Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

பிரீமியம் ஸ்டோரி

வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன் !

செக்யூரிட்டி ரசகுல்லா!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

கொல்கத்தாவில் இருந்த நாங்கள், ஒருமுறை சென்னைக் குச் செல்ல ஏர்போர்ட் சென் றோம். 'செக்யூரிட்டி செக்'சமயத்தில் அதற்கு தனது சூட்கேஸ்களை அனுப்பிய ஒருவர், கையில் ஒரு டின் ரசகுல்லாவுடன் நின்று கொண்டிருந்தார். அதனு டன் அவரை உள்ளே அனுப்ப மறுத்து விட்டனர் அதிகாரிகள். அவர்களுடனான வாக்குவாதத்தில் களைத்த அந்த நபர், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ரசகுல்லா டின்னை ஓபன் செய்தார். உள்ளே இருந்த ரசகுல்லாக்களை ஒவ்வொன்றாக விழுங்கினார். மீதமிருந்த இரண்டையும் எனக்கும் என் கணவருக்கும் கொடுத்து விட்டு, காலி ரசகுல்லா டின்னை குப்பை தொட்டியில் வீசிவிட்டு, செக்யூரிட்டி செக்கிங் வாயில் வழியாக 'ஹாயா'க நடந்தார்.

தெனாலிராமன், 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்'என்றதற்கு இப்படியும் ஒரு அர்த்தமோ?! என்று சிரித்துக்கொண்டே அந்தச் சம்பவத்தை ரசித்தோம்!

- மஞ்சு வாசுதேவன்,
நவி மும்பாய்

சாலையில் காத்திருக்கும் எமன்!

சென்னை பல்கலைக்கழகத்தில் நான் ஆசிரியராக இருந்த நேரம் அது. ஒரு நாள், சாலை வெறிச்சோடி கிடந்தபோதும், 'ஸீப்ரா கிராஸிங்'வழியாக ரோட்டை கடந்தேன். என்னைப் பார்த்த என் மாணவர் ரவி, ''என்ன மேடம்... இவ்ளோ நேர்மையா டிராஃபிக் ரூல்ஸை கடைபிடிக்கறீங்க...?''என்றார் சிரிப்புடன்.

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

''எப்பவுமே அப்படித்தான்''என்றேன் பதிலுக்கு ஒரு சின்ன சிரிப்புடன்.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், ரவி முதுநிலை கல்விக்குப் பின் ஆசிரியர் பயிற்சியில் தேர்வு பெற்று, ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு இருப்பதாக அறிந்தேன். சில நாட்களிலேயே ரவி பற்றிய அந்த அதிர்ச்சி செய்தியும் என்னை வந்து சேர்ந்தது. தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்ற ரவி, சாலையில் தாறுமாறாக கடந்தபோது, லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துபோனார் என்பதைக் கேட்டு வேதனையில் துடித்தேன். அநாதரவாக நிற்கும் அவருடைய மனைவி, குழந்தைகளை நினைக்க நினைக்க நெஞ்சு பதைத்தது!

இது ஒரு ரவியின் கதையல்ல... சாலை விதிகளை துச்சமாக நினைத்து உயிரிழக்கும் பல ரவிகளுக்கான வேண்டுகோள், எச்சரிக்கை!

- இரா.பர்வதம், சென்னை-41

அம்மா ராசி கெட்டவ... மகள் ராசியானவ?!

என் தோழிக்கு திருமணமாகி ஆறே மாதத்தில் கணவன் இறந்துவிட, கர்ப்பிணி என்றுகூட பாராமல், 'ராசி கெட்டவ'என்று வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர் புகுந்த வீட்டினர். ஆனால், பிறந்த வீட்டில் அவளுக்கு முழு ஆதரவும், ஆறுதலும் கிடைக்க, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மகள் பிறந்த நேரத்தில் இவளுக்கு வங்கி வேலையும் கிடைக்க, இப்போது தன் பதினேழு வயதுப் பெண்ணுடன் மரியாதையான ஒரு வாழ்க்கை வாழ்கிறாள் தோழி.

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

இத்தனை நாள் இவள் இருக்கிறாளா, செத்தாளா என்று கூட அக்கறைப்படாத அவளுடைய மாஜி புகுந்தவீட்டார், இப்போது இவள் 'நல்ல'நிலையில் இருப்பது... அழகான மகள் இருப்பது... போன்ற தகவலை அடுத்து, இறந்துபோன கணவரின் அக்கா மகனுக்கு பெண் கேட்டு வந்தனர்.

