Published:Updated:

அவள் blogspot.com

அவள் blogspot.com

அவள் blogspot.com

அவள் blogspot.com

Published:Updated:

வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
அவள் blogspot.com
அவள் blogspot.com

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Blogspot.com
அவள் blogspot.com

தோழிகளே... ஏற்கெனவே இதழில் உங்களுக்கே உங்களுக்காக விரிந்துகிடக்கும் பக்கங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்துகிறது 'அவள்.Blogspot.com. அதுமட்டுமல்ல... இது உங்களுக்கான புதிய மேடையும்கூட!

ஆம்... சமுதாயத்தில் அன்றாடம் நடக்கும் நல்ல விஷயங்களைப் பார்த்து, 'அட, இது நல்லாயிருக்குல்ல...' என்று போற்றியிருப்பீர்கள்; 'சபாஷ்... இப்படித்தாண்டி இருக்கணும்' என்று சிலரைத் தட்டிக் கொடுத்திருப்பீர்கள்; 'அடச்சே... இந்த சின்ன விஷயத்தைக்கூட செய்யமுடியலைனா... எதுக்கு நமக்கொரு கவர்ன்மென்ட்?' என்று அவ்வப்போது கொதித்துஇருப்பீர்கள்; 'ஏன்தான்... பெண்கள்னாலே இப்படிக் கிள்ளுக்கீரையா நினைக்கறாங்களோ...' என சமூக நிகழ்வுகளைப் பார்த்து நொந்து கொண்டிருப்பீர்கள்... ஆனால், இதையெல்லாம் எங்கே போய் சொல்வது?

இனி, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை... உங்களின் ஆச்சர்யங்கள், ஆயாசங்கள், ரசனைகள், கவிதைகள், வெற்றிகள், வெதும்பல்கள், கொதிப்புகள், கொண்டாட்டங்கள் என்று எதுவாக இருந்தாலும் அதையெல்லாம் அந்த உணர்ச்சி 1% கூட குறையாமல் நீங்கள் பதிவு செய்யத்தான்... 'அவள் blogspot.com'. ஒரே ஒரு கண்டிஷன்... அத்தனையும் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பாடமாகவோ, படிப்பினையாகவோ, பயனுள்ளதாகவோ, ரசிக்கும்படியோ இருக்க வேண்டும் - அவ்வளவுதான்!

அத்தனையையும் கடிதம் (அவள்.blogspot.com'', அவள். விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2), ஃபேக்ஸ் (044-28512929), இ-மெயில் (aval@vikatan.com) மற்றும் உங்கள் குரலிலேயே பதிவுசெய்தல் (044--42890002) என எந்த வழியில் வேண்டுமானாலும் அனுப்பி வையுங்கள்.

இதழில் பதிவாகும் ஒவ்வொன்றுக்கும் பரிசு (ரூ.150) காத்திருக்கிறது!

கடந்த இதழில் வெளியான 'அவள்.blogspot.com' அறிவிப்பைப் பார்த்துவிட்டே அள்ளிக் குவித்துவிட்ட வாசகிகளின் படைப்புகளில் இருந்தே தொடங்குகிறது களம்...

நாய் வேஷம்... நாகரிக வேஷம்!

நான் பொறந்து, வளர்ந்து, படிச்சதெல்லாம் கோயமுத்தூருங்க. "நீ பேசுற இங்கிலீஸுக்கு (நெசம்மாவே நான் இங்கிலீஸு நல்லா பேசுவேனுங்க) ஒனக்கு வேலைய தூக்கி கொடுப்பாங்கடி..."னு என் அருமைத் தோழிங்க அம்சா, சத்யா ரெண்டு பேரும் உசுப்பிவிட, "நல்ல வேலையில சேர்ந்து புத்திசாலித்தனமா பொழச்சுக்கோ"னு சென்னையில இருக்கற எங்க அக்கா வீட்டுல என்னைய விட்டுட்டு போயிட்டாருங்கோ எங்க அப்பாரு.

சிங்காரச் சென்னையில சீட்டுக்கட்டு கணக்கா கிடக்கற ஆபீஸுங்கள்ல அஞ்சாறு முறை கால் வெச்சதுதான் மிச்சமுங்கோ. இங்கிலீஸ்ல பேசினா மட்டும் போதாதுங்களாம். 'அழகா' இருக்கோணுமாம்.

'அடப் போங்கப்பா...'னு வீட்டுல கெடந்தப்போதான், ''நாளைக்கு ஒரு பெரிய ஹோட்டல்ல ரிசப்ஷனிஸ்ட் வேலை இருக்கு. போய்ப் பாரு..."னு அக்காவோட சொந்தக்காரரு ஒருத்தர் சொல்ல... அக்கா வெச்ச அயிர மீன்குழம்பை ஒரு பிடிபிடிச்சுட்டு, ஆசுவாசமா படுக்கப்போனேன்.

"நாளைக்கு, இன்டர்வியூ இருக்கு. இப்படி எண்ணெய் வடிய போனா, 'போடி வெண்ணெய்'னு துரத்திடுவாங்க. ஒரே நாள்ல உன்னைய உனக்கே அடையாளம் தெரியாம ஆக்கிடறோம்"னு சவால்விட்டு, பியூட்டி பார்லருக்கு கூட்டிட்டுப் போனாங்க அக்காவோட நாத்தனாருங்க.

ஒரு அம்மணி, தலைமுடியை விரிச்சுவிட்டு மசாஜ் பண்ணி, ரெண்டு முழமா இருந்த என் கூந்தலை, ஜாண் அளவா நறுக்கித் தள்ள... இன்னொரு பொண்ணு, பட்டை பட்டையா சில்வர் பேப்பரை செருகி, பெயின்ட் போல பூசிட்டு, அங்கங்க நூல்கண்டு மாதிரி செருக... புருவத்துக்கும் வாய்க்குமா நூலை விட்டு கண்ணையே நையப் புடைச்சுருச்சு ஒரு புள்ள. முகத்துல ரோஸும், வெள்ளையுமா பேஸ்டை போட்டு, வெள்ளரிக்காயை கண்ணு மேல அமுக்கினதும், அக்கா வீட்டு அயிரை மீன் குழம்பு ஜோருல அப்படியே அசந்துட்டேன்.

ஒரு மணி நேரம் பொறுத்து, எழுந்திரிச்சு பார்த்தா... இது நானா..? சேரன் வில்லு மாதிரி புருவம், தங்கமா மின்னுற கூந்தலு, தாஜ்மகால் பளிங்கு மாதிரி முகம்னு சும்மா, சினிமா சினேகா கணக்கா ஜொலிக்கிறேன். 'ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்' வேலையில படக்குனு சேர்த்துக்கிட்டாங்கனா பார்த்துக்கோங்க!

ஒரு நாள், என்னைத் தேடி ஹோட்டலுக்கு என் அப்பாரு வர்றதை பார்த்துட்டு, ஆசை ஆசையா போய் அவர் முன்ன நின்னா... "ஏம்மா, என் மவ தாமரை இங்க வேலை பார்க்கறா... அவளை பார்க்கணும்..."னு என்கிட்டயே அவர் கேக்க, 'அப்பனுக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளை மாத்திப்புடுச்சே சென்னை'னு அதிர்ந்தே போயிடுச்சு மனசு!

ஒரு மாசம் ஓடி நிக்க... 'ஆகா... இன்னிக்கு சம்பள நாளு, சீக்கிரமா கிளம்பணும்'னு கண்ணாடி முன்ன நின்னு உத்துப் பார்க்கறேன். புருவத்துக்கு கீழ புல்லு முளைச்சது மாதிரி கரும்புள்ளி. தாவங்கட்டையில பச்சை பச்சையா பூனை முடி. கையெல்லாம் புள்ளிமான் மாதிரி ஓட்டை. 'அரிதாரம் ஆட் டம் கண்டுடுச்சிடியோ'னு உள் மனசு உரக்க சத்தம் போட, காணச் சகிக்காம டியூட்டி முடிச்ச கையோட பியூட்டி பார்லருக்கு ஓட ஆரம்பிச்சுட்டேன்.

மாசம் ஆயிரத்தை பார்லர்ல அழகுக்காக அழுதிட்டு, சொந்த செலவுக்குனு சில ஆயிரத்தை எடுத்துட்டு, மிச்சசொச்சத்தை அப்பா, ஆத்தாவுக்கு அனுப்பிட்டு... வாழ்க்கை ஓடிட்டிருக்கு.

நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகணும்... நான் போட்டிருக்கறது நாகரிக வேஷம்!

- எம்.ராஜேஸ்வரி, திருப்பூர்

ஆர்ட் ஆஃப் லிவிங்!

