- மனைவிமார்கள் பலரும் என்னிடம் கோபமாகக் கேட்கும் கேள்வி இது. இந்தக் கோபத்துக்கு என்ன தீர்வு?
'பெண்களின் கூந்தலுக்கு இருக்கும் மனம் இயற்கையானதா, அல்லது செயற்கையானதா?' என்று மன்னன் பாண்டிய நெடுஞ்செழியனுக்கு ஏற்பட்ட சந்தேகம் போலவே, வேறு ஒரு ராஜாவுக்கு வேறு ஒரு சந்தேகம் எழுந்தது. 'மகாராணியின் ஆழ் மனதில் என்ன இருக்கிறது?' என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினான் அவன். சரியான பதிலைக் கண்டுபிடித்துச் சொல்கிறவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்றும் அறிவித் தான்.
கிட்டத்தட்ட 'திருவிளையாடல்' போலவே... ஏழைப் பெண் புலவர் ஒருவர், "அய்யோ... ஒரு காசா இரண்டு காசா... ஆயிரம் பொற்காசாச்சே...'' என்று கோயில் மண்டபத்தில் நின்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தபோது, சூனியக்காரக் கிழவன் ஒருவன், பெண் புலவர் முன்பு வந்தான்.
"என்ன பெரிய புடலங்காய் கேள்வி. பெண்ணின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதுதானே..? இந்தக் கேள்விக்கான விடை எனக்குத் தெரியும். அதை நீ ராஜாவிடம் போய் சொன்னால், உனக்கு பொற்காசுகள் கிடைக்கும். ஆனால், அதை உனக்குச் சொல்வதால், எனக்கென்ன லாபம்?'' என்று கேட்டுவிட்டு, ''நீ என்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடு. நான் உனக்கு பொற்காசுகளை பரிசாக வெல்லக்கூடிய பதிலைச் சொல்கிறேன்!'' என்றான்.
அந்த இளம் கவிதாயினிக்கு வேறு வழி தெரியவில்லை. இறந்துபோன தந்தையால் ஏற்பட்ட கடன் தொல்லை கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்ததால், அந்தக் கிழவனின் யோசனைக்கு சம்மதம் தெரிவித்தாள். இப்போது அந்தக் கிழவன், மன்னனின் சந்தேகத்துக்கான பதிலைச் சொல்லத் துவங்கினான்.
"நன்றாக யோசித்துப் பார். 'இந்த மாதிரி மட்டமான புத்தகங்களை எல்லாம் படிக்காதே', 'இதைச் சாப்பிடாதே', 'அந்தப் பையனோட பேசாதே', 'இந்த டிரெஸ் போடாதே', 'இவங்க வீட்டுக்குப் போகாதே' என்று பிறந்ததிலிருந்தே உணவு, உடை, நண்பர்கள், புத்தகம், படிப்பு, வாழ்கைத்துணை என்று எதையுமே ஒரு பெண் அவள் விருப்பத்துக்கு ஏற்ப பெரும்பாலும் இங்கு தேர்ந்தெடுக்க முடிவதில்லை. திருமணத்துக்குப் பிறகும் இதேபோன்ற சூழ்நிலையில்தான் அவள் தொடர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள். அதனால்... ஒரு பெண், தான் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்கும் உரிமைக்குத்தான் ஆசைப்படுகிறாள். அந்த நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாள். இதுதான் ஒவ்வொரு பெண்ணின் அடிமனதிலும் இருக்கும் ஆசை!''
|