மண வாழ்க்கை தொடங்கி, மனதுக்கேற்ற கணவன் அமைந்தபிறகு அந்தப் பெண் மட்டுமல்ல... இரு குடும்பத்தினரும் எதிர்பார்க்கிற முக்கிய விஷயம்... குழந்தை!
கிராமத்தில், வயல்காட்டு வேலை செய்யும் பாமரப் பெண்ணானாலும் சரி, சிட்டியில் ஐ.டி. பார்க் நுழையும் ஹைடெக் பெண்ணானாலும் சரி... 'பிரசவம் நல்லபடியா அமையணும்; குழந்தை சிரமமில்லாம பிறக்கணும்’ என்று எல்லா பெண்களுக்குமே மனதுக்குள் ஒரு சின்ன வேண்டுதல் உருண்டு கொண்டேதான் இருக்கும். இதை, ஒருவித பயம் என்றுகூட சொல்லலாம். பிரசவம் பற்றிய இயல்பான இந்த பயம், வயிற்றிலிருக்கும் பிள்ளையுடன் சேர்ந்து வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது... காலம் காலமாக! ஆக, இந்தப் பயம் சர்வ சாதாரணமானதுதான்!
ஆனால், சமீப வருடங்களாக கிளம்பி நிற்கும் இன்னொருவித பயம்தான் பூதாகாரமாக ஆட்டிப் பார்க்கிறது பெண் இனத்தை. அது... சிசேரியன்! ஆம்... இப்போதெல்லாம் சிசேரியன் என்பது சகஜமாகிவிட்டது. அதன் சதவிகிதமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதற்கு சொல்லப்படும் காரணங்களில் முக்கியமாக காட்டப்படுவது... 'வாழ்க்கை முறை மாறிவிட்டது. பெண்கள் முன்புபோல பெரிதாக உடல் வருத்தி வேலை செய்வதில்லை' என்பதுதான். இது ஒருவிதத்தில் உண்மைதான்.
அதேபோல, நேரம்-காலம், சாஸ்திர-சம்பிரதாயம் என்ற பெயரால், 'நல்ல நட்சத்திரத்தில் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்' என்று சொல்லிக் கொண்டு, தாங்களாகவே சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துவோரும் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அடுத்து, 'அம்மாடி... என்னால அந்த வலியையெல்லாம் தாங்க முடியாது. சிசேரியன்தான் நமக்கு சரிப்பட்டு வரும்' என்றபடி வேண்டி விரும்பும் தாய்க்குலங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது.
இதையெல்லாம் தாண்டி, வேறு சிலபல காரணங்களும் இருக்கின்றன... இந்த 'சிசேரியன்' மேனியா தொடர்வதற்கு. சிசேரியன் என்பதே... பிரசவத்தின்போது தாய் அல்லது சேய் ஆகியோரின் உயிருக்கே ஆபத்து வரலாம் என்று நூற்றுக்கு நூறு சதவிகிதம் டாக்டர் உறுதியாக நம்பும் நிலையில், மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இத்தகைய தேவையற்ற சிசேரியன்கள், வாழ்க்கை முழுவதுமே அந்தத் தாயை ஒரு நோயாளியாகவே உணர வைத்துவிடும் என்பதை பெரும்பாலானவர்கள் யோசித்துப் பார்ப்பதே இல்லை என்பதுதான் சோகம்.
இதை நினைக்கும்போது... அரை டஜன் குழந்தைகளை அலட்டிக் கொள்ளாமல் பெற்றெடுத்த பாட்டிகளும், கால் டஜன் குழந்தைகளை களைப்பே தெரியாமல் பெற்றெடுத்த அம்மாக்களும் நம் கண் முன் விரிந்து சிரிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிக்கல்கள் ஏதுமில்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த கிராமத்து ஆயாக்கள்... முன்பைவிட, பலமடங்கு மரியாதை கூடியவர்களாகிறார்கள்.
சரி, அப்படியென்றால் சிசேரியன் என்பதே தவறா?
அறிவியல் வளர்ச்சியின் ஒரு அங்கம்தான் சிசேரியனும். அது உயிர்காக்கும் ஓர் அற்புத ஆயுதம். ஆனால், எடுத்ததற்கெல்லாம் அதைப் பயன்படுத்துவதுதான் தவறு.
இதைவிட மிகப்பெரிய தவறு... 'சிசேரியன் செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும்' என்கிற உடல்நிலைக்கும், மனநிலைக்கும் பெண் வர்க்கம் பயணித்துக் கொண்டிருப்பதுதான்.
நாகரிக வளர்ச்சி, நவநாகரிக வாழ்க்கைச் சூழல், வேலைச் சூழல், வீட்டுச் சூழல், கடமைகள் என்று பலவும் வந்து அழுத்துவதால், இன்றைக்கு ஒரு பெண்... நார்மலான ஒரு பெண்ணாக இருக்க முடிவதில்லை. சொல்லப்போனால்... மனதளவில் அழுத்தம் கூடிப்போனவளாகி விடுகிறாள். ஆனால், அன்றைய கிராமத்துப் பெண், இதைவிட அழுத்தம் கூடிப்போனவளாக இருந்தாள் என்பதை மறந்துவிடக்கூடாது. அன்றைய சூழலில் அவளுக்கு, இன்றுபோல ஏகப்பட்ட 'கடமை'கள் இல்லைதான். ஆனால், வீட்டைப் பார்ப்பது, சமையல் செய்வது, தோட்டத்தைப் பார்ப்பது, மாடுகளைப் பராமரிப்பது, வயல்வேலைகளைப் பார்ப்பது, மாமனார், மாமியார் ஆகியோரை பராமரிப்பது என்று உடல் ரீதியில் ஏகப்பட்ட வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.
அத்தனைக்கு நடுவேயும்... அவள் மட்டும் 'சுகப்பிரசவம்' அனுபவிக்க... நாம் மட்டும் சிசேரியன் நோக்கி துரத்தப்படுகிறோம்!
எதனால் வந்தது இந்த வம்பு... இதிலிருந்து தப்பிப்பது எப்படி... அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும்... என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு நடைபோட ஆரம்பித்தால், இனி, எல்லா பிரசவங்களும் சுகப்பிரசவங்களே!
அவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளும் பாதையில் கொஞ்சம் பயணிக்கலாம் வாருங்கள்!
- கரு வளரும்...
குழந்தை பெறத் தயாராகும் தம்பதிக்கு...
| |