"பில்டப் எல்லாம் சரி, அதான் போன தடவை 'சுற்றுலா சிறப்பிதழ்'னு போட்டீங்களே... அப்பவே இதையும் போட்டிருக்கலாமே"னு கேட்கறீங்கதானே?! எல்லாம் 'இடஒதுக்கீடு பிரச்னை'தாங்க. வேற என்ன பண்றது? இருந்தாலும், இதுவும் முக்கியமான மேட்டர்ங்கறதால... இந்தத் தடவை 'இடம் ஒதுக்கீடு' கொடுத்தாச்சு.. ஹி... ஹி!
பொதுத்துறை மற்றும் தனியார் துறை காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் இந்த பாலிசி பற்றி, காப்பீடு ஆலோசகரான க.நித்யகல்யாணி நம்மிடம் விளக்கினார்.
''அதிக செலவு செய்து சுற்றுலா செல்லும் பலரும், சின்ன செலவான இந்த பாலிசியை எடுக்காமல் விட்டுவிடுவார்கள். ஆனால், எதிர்பாராத பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்கும் ஆபந்பாந்தவன் இந்த பாலிசி! சுற்றுலா செல்வது உள்நாடாக இருந்தால் 'டொமெஸ்டிக் டிராவல் பாலிசி', வெளிநாடாக இருந்தால் 'ஓவர்சீஸ் டிராவல் பாலிசி' எடுக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சுற்றுலா சென்றால் அங்கு மருத்துவச் செலவு அதிகமென்பதால், பிரீமியம் அதிகமாக இருக்கும். மற்ற நாடுகளில் நடுத்தர அளவில் இருக்கும்.
ஒரு நாள் முதல் பயண காலத்துக்கு ஏற்ப பாலிசி காலத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்கு ஏற்பவும் பிரீமியம் மாறும். 50 ஆயிரம் டாலர்கள் முதல் ஒரு லட்சம் டாலர் வரை காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். 45 வயதான குடும்பத் தலைவர், 40 வயது மனைவி, 18 வயது மகளுடன் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பம் 3 நாட்களுக்கு 50 ஆயிரம் டாலருக்கு (சுமார் 23 லட்ச ரூபாய்) சுற்றுலா மெடிக்கிளெய்ம் பாலிசி எடுத்தால், அதற்கான பிரீமியம் சுமார் 1,000 ரூபாய்தான். இதுவே அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தால் மொத்த பிரீமியம் சுமார் 2,300 ரூபாய். மற்ற நாடுகளுக்கு சுமார் 1,550 ரூபாய்தான். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு இந்தக் குடும்பம் 25,000 டாலருக்கு (சுமார் 11.50 லட்ச ரூபாய்) பாலிசி எடுத்தால் பிரீமியம் சுமார் 650 ரூபாய். இந்த பிரீமியம் காப்பீடு நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும்'' என்ற நித்யகல்யாணி,
"செல்லுமிடத்தில் ஒருவேளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், இன்ஷுரன்ஸ் நிறுவனம் கொடுத்திருக்கும் அடையாள அட்டையைக் காட்டி சிகிச்சை மேற்கொள்ளலாம். செலவை காப்பீடு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்" என்றும் சொன்னார்.
|