கொளுத்தும் கோடை வெயிலால் நம் உடம்பிலும் வெப்பத்தின் தாக்கம் எதிரொலிக்கும். சிலருக்கு அதிக வியர்வையால் துர்நாற்ற பிரச்னை ஏற்பட்டு, மனதும் உடம்பும் துவண்டுவிடும். இந்தப் பிரச்னைகளையும் வெயிலின் தாக்கத்தையும் விரட்டியடிக்க சில யோசனைகள் இங்கே...
தினமும், காலையில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிக அளவு வெங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம். வெங்காயம், வெங்காயத்தாளை சமைக்காமல் பொடியாக நறுக்கி, சாலடுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
பொதுவாக, வியர்வை அதிகமாக சுரக்கக்கூடிய உடல்வாகு உள்ளவர்கள், 'வெங்காயம் சாப்பிட்டால் உடம்பில் நாற்றம் வீசுமோ..' என்று வெங்காயம் சேர்ப்பதையே தவிர்த்து விடுவதுண்டு. வெங்காயத்தை நறுக்கியதும் தண்ணீரில் அலசிவிட்டு, பிறகு பயன்படுத்தினால் நாற்றம் இருக்காது. வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து பருகுவதும் பலன் தரும். நாள் முழுவதும் குலுமணாலியில் இருப்பதுபோல் உடம்பே குளுகுளுவென இருக்கும்.
எப்போது பார்த்தாலும் அடுப்பங்கரையிலேயே கிடந்து கிறங்காமல்... வாரத்தில் இரண்டு நாட்கள் கிச்சனுக்கு லீவ் விட்டுவிடலாம். அந்த நாட்களில் சமைத்த உணவுக்குப் பதிலாக... கேரட், பீட்ரூட், வெள்ளரி, வெங்காயம், வெண்பூசணி, கோஸ், தக்காளி, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்து, சாலட் போல சாப்பிடலாம். மற்றொரு நாள் இந்தக் காய்கறிகளைத் துருவி, தயிர் சேர்த்து சாப்பிடலாம். இதேபோல் முளைக்கட்டிய பயறு வகைகளையும் ஒரு நாள் சாப்பிடுவதால் நல்ல குளுமை கிடைப்பதுடன் உடம்பை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
|