கீழ் வானம் சிவந்திருந்த ஒரு அழகான அந்திப் பொழுது அது... உலகத்துக்கு! எனக்கு... அதை ரசிக்கக்கூட நிமிடங்கள் போதாத, பால் காய்ச்சி, காபி போட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து, ஸ்நாக்ஸ் எடுத்து வைத்து, வீட்டைப் பெருக்கி, விளக்கு ஏற்றி என... எனக்கான வேலைகள் நிறைந்த இன்னொரு மாலையாகத்தான் இருந்தது... சி.டி. பிளேயரில் கசிந்து வந்த அந்தப் பாடலைக் கேட்கும்வரை!

அவள் blogspot.com

"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை...
நீருக்குள் மூழ்கிடும் தாமரை..."

இப்போதைய திரைப்பாடல்களின் மீது ஈடுபாடு இல்லாமல் போன என் ஃபார்ட்டி ப்ளஸ் மனசை, அந்த இசையும் வரிகளும் காற்றில் ஏந்தின. சட்டென்று மாறியது என் வானிலை. பாட்டில் தவழ்ந்த அந்த மைல்ட் ரொமான்ஸ், ரசிக்க வைத்தது... இறுதி வரிவரை. மனதுக்குள் ஏதோ ஒரு திடீர் உற்சாகம் ஊற, மாலையின் மீதிருந்த அலுப்பை அகற்றி, 'வேலையெல்லாம் கிடக்கட்டும். இந்த முப்பது நிமிஷம் எனக்கே எனக்கு!' என்று கையில் சூடான டீ கோப்பையுடன், செவ்வெயில் இறங்கிக் கொண்டிருந்த ஜன்னல் அருகில் அமர்ந்தேன். வெளிநின்ற மரக்கிளையில் எனக்கு முன்னதாகவே அமர்ந்திருந்தது ஒரு சிட்டுக்குருவி. பிளேயரில் அடுத்த பாட்டு தவழ்ந்தது.

"அனல் மேலே பனித்துளி...
அலைபாயும் ஒரு கிளி..."

கீழ் வானம் சிவந்திருந்த ஒரு அழகான அந்திப் பொழுது அது... எனக்கும்!

- ஏ.ஆனந்தி, தஞ்சாவூர்

வேண்டும்... அரபு தண்டனை!

"என் குழந்தைக்கு வலிக்காம, உடலை வெளியே எடுங்க டாக்டர்" என்று சடலமாகி சவக்குழிக்குள் போன தன் பிஞ்சு மகள் கிருத்திகாவை, போஸ்ட்மார்ட்டத்துக்காக தோண்டியெடுத்தபோது, அவளு டைய பெற்றோர் இதயம் வெடிக்க கதறித் துடித்த இந்தக் காட்சி... கல் நெஞ்சையும் கரைய வைத்துவிடும். கிருத்திகாவின் மரணம் காலாவதியான மருந்துகளால் நடந்த கொடுமை. எத்தனை உயிர்கள் இப்படி கொடூரமாக பறிபோயினவோ தெரியாது. ஆனால், கிருத்திகாவின் மரணம்தான், 'போலி மருந்து - மாத்திரை மாஃபியா கும்பல்' என்ற ஒன்றை அடையாளம் காட்டி, தற்போது வேட்டை ஆரம்பமாகியிருக்கிறது.

அவள் blogspot.com

ஒரு வெண்டைக்காயை ஒடித்துப் பிஞ்சாக இருக்கிறதா என்று பரிசோதித்து வாங்கும் நம்மில் பலர், மருந்து - மாத்திரைகளில் 'எக்ஸ்பைரி டேட்' பார்ப்பதில்லை. ஆனால், அப்படியெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு படிப்பவர்களையும் அல்லவா ஏமாற்றியிருக்கிறது போலி மருந்து - மாத்திரை மாஃபியா. இவர்களையெல்லாம், அரபு நாடு போல நடுரோட்டில் தண்டித்தால்தான்... பஞ்சமாபாதகத்தையும் விட கொடூரமான இதுபோன்ற காரியங்களை செய்ய யாரும் துணிய மாட்டார்கள்.

- வி.ஜானகி, சென்னை.

'பஞ்ச்'வர்ணம்!

போலி மருந்து, மாத்திரை தயாரிக்கும் கும்பல் பிடிபட்டது - செய்தி

''அடப்பாவிகளா... நீங்க மருந்து, மாத்திரைகள்ல போட்டிருக்கற expiry date, மருந்துக்கா... அதைச் சாப்பிடற நோயாளிக்கா?''

- ஆர்.ரத்தினமாலா, ஹைதராபாத்

அவள் blogspot.com
 
அவள் blogspot.com
அவள் blogspot.com
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism