளுடன் கலங்கிக் காத்திருக்கும் இளம் சமுதாயத்துக்கு ஒரு கலங்கரை விளக்கம், நம்பிக்கை நீரூற்று! இப்படி, நிறுவனங்களுக்கும் பட்டதாரிகளுக்கும் இடையே பாஸிட்டிவ் பாலம் அமைத்துக் கொண்டிருக்கும் கார்த்திகேயன், அடிப்படையில் ஓர் உளவியல் நிபுணர் என்பது சிறப்புச் செய்தி!

ஆட்கள் தேவை !
 
ஆட்கள் தேவை !
ஆட்கள் தேவை !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism