நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது... 'ஹெல்த்' தொடங்கி... 'சுற்றுலா' வரை தொடர் ஓட்டமாக 15 சிறப்பிதழ்களை ஒரே மூச்சில் கடந்திருக்கிறோம். 'வாசகிகளுக்குப் பிடிக்கும்' என்ற நம்பிக்கையோடு நாங்கள் அடியெடுக்க... 'சபாஷ்', 'சூப்பர்' என்றெல்லாம் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் உற்சாகமூட்ட... துளிகூட களைப்பில்லாமல் தொடர்ந்த அந்த ஓட்டம்... அடுத்தகட்டமாக 'தொடர்களின் ஓட்டமாக' இங்கே வடிவெடுக்கிறது!
பிரசவம்... இப்போதெல்லாம் மிகவும் கஷ்டமான ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ''காலகாலமாக, மரத்தடியிலும், புல்வெளியிலும், லாந்தர் விளக்கு வெளிச்சத்திலும் இயற்கையாக நடந்த பிரசவத்தின் மூலமாக ஜனித்தவர்களின் தலைமுறைகள்தானே நாம். அதை எப்படி மறந்து போனோம்? நமக்கு மட்டும் 'சிசேரியன்' உட்பட பல ரூபங்களில் இந்தப் பிரசவம் கஷ்டமானதாக ஏன் மாற வேண்டும்?'' என்று கேட்கும் மனநல - பிரசவ கால ஆலோசகர் ரேகா சுதர்சன், 'இனி எல்லாம் சுகப்பிரசவமே!' என்று பாரம்பரிய பாதைக்கு இழுக்கிறார்.
''வேலை வாய்ப்புகள் கொட்டித்தான் கிடக்கின்றன... ஆனால், அவற்றை நாம் தட்டிச் செல்வதற்கான வழிமுறைகள்தான் முக்கியம். அது ஒன்றும் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை கடந்து அடையக்கூடிய 'ஜீபூம்பா' அல்ல... நீங்கள் மனது வைத்தாலே எட்டிவிடக்கூடியதுதான்'' என்றபடி 'ஆட்கள் தேவை' போர்டு மாட்டுகிறார் மனிதவள மேம்பாட்டு நிபுணர் 'கெம்பா' கார்த்திகேயன்.
எதுவுமே பூஜ்யத்தில்தான் தொடங்கும். ஆனால், வாழ்க்கை? 'அப்படி முடியாது' என்றுதானே சொல்வீர்கள். ஆனால், ''இதோ... நாங்கள் பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்தவர்கள்தான். இன்று ராஜ்ஜியம் முழுக்க வியாபித்துவிட்டோம்'' என்று தன்னம்பிக்கை பொங்க கட்டை விரல் உயர்த்தும் இந்த மனுஷிகள், தாங்கள் கடந்து வந்த பாதை பேசுவதோடு... உங்களுக்கும் பாதை காட்டப் போகிறார்கள்!
பாராட்டு, அங்கீகாரம் போன்றவற்றுக்கு ஏங்காத மனதுகளே பெரும்பாலும் இருக்க முடியாது. ஆனால், அதற்கு துளிகூட வாய்ப்பில்லை எனும்போது, அந்த மனது வறண்டுதான் போகும். ஆனால், 'நீ நதி போல ஓடிக் கொண்டிரு...' என்று வாழும் உதாரணங்களோடு உங்களை மெருகேற்ற வருகிறார் இலக்கிய உலக பெண்மணி பாரதி பாஸ்கர்.
இவற்றோடு... உங்களுக்காகவும் ஒரு களம் திறக்கப்படுகிறது. 'அவள்.blogspot.com...' உரிமைக்குரல், உதவிக்கரம், உரத்த சிந்தனை, உற்சாக ஊற்று... என்று நீங்கள் பதிவு செய்ய நினைக்கும் பக்குவமான விஷயங்கள் அனைத்துக்குமான ராஜபாட்டை இது. உங்களின் உணர்ச்சிகரமான எழுத்துக்களை இங்கே பதிக்கலாம்!
பிஞ்சுக் குழந்தை, தனக்கு என்ன வேண்டும் என்று கேட்பதில்லை. தானே உணர்ந்து கொடுத்து விடுவாள் தாய். புத்தம் புதிய தொடர்பகுதிகள் இங்கே விரிவதும் அத்தகைய தாய்மை உணர்வோடுதான்.
என்றும் தொடரட்டும் இந்த பந்தம்!
உரிமையுடன் உங்கள்
|