கணவர் கண்ணால் புடவையைப் பார்த்துச் சொன்னாரா, இல்லை இந்த உரையாடலை இதைவிடச் சீக்கிரம் முடிக்க வேறு வழியில்லை என்று சொன்னாரா என்பது... கடவுளுக்கே வெளிச்சம்!
''இன்னிக்கு ரசத்துல ஒரு சேஞ்ச் இருக்கே... தெரியலையா?"
''அப்படியா... எனக்கு எப்பவும் போலத்தான் இருந்தது..."
தோழி சொன்ன புதுவித ரசம் ரெசிபிபடி பருப்பு வேகப் போடுகையிலேயே தக்காளியையும் பூண்டையும்கூட வேக வைத்து, மொத்தமாக மசித்து, புளித் தண்ணீரில் கொதிக்க வைத்து, சீரக, மிளகுப் பொடி போட்டு, கடுகு தாளித்து... 'எப்பவும் போல இருந்தது'க்காகத்தானா இத்தனை பாடு..?!
எப்போதோ நேரம் கிடைத்து பியூட்டி பார்லரில் போய் செய்து கொண்ட கூந்தல் சீரமைப்பு, ஒரு ரசனையில் வாசலில் மலர்ந்த மயில் கோலம், ஏதோ ஒரு புக்கைப் பார்த்துச் செய்த ஸ்பெஷல் அடை - அவியல் டிபன், பார்த்த உடனே பிடித்து வாங்கிய ஒரு பச்சை கலர் சில்க் காட்டன், அலுவலகத்தில் வாங்கிய ஒரு பரிசு... எதுதான் முழுதான நிறைவைத் தரும்... வீட்டில் உள்ள நெருங்கியவர்களின் பாராட்டு படியாதபோது?!
'அன்றாடம் பார்க்கும், உணரும் விஷயங்களுக்கு என்ன பாராட்டு வேண்டியிருக்கிறது' என்பது ஆணின் எண்ணம். 'ஒரு வார்த்தை, ஒரு சிரிப்பு, ஒரு துளி அங்கீகாரம்...' என்று ஏங்குவது பெண்ணின் மனம். இந்த இரண்டுக்கும் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத போராட்டத்தில் தோற்றுக் கருகி, குமைந்து, வெம்பி, கசப்புத் திரண்ட மனசாகி விடுகிறது, பெண் மனசு. அந்த நிலையிலேயே ஊறிக் கிடக்கும் மனசுக்கு, யாராவது எதேச்சையாக பாரட்டினால்கூட என்ன சொல்வது என்று தெரியாமல் போகிறது, சரோவைப் போல!
'ஆமா. சரோ மாதிரிதான் நானும்...' என்று சொல்லும் என் தோழியே... உன் கையைக் கொடு கொஞ்சம் நேரம். கை குலுக்கிப் பாராட்டுகிறேன். உன் ரசனை, உன் ஆர்வம், மாக்கோலம் போடுவது போல நீ அழகாக வேலை செய்யும் நேர்த்தி, உன் டிரெஸ் சென்ஸ்... எந்தத் திறமையோ அதை, அதற்குப் பின்னால் இருக்கும் உன்னை வியக்கிறேன்; ரசிக்கிறேன்.
ஆனால், பாராட்டுகளைக் பெற்றுக்கொள்ளும் போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நுட்பம் சிலதும் இருக்கின்றன. வீட்டில் கிடைக்காத பாராட்டு வெளியில், குறிப்பாக மற்ற ஆண்களிடம் கிடைக்கிறதா? மனது அதை விரும்பத்தான் செய்யும். 'போதும்' என்று மனதை அதட்டும் தைரியம், அவசரத் தேவை. 'மேடம், நீங்க மஞ்சள் கலர் புடவை கட்டினா அந்த காலத்து ஸ்ரீதேவி மாதிரி இருக்கீங்க' என்று சொல்லும் ஆணிடம் நாம் சொல்ல வேண்டியது, ஒரு 'தேங்க் யூ' மட்டுமே. நிச்சயமாக 'போங்க சார், பொய் சொல்லாதீங்க' இல்லை.
இந்த ஏக்கங்கள், பாராட்டுகளை தாண்டிய இன்னொரு பக்குவமும் இருக்கிறது. 'ஓவியன் வான்கா, கவிஞன் பாரதி ஆகியோருக்கெல்லாம் கிடைக்காத அங்கீகாரம், நமக்கு கிடைக்காததா பெரிசு?' என்று யோசித்தால், மனசு லேசாகி விடும்தானே?
ஆம்... 'அங்கீகாரம் இல்லை' என்ற ஏக்கம் பெண்களின் தனிச்சொத்து இல்லை. யோசித்துப் பார்த்தால் மனித குலத்தின் மிகப் பெரிய ஏக்கம் அதுதான்.
|