Published:Updated:

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

ஃபாரின் வேலை அருளும் 'பாஸ்போர்ட்' பாலாஜி!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

ஃபாரின் வேலை அருளும் 'பாஸ்போர்ட்' பாலாஜி!

Published:Updated:

 

வெளிநாட்டுக்குச் செல்ல வாய்ப்பு வந்திருக்கிறது. விசாவுக்கு எங்கு போக வேண்டும்?

''முதல்ல சில்குர் போய், 'பாஸ்போர்ட் பாலாஜி'ய கும்பிடுங்க. அப்புறம் எம்பஸிக்குப் போங்க. விசா ஈஸியா கிடைக்கும்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
 

- ஹைதராபாத் மாநகரம் மற்றும் அதையட்டிய பகுதிவாசியாக இருந்தால், நீங்களும் சட்டென்று இப்படித்தான் சொல்வீர்கள்!

விஷயம் நம் காதுகளுக்கு வந்ததுமே... 'அட... விசாவுக்கும் ஒரு கடவுளா..?!' என்று ஆர்வமாகிப் பயணப்பட்டோம்! ஹைதராபாத் நகரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சில்குர். இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனை, 'சில்குர் பாலாஜி' என்றால் தெரியாமல் போகலாம். ஆனால், 'பாஸ்போர்ட் பாலாஜி', 'விசா காட்' என்றால், அமெரிக்காவின் சிலிக்கன்வேலி வரை (கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பல நிறைந்திருக்கும் ஏரியா) மிகவும் பிரபலம்.

'படிப்பு, வேலை, தொழில் என வெளிநாட்டுக்குச் செல்லவேண்டி வந்தாலும், விசா சிக்கல்கள் வடிந்தோடவும்... ஒருமுறை சில்குர் போய், அங்குள்ள வெங்கடேசபெருமாளை தரிசித்து வந்தால் போதும்... கண்டிப்பாக வேண்டுதல் நிறைவேறும்'' என்கிறார்கள் 'பாஸ்போர்ட் பாலாஜி'யின் மகிமை அறிந்தவர்கள்.

அந்தச் சின்ன ஊரிலிருக்கும், அந்த சிறிய கோயிலின் மண்டபத்தைத் தாண்டி உள்ளே போனால்... அப்பப்பா! பிரமாண்ட பக்தர்கள் கூட்டம் பிராகாரத்தை வலம் வருவது பிரமிக்க வைக்கிறது.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

''முதல் முறை கோயிலுக்கு வர்றப்போ, பாலாஜியை வேண்டிட்டு 11 முறை பிராகாரத்தை வலம் வரணும். அப்புறம் வேண்டுதல் நிறைவேறினதும் 108 சுற்றுகள் சுற்றணும். காசிக்குப் போனா மோட்சம் கிடைக்கும், திருப்பதிக்குப் போனா திருப்பம் கிடைக்குங்கற மாதிரி, 'சில்குர் போனா விசா கிடைக்கும்'னுதான் இத்தனை கூட்டமும் இங்க சுத்திட்டு இருக்கு!'' என்று விளக்கினார் தன் பணி ஓய்வுக்குப் பின், இங்கேயே வந்து கோயில் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பக்தர் சுப்பிரமணிய ராவ் சர்மா.

மூலவர் சந்நிதிக்குள் நாம் நுழைய, அழகிய வடிவில் பெருமாள் (சுயம்பு மூர்த்தி), பத்மாவதி தாயாருடன் காட்சி கொடுத்தார். ஸ்ரீதேவி, பூதேவியும் உடன் இருக்கிறார்கள்.

சரி... இந்தக் கோயில் உருவான கதை மற்றும் இந்த 'பாஸ்போர்ட்' பிரசித்தி கதையைத் தெரிந்து கொள்வோமா?! கோயிலை ஆறு தலைமுறைகளாக பராமரித்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவரும், கோயிலின் கன்வீனருமான கோபாலகிருஷ்ணன் அதனை விவரித்தார். இவருடைய குடும்பம் ஆறு தலைமுறைக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்திலிருந்து இடம்பெயர்ந்த குடும்பம்.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

''சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், ஹைதராபாத் அருகில் உள்ள ஒரு கிராமத்திலிருந்த பெரியவர் ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் திருப்பதிக்குப் போய் பெருமாளைத் தரிசிப்பதை வழக்கமாகக்கொண்டிருந் தார். ஒரு தடவை அப்படி அவர் புறப்பட்டபோது, அதை அவரால் தொடர முடியவில்லை. வாகன வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் முதுமை அவரை முடக்க, ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாமல் சோர்வாகி மயக்கமடைந்தார். அவர் கனவில் இறைவன் தோன்றி, 'எதற்கு என்னைத் தரிசிப்பதற்கு அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வருகிறாய்..? இதே ஊரில் புதர் மண்டி இருக்கும் இடத்தில் நான் தோன்றுவேன். என்னை பிரதிஷ்டை செய்து வழிபடு' என்று கூறி மறைந்தார். பதறியபடியே மயக்கத்திலிருந்து மீண்ட அந்தப் பெரியவர், ஊர் மக்களின் உதவியுடன் அங்கிருந்த புதர்களை அகற்றும்போது, கடப்பாறையில் ஏதோ ஒன்று இடற, சுயம்புத் திருமேனியாக பத்மாவதி சமேதப் பெருமாள் விக்ரகம் இருந்தது. ஆனந்தக் கண்ணீருடன் அதைத் தாவி எடுத்தவர், அங்கேயே கொட்டகை போட்டு சிறு கோயிலைக் கட்டினார். அந்த ஊர்தான் இந்த சில்குர். இப்போதும் இந்தப் பெருமாள் விக்ரகத்தின் நெற்றியில் கடப்பாறை பட்ட தழும்பு உள்ளது!'' என்று மெய்சிலிர்த்த கோபால கிருஷ்ணன், 'பாஸ்போர்ட் பாலாஜி' என இந்த இறைவன் புகழ் பெற்ற கதையையும் விளக்கினார்.

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

''பதினைந்து ஆண்டுகளுக்கு முன், இந்தக் கோயிலுக்கு வந்த ஓர் இளைஞர், பதினோரு முறை பிராகார வலம் வந்து பிரார்த்தித்து, 'சாமீ... நான் வெளிநாட்டு வேலைக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கேன். எனக்கு நல்லபடியா வேலை கிடைக்கணும். என் வேண்டுதல் நிறைவேறினா நான் 108 சுற்றுகள் சுத்தறேன்' என்று மனமார வேண்டிக் கொண்டார். பத்து நாட்கள் கழித்து மிகவும் மகிழ்ச்சியோடு வந்த அந்த இளைஞர், தனக்கு இறைவனின் அருளால் வெளிநாட்டு வேலை கிடைத்துவிட்டதாகவும், அடுத்த வாரமே வெளிநாட்டுக்குக் கிளம்பவிருப்பதாகவும், அதனால் வேண்டுதலை நிறைவேற்ற வந்திருப்பதாகவும் கூறி, பிராகாரத்தை 108 முறை வலம் வந்தார். இந்த விஷயம், அவர் வாயிலாகவும், மற்றவர்கள் மூலமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்களிடம் பரவி, இவ்வளவு பெரிய கூட்டம் கூடுமளவுக்கு கோயிலின் புகழ் பரவிவிட்டது'' என்றார்!

இந்த பாஸ்போர்ட் பாலாஜியை தரிசித்து பலன் பெற்ற ஆயிரக்கணக்கானோர் இப்போது அமெரிக்காவில் பணிபுரிகின்றனர். அங்கு இருக்கும் அநேக தென்னிந்தியர்கள் இந்தக் கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' எனும் புகழ்பெற்ற ஆங்கிலப் பத்திரிகையில்கூட, 'விசா காட்' என்று இந்த பாலாஜி பற்றி செய்தி வந்துள்ளது!

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜெய்கிஷனின் மனைவி சரிதா என்பவர் கோயிலை வலம் வந்தபடி இருக்க... அவரிடம் பேசிய போது, ''என் கணவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்துட்டு இருந்தப்போ, 'பாஸ்போர்ட் பாலாஜி' பத்தி கேள்விப்பட்டு, இங்க வந்து வேண்டிக்கிட்டார். அடுத்த வாரமே... வெளிநாட்டு

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!

வேலை, சென்ட்ரல் கவர்மென்ட் வேலைனு ரெண்டு வாய்ப்புகள் ஒரே சமயத்துல வந்துச்சு. இறைவனோட அருளை எண்ணி பூரிச்சு, உடனே சில்குர் வந்து 108 முறை பிராகார வலம் வந்தார். இப்போ அவர் மத்திய அரசோட ரூபாய் நோட்டு அச்சுக்கூடத்தில் வேலை பார்க்கறார். நாங்க மாசம் ஒருமுறையாவது குடும்பத்தோட இங்க வந்துடுவோம். எங்களுக்கு எல்லாமே சில்குர் பாலாஜிதான்'' என்றார் பக்திப் பரவசத்தோடு!

இப்படி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தினம்தோறும் பெரும்கூட்டம் 108 முறை பிராகாரத்தைச் சுற்றுவதால்தான், அடியெடுத்து வைக்க முடியாத அளவுக்கு கோயில் நிரம்பி வழிகிறது. அதுவும்... ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் என்றால், பேட்ச் பேட்ச்சாகத்தான் அனுமதிக்கிறார்கள். முதலில் 54 சுற்றுக்கள் முடித்ததும் ஒரு 'பேட்ச்', பக்கத்து மண்டபத்தில் ஓய்வெடுக்க வேண்டும். அந்தச் சமயத்தில் அடுத்த 'பேட்ச்' சுற்றிக் கொண்டிருக்கும். இவர்கள் ஓய்வுக்குச் சென்றதும், முதல் பேட்ச் வந்து மீதி 54 சுற்றுக்களை நிறைவு செய்யும். இப்படி பல 'பேட்ச்'கள் சுற்றிக் கொண்டிருக்குமாம்.

என்ன... வெளிநாட்டு வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டீர்களா?

எப்படிச் செல்வது?

ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத் சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் மெகந்திப்பட்டணம் போய், அங்கிருந்து மீண்டும் ஒரு பஸ் பிடித்து சில்குர் போகலாம். கோயில் காலை ஆறு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும். தொடர்பு எண் 08413-235932, 235933.

 

கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
 
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
கனவுகளை நனவாக்கும் கடவுள் தரிசனம்!
 
       
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism