தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற 'டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி' துறை, ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறையும் உருவாக்கும் புராஜெக்ட்தான், 'விஞ்ஞானம் தொழில்நுட்பம் தொழில் முனைவோர் மேம்பாடு' எனப்படும் 'ஸ்டெட்'. இந்த அமைப்பின் நோக்கமே நாடு முழுவதும் சாமான்ய மனிதர்களாக இருப்பவர்களைச் சாதிக்க வைக்கும் தொழில் முனைவோர்களாக மாற்றுவதுதான். திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழகத்தின் மத்தியப் பகுதியில், 'விதியே' என வாழ்க்கையை நொந்து கொண்டு வேதனையில் வாடிய பெண்களில் பலரையும் இப்படி தொழில் முனைவோர்களாக மாற்றியிருக்கிறது இந்த அமைப்பு.
வார்த்தைகளில் உற்சாகம் தெறிக்கப் பேசினார் 'ஸ்டெட்' அமைப்பின் திருச்சி பகுதி திட்ட இயக்குநராக பணியாற்றிய ராமசாமி தேசாய்...
" 'தன்னம்பிக்கையுள்ள நூறு இளைஞர்களை கொடுங்கள், நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன்'னு சொன்னார் விவேகானந்தர். அதையே, 'தன்னம்பிக்கையுள்ள நூறு பெண்களைக் கொடுங்கள், நாட்டையே மாற்றிக் காட்டுகிறோம்'னு சொல்றதுதான் 'ஸ்டெட்' திட்டம். படிப்பு வேண்டாம், பணம் வேண்டாம்... வெறும் தன்னம்பிக்கைங்கற நெருப்பை மட்டும் நெஞ்சுக்குள் நிரப்பி வெச்சிருக்கற பெண்கள்தான் எங்க இலக்கு. முன்னுக்கு வரணும்கிற வெறியோடயும், ஜெயிச்சே ஆகணும்கிற வேகத்தோடயும் எங்ககிட்ட வர்ற பெண்களோட உழைப்பை, சரியான திசையில செலுத்தி தொழிலதிபர்களா உருவாக்கறோம்'' என்றவர்,
"ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகளிடம்தான் இந்தத் திட்டத்தை நிறைவேத்தற பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கு. அந்த வகையில திருச்சியில இந்த திட்டத்தை செயல்படுத்தற பொறுப்பை, திருச்சி மாவட்ட குறுதொழில் கழகமான 'டிடீட்சியா'கிட்ட (TIDISSIA-Trichi District Tiny and Small Scale Industries Association) கொடுக்கப்பட்டிருந்துது.
மற்ற மாநிலங்கள்ல எல்லாம், ஆண் தொழில் முனைவோர்களைத்தான் இந்தத் திட்டத்துல அதிகமா உருவாக்கியிருக்காங்க. தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்களைவிட, பெண்கள்தான் சொந்தக்கால்ல நிக்கறதுல ஆர்வமா இருக்காங்க. அதனால, இந்த நாலு வருட காலத்துல (2006-10) நாங்க உருவாக்கின 261 தொழில் முனைவோர்கள்ல, 161 பேர் பெண் தொழில் முனைவோர்கள்!'' என்றார் பெருமையாக ராமசாமி தேசாய்.
|