பகைவரைக்கூட மன்னித்து ஏற்கும் குணம்கொண்ட என் தோழி, வீட்டுக்குள் அழைத்து உபசரிக்க, தோழியின் மகளோ வெகுண்டு எழுந்துவிட்டாள். இத்தனை வருடங்களாக அவள் அம்மாவை ஒதுக்கியதற்கு 'சுளீர்'வார்த்தைகளால் நியாயம் கேட்டவள், ''என் முகத்தைக்கூட நீங்க பார்க்கக்கூடாது''என்று ரூமுக்குள் இருந்தபடியே பேசி வெளியேற வைத்தாள்!

அதுதான் சரியெனப்பட்டது எனக்கு! கூடவே, இன்றைய இளைய சமுதாயத்தின் மீது மரியாதையும் வந்தது!

- அ.வள்ளி, வேலூர்

ஆடையில் கவனம் அம்மாமார்களே!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

சமீபத்தில் எங்கள் காலனி ஆண்டு விழாவில், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் பத்து வயதுப் பெண் குழந்தை குத்தாட்டம் போட மேடையேறியது. இன்றைய குழந்தைகள் போல பத்து வயதிலேயே மீறிய வளர்ச்சியுடன் இருந்த அதன் ஆடையோ சினிமா ஹீரோயின்களின் ஆடைபோல மிகவும் சிக்கனமாக இருக்க, பார்வையாளர்களுக்கு ஒருவித அசௌகர்யம். போதாக்குறைக்கு, குழந்தை குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போதே அதன் ஆடை வேறு கழன்று விழப்போக, வெட்கத்துடன் மேடையைவிட்டு இறங்கிய அந்தக் குழந்தைக்கு, அதன் ஆடையை 'பின்'செய்துவிட்டு, மீண்டும் விடாமல் மேடையேற்றினார் அதன் அம்மா! குழந்தை ஆடி முடிக்கும் வரை அதன் ஆடை எதுவும் நழுவிவிடாமல் இருக்க வேண்டுமே என்ற பயத்தில் அதன் ஆட்டத்தைக்கூட ரசிக்க முடியாமல் சங்கடப்பட்டனர் பலரும்.

வளரும் குழந்தைகளுக்கு இதுபோன்ற 'குட்டி'உடைகளை பெற்றோர்கள் தவிர்ப்பது நலம். அல்லது, உள்ளே 'ஷிம்மி'போன்ற ஆடையையாவது போட்டுவிடுவது கட்டாயம்.

புரிந்து கொள்வார்களா அம்மாமார்கள்!

- இ.டி.ஹேமாமாலினி, சென்னை-101

மகளின் உயிர்காத்த தோட்டம்!

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்

எங்கள் தோட்டத்தில் விஷ முறிவுக்கு மருந்து தரும் செடிகளும் மூன்று தலைமுறைகளாக உள்ளன. என் பாட்டி இரவு, பகல் என்று எந்த நேரத்திலும் தேடி வரும் அனைவருக்கும் முதலுதவி செய்வார். ஆனால், என் தந்தைக்கோ இந்தத் தோட்டம் இருப்பதில் ஈடுபாடு இல்லை. பாட்டிதான் போராடிக் காப்பாற்றி வந்தார். இந்நிலையில், ஓர் இரவு என் அக்காவுக்கு தேள் கடித்துவிட, அப்பாவுக்கோ அவ்வளவு பதற்றம். ஆனால், சிறிதும் பதறாமல் அதற்கான பச்சிலைகளப் பறித்து முதலுதவியை பாட்டி கொடுக்க, சிரமத்திலிருந்து மீண்டாள் அக்கா. அன்றிலிருந்து என் அப்பாவுக்கும் தோட்டத்தின் மீது பாசம் பிய்த்துக் கொள்ள, இப்போது கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார். பின்னே... மகளின் உயிர் காத்த தோட்டமல்லவா?

பின்குறிப்பு வீட்டில் செடிகள் வைக்கும் அளவுக்கு இடம் இருக்கப் பெற்றவர்கள்... அலங்காரச் செடிகளைவிட, இப்படிப்பட்ட பயனுள்ள மூலிகைச் செடிகளை வைக்கலாம்தானே?!

- சி.சித்ரா, சென்னை-120

அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
 
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! -வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு