17. தண்ணீரில் சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். வெட்டிவேரைப் போட்டு வடிகட்டி குடிப்பதும் குளிர்ச்சி தரும்.
18. இளநீர், மோர், பழச்சாறு அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். பாட்டிலில் அடைக்கப்பட்டு வரும் பானங்களையும், ஐஸையும் தவிர்ப்பது நல்லது.
19. சீப் அண்ட் பெஸ்ட்... எலுமிச்சைப் பழ ஜூஸ். ஒரு பழத்துக்கு அரை லிட்டர் நீர் விட்டு, உப்பு, ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை (ஜீனி பலனைக் குறைக்கும்) கலந்து ஜூஸ் தயாரித்து வைத்துக் கொண்டு, அவ்வப்போது பருகுங்கள்.
20. கேரட், பீட்ரூட் போன்றவற்றையும் ஜூஸ் போடலாம். இவற்றிலும் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் போடவும். தேங்காய்ப் பால் சேர்ப்பது சிறந்தது.
21. அளவில் சிறியதாக இருந்தாலும் நெல்லிக்கனி வெயிலுக்கு அவ்வளவு உகந்தது. விட்டமின்-சி அதிகமாக உள்ள இந்தக் கனி, வெயிலில் நாம் இழக்கும் எனர்ஜியைத் திரும்பத் தரவல்லது.
22. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, வாழை, திராட்சை, வெள்ளரி என பழக்கலவை (ஃப்ரூட் சாலட்) செய்து, காலை அல்லது இரவில் உண்ணலாம்.
23. வெள்ளரிப்பழம், முலாம்பழம், தர்பூசணி போன்றவை நீர்ச்சத்து நிறைந்த, வெயிலுக்கு ஏற்ற பழங்கள். அதற்காகவேதான் வெயில் காலங்களில் இவை விளைகின்றன. உடலில் உள்ள நீர்த்தன்மையை சமநிலையில் வைத்துக் கொள்ள இந்தப் பழங்கள் உதவும். இவற்றை நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஜூஸ் போட்டும் சாப்பிடலாம்.
24. சுரைக்காய் வெயிலுக்கு மிகவும் நல்லது. ஒரு சுரைக்காய், ஒரு குடம் நீருக்குச் சமம். இதனை சாம்பார் அல்லது கூட்டாகச் சமைத்து உண்ணலாம். சௌசௌ, பூசணி, முள்ளங்கி போன்றவையும் அப்படியே!
25. இது மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றுக்கான சீஸன். விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் ஆபத்துதான். வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். எனவே, அளவாக சாப்பிடுவது முக்கியம் - குறிப்பாக, குழந்தைகளும் வயதானவர்களும்!